No menu items!

சிங்கத்துடன் செல்ஃபி – விபரீதத்தில் முடிந்த ஆசை

சிங்கத்துடன் செல்ஃபி – விபரீதத்தில் முடிந்த ஆசை

உயிரியல் பூங்காவுக்கு செல்பவர்கள் மிருகங்களை ஆசையாக பார்த்துவிட்டு வருவது அந்தக் காலம். ஆனால் இப்போதெல்லாம் பலரும் மிருகங்களை பார்ப்பதைவிட அதனுடன் செல்ஃபி எடுப்பதில்தான் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அந்த செல்ஃபி மோகத்தால் சில சமயங்களில் உயிர் இழப்புகளும் ஏற்படுகின்றன. அப்படி ஒரு சம்பவம் திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவில் நேற்று நடந்துள்ளது.

திருப்பதி மலையின் அடிவாரத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. பல்வேறு வகையான வன விலங்குகள் இந்த பூங்காவில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிரகலாத் குஜ்ஜார் (34) என்பவர் நேற்று இந்த உயிரியல் பூங்காவுக்கு வந்துள்ளார். உயிரியல் பூங்காவைச் சுற்றிப் பார்த்துள்ள அவர், தனது செல்போனில் அங்குள்ள மிருகங்களை படம் எடுத்திருக்கிறார். சில இடங்களில் மிருகங்களுடன் தன்னையும் சேர்த்து அவர் செல்ஃபி எடுத்துள்ளார்.

மாலை 4 மணியளவில் சிங்கங்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள இடத்துக்கு வந்த அவர், அவற்றை பக்கத்தில் சென்று பார்த்து செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டிருக்கிறார். இதற்காக தடை செய்யப்பட்ட வழியில் சென்ற அவர், ஒரு மரத்தின் வழியாக சிங்கங்களை பராமரிக்கும் இடத்துக்குள் நுழைந்து, செஃபி எடுக்க முயன்றுள்ளார்.

தனது பகுதிக்குள் ஒரு மனிதன் நுழைவதைப் பார்த்த சிங்கம், உடனே அவர் மீது பாய்ந்தது. சிங்கம் தன் மீது பாயத் தயாராவதை பார்த்த குஜ்ஜார், உடனே மரத்தின் கிளையைப் பிடித்து மேலே வர முயன்றுள்ளார். ஆனால் சிங்கத்தைப் பார்த்த பதற்றத்தில் அவருக்கு கையும் காலும் ஓடவில்லை. குஜ்ஜார் மேலே ஏறுவதற்குள் அவர் மீது சிங்கம் பாய்ந்து அவரை கடித்து குதறியது.

இதைப் பார்த்து பார்வையாளர்கள் அலறினர். அவர்களின் அலறல் சத்தத்தைக் கேட்டு பூங்காவின் பாதுகாவலர்கள் ஓடி வந்தனர். சிங்கத்தை கூண்டில் அடைத்துவிட்டு குஜ்ஜாரை மீட்டனர். ஆனால் அதற்குள் குஜ்ஜார் உயிரிழந்தார். இந்த சம்பவம் பற்றி உயிரியல் பூங்கா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போலீஸார் நடத்திய விசாரணையில், உயிரிழந்த பிரகலாத் குஜ்ஜார், ராஜஸ்தானில் உள்ள துரானா என்ற ஊரைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது. டிரைவரான இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன் வீட்டை விட்டு ஓடிவந்தவர் என்றும், மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. காவலரின் எச்சரிக்கையை மீறி, அவருக்கு தெரியாமல் குஜ்ஜார் சிங்கத்தின் இருப்பிடத்துக்கு சென்றதாக பூங்காவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆந்திராவில் உள்ள உயிரியல் பூங்காவில் இதுபோன்ற விபத்து நடப்பது இது 2-வது முறையாகும். இதற்கு முன் கடந்த நவம்பர் மாதத்தில் விசாகபட்டினத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் நடந்த விபத்தில் கரடி ஒன்று அங்கிருந்த பணியாளரை கொன்றிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...