முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாசிற்கு கீழமை நீதிமன்றம் அளித்த 3 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா இன்று தீர்ப்பு வழங்கினார். ராஜேஷ் தாஸின் மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்தார். முன்னாள் செங்கல்பட்டு எஸ்பி கண்ணனுக்கு விதிக்கப்பட்ட ரூ.500 அபராதத்தையும் நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது.
சில்மிஷ ஐபிஎஸ் என்ன செய்தார்? ஏன் மூன்றாண்டு சிறை தண்டணை?
2020 மார்ச் மாதம் கொரோனா நம்மை ஆக்கிரமித்த காலக்கட்டத்தில் ஒரு முகத்தை தினமும் தொலைக்காட்சியில் பார்ப்போம். கொரோனா பாதிப்பு எங்கெல்லாம் என்ற விவரங்களை தருவார். அப்போது தமிழ்நாட்டு சுகாதாரத் துறை செயலராக இருந்த பீலா ராஜேஷ் ஐஏஎஸ்தான் அந்த முகம். இவரது கணவர் ராஜேஷ் தாஸ் ஐபிஎஸ் அதிகாரி. (இப்போது விவாகரத்து நடந்துவிட்டது என்று செய்திகள் சொல்லுகின்றன)
அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் சிறப்பு டிஜிபியாக அதிகாரத்துடன் வலம் வந்தவர் ராஜேஷ்தாஸ் ஐபிஎஸ். அவரது அதிகாரம் மட்டுமில்லாமல் அவரது மனைவி பீலா ராஜேஷ் ஐஏஎஸ் அதிகாரி. இப்படி இரட்டை அதிகாரம் கொடி கட்டிப் பறந்துக் கொண்டிருந்த நேரம்.
2021 பிப்ரவரி மாதம் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்டா மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் செல்கிறார். அப்போது அவரது பாதுகாப்பு பணிகளை மேற்பார்வையிடுவதற்கா சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் செல்கிறார். பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டுவிட்டு திரும்பி வரும்போது பெரம்பலூரில் oரு பெண் ஐபிஎஸ் அதிகாரி அவர் கவனத்துக்கு வருகிறார்.
அவரை தன்னுடைய காரில் ஏறச் சொல்லுகிறார். அலுவல் சம்பந்தமான விஷயங்களை பேச வேண்டும் என்று கூறுகிறார். அந்தப் பெண் அதிகாரியும் மூத்த அதிகாரி அழைக்கிறார் என்று காரில் ஏறிக் கொள்கிறார். தன்னுடைய காரை பின்னால் வரச் சொல்லுகிறார். இருவரும் காரின் பின் இருக்கையில் அமர்ந்துக் கொள்ளுகிறார்கள். கார் மெல்ல நகர்கிறது. அலுவலைத் தவிர மற்றவற்றை பேச ஆரம்பிக்கிறார் ராஜேஷ்தாஸ். பேசும் போது பெண் அதிகாரியைத் தொட்டு தொட்டு பேசுகிறார். அதுவே பெண் அதிகாரிக்குப் பிடிக்கவில்லை.
காரை ஓரமாக நிறுத்தச் சொல்லுகிறார். முக்கியமான விஷயம் பேச வேண்டியிருக்கிறது, வெளியே நில் என்று டிரைவரை தள்ளி நிற்கச் சொல்லுகிறார்.
டிரைவர் இறங்கியதும் உன் குரல் நன்றாக இருக்கிறது ஏதாவது பாடு என்கிறார். தர்மசங்கடமாய் உணர்ந்த பெண் அதிகாரி மறுக்க அவரது கைகளை பிடிக்கிறார், உடல் பாகங்களை தொட முயற்சிக்கிறார். உடனே பெண் அதிகாரி சட்டென்று கீழிறங்கி தன்னுடைய காருக்கு ஓடிச் செல்கிறார்.
பிரச்சினை அத்துடன் நிற்கவில்லை.
சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் குறித்து புகார் கொடுக்க காரில் சென்னை கிளம்புகிறார் அந்த பெண் அதிகாரி. இதைக் கேள்விப்பட்ட ராஜேஷ் தாஸ் அவரைத் தொடர்புக் கொள்கிறார். கெஞ்சிகிறார். ஆனால் பெண் அதிகாரி மசியவில்லை. கார் பயணம் தொடர்கிறது.
அடுத்த முயற்சியில் இறங்குகிறார் ராஜேஷ்தாஸ். பெண் அதிகாரியின் காரை தடுக்க முயல்கிறார். இதற்காக செங்கல்பட்டு எல்லையில் அம்மாவட்ட எஸ்.பி.யின் காவலர் படையுடன் வந்து பெண் அதிகாரியின் கார் தடுக்கப்படுகிறது.
சிறப்பு டிஜிபி பேசுகிறார் என்று பெண் அதிகாரியுடன் போன் கொடுக்கப்படுகிறது. ஆனால் பெண் அதிகாரி பேச மறுக்கிறார். பெண் அதிகாரியின் கார் சாவி பிடுங்கப்படுகிறது.
இந்தக் களேபரங்கள் செங்கல்பட்டு மாவட்ட எல்லையில் காவல் துறையினர் குவிப்புடன் நடக்கிறது.
இத்தனை மிரட்டலுக்கு அஞ்சாமல் அந்தப் பெண் அதிகாரி சென்னை சென்று டிஜிபியை சந்தித்து புகார் அளிக்கிறார்.
அதன் பின் விசாரணைகள், வழக்குகள் என நீண்டு இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது. ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் நடந்து வந்த இந்த வழக்கில் கடந்த வருடம் ஜூன் மாதம் தீர்ப்பு வந்தது.
ராஜேஸ் தாசுக்கு மூன்றாண்டு சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. பெண் அதிகாரியை செஙகல்பட்டில் தடுத்த எஸ்.பி கண்ணனுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலதிகாரி இட்ட கட்டளையை நான் நிறைவேற்றினேன் என்பது அவர் வாதம். அதனால் அபராதத்துடன் தப்பித்திருக்கிறார்.
இந்த்த் தீர்ப்பு வந்ததும் மேல் முறையீடு செய்கிறார் ஐபிஎஸ் அதிகாரி ராஜேஷ் தாஸ். உச்ச நீதிமன்றத்துக்கும் போகிறார்.
முதலில் இந்த தீர்ப்பை எதிர்த்து முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்தார். இந்த விசாரணையை வேறு மாவட்டத்துக்கு மாற்றக் கோரி ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்யது.
இந்த உத்தரவை எதிர்த்தும், வழக்கை கள்ளக்குறிச்சி முதன்மை மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் கொடுக்கிறார். இரண்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
அதனைத் தொடர்ந்து விழுப்புரம் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு விசாரணை நடைபெற்றது. இன்று அந்த வழக்கில் தீர்ப்பு வந்திருக்கிறது.
திங்கள்கிழமை காலை நீதிமன்றம் தொடங்கியதும், ராஜேஷ்தாஸ் தரப்பு வழக்குரைஞர்கள் பழனி, ரவீந்திரன் ஆகியோர் ஆஜராகினார். நிகழ்வு நடைபெற்ற பகுதி கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லைக்குள்பட்டதால், விசாரணையை அந்த மாவட்ட முதன்மை நீதிமன்றத்துக்கு மாற்ற உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருவதால், தீர்ப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரினர்.
இதையேற்க மறுத்த முதன்மை மாவட்ட நீதிபதி ஆர். பூர்ணிமா இந்த மனுவையும், மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்து, தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் வழங்கிய 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டார். இது போல பெண் எஸ்.பி-யை செல்லவிடாமல் தடுத்தாக புகார் கூறப்பட்ட அப்போதைய செங்கல்பட்டு எஸ்.பி கண்ணனுக்கு விதிக்கப்பட்ட ரூ. 500 அபராதத்தையும் நீதிபதி உறுதி செய்து உத்தரவிட்டார்.