No menu items!

புத்தகம் வெளியிட தடை: காரணம் கவர்னர் ரவியா?

புத்தகம் வெளியிட தடை: காரணம் கவர்னர் ரவியா?

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பணிபுரிவோர் அனுமதி பெறாமல் புத்தகம் வெளியிடக் கூடாது என பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது சர்ச்சையாகியுள்ளது. இது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பெரியார் பல்கலைக்கழக பதிவாளரின் இந்த உத்தரவுக்கு என்ன காரணம்?

மனிதனை விலங்குகள் மற்றும் பறவைகளிடம் இருந்து வேறுபடுத்துவது மனிதனின் ஆறாவது அறிவுதான். மற்ற உயிரிகளுக்கு இல்லாத மனிதனிடம் மட்டுமே காணப்படும் ஆறாவது அறிவையே பகுத்தறிவு என்கிறோம். இந்த அறிவு கல்வியறிவு என்றும் மெய்யறிவு என்றும், பொது அறிவு என்றும் பலவாறாக கூறப்படுகிறது. எதுவாக இருந்தாலும் ஒட்டுமொத்தமாக அறிவின் அடையாளமாக இருப்பது நூல்கள். அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டு ஓலைச் சுவடிகளிலிருந்த அறிவு அச்சு வடிவம் பெற்றதையே நாகரிக சமூகமாக வரலாறு குறிப்பிடுகிறது.

நாகரிக சமூகத்தின் இன்னொரு அடையாளம் பல்கலைக்கழகங்கள். பல்கலைக்கழக பேராசிரியர்கள் எத்தனை நூல்கள் வெளியிட்டுள்ளார்கள் என்பதன் அடிப்படையிலேயே சமூகத்தால் மதிக்கப்படுகிறார்கள். கல்லூரி மற்றும் பேராசிரியர் தேர்வுகளிலும் அவர்கள் வெளியிட்டுள்ள நூல்களின் அடிப்படையில் மதிப்பெண்ணும் அளிக்கப்படுகிறது. இதனால் கல்வி, கலாசாரம், அறிவியல், பண்பாடு, வரலாறு, கலை என அனைத்து பிரிவுகளிலும் பேராசிரியர்கள் படைப்புகளை வெளியிட முன் அனுமதி பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை.

இந்நிலையில், இந்த நடைமுறைக்கு நேர்முரணாக சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் உத்தரவு உள்ளது அறிவுத்துறை வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது கருத்துரிமைக்கு எதிரான செயல் என்று கண்டனங்கள் எழுந்துள்ளது.

பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேலு, பல்கலை பணியாளர்கள் நடத்தை விதிகள் தொடர்பாக கடந்த செவ்வாய் கிழமை (6-2-24) சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பின்பற்ற வேண்டிய நடத்தை விதிகளின் அடிப்படையில், பல்கலைக்கழகத்தில் அனுமதி பெறாமல் புத்தகங்கள் வெளியிடவோ சமூக ஊடகங்களில் பேட்டி கொடுக்கவோ கூடாது. மேலும் இதுவரை அனுமதி பெற்று அல்லது அனுமதி பெறாமல் வெளியிட்டுள்ள புத்தகங்கள் குறித்த அனைத்து விவரங்களையும் வரும் 20ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரியார் பல்கலைக்கழகம் சர்ச்சைக்கு உள்ளாவது இது முதல் முறையல்ல. பெரியார் நடத்திய போராட்டங்கள் மற்றும் அதனால் சமூக மாற்றங்கள் ஆகியவற்றைத் தொகுத்து ‘பெரியாரின் போர்க்களங்கள்’ என்ற தலைப்பில் நூல் வெளியிட்டதற்காக  இதழியல் துறை இணைப் பேராசிரியரும் பெரியார் இருக்கையின் பொறுப்பு இயக்குநருமான இரா. சுப்பிரமணி மீது நடவடிக்கை எடுக்க, சேலம் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்தது. இதனையடுத்து பேரா. சுப்பிரமணிக்கு மெமோ வழங்கப்பட்டது. இது சர்ச்சைகளைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

இம்முறை பதிவாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கைக்கும் பேராசிரியர் சுப்பிரமணி எழுதிய ஒரு நூலே காரணம் எனக் கூறப்படுகிறது. ‘மெக்காலே பழமைவாதக் கல்வியின் பகைவன்’ என்னும் நூலை இரா. சுப்பிரமணி வெளியிட்டுள்ளார். குருகுல கல்வி முறையால் பல்லாயிரம் ஆண்டுகளாகக் கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகம் கடந்த இருநூறு ஆண்டுகளில் எட்டியிருக்கும் வளர்ச்சி, மெக்காலேவின் கல்வி முன்னெடுப்புகளால்தான் சாத்தியமானது என்ற வாதத்தை முன்வைக்கிறது இந்த நூல்.

ஆனால், ஆர்.எஸ்.எஸ்.ஸும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியும் குருகுலக் கல்வியே சிறந்தது என்றும், நமது பாரம்பரிய கல்வியை சிதைத்தவராக மெக்காலேவை இகழ்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, மெக்காலே குறித்து நூல் எழுதியது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறும் சுப்பிரமணிக்கு பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர். ஜெகந்நாதன் நோட்டீஸ் அனுப்பினார். தொடர்ந்து அவரை இடைநீக்கம் செய்யவும் முயற்சிகள் எடுக்கப்பட்டது. இதனையடுத்து, ‘பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரல்களைப் பரப்ப முயற்சிப்பதாக’ கண்டனங்கள் எழுந்தது அம்முயற்சி நிறுத்தப்பட்டது.

முன்னதாக, சேலம்‌ பெரியார்‌ பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் தமிழ்நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதி எது? என்ற வினா கேட்கப்பட்டிருந்தது பெரும் சர்ச்சைகளுக்கு வித்திட்டது.

தொடர்ந்து,‌ பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்‌ நியமனம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள்‌, ஊழல்கள்‌ நடைபெறுவதாக வரப்பெற்ற புகார்கள்‌ தொடர்பாக, விசாரணை மேற்கொள்ள உயர்கல்வித் துறை விசாரணைக்‌ குழு அமைத்தது குறிப்பிடத்தக்கது.  எல்லாவற்றுக்கும் மேலாக பெரியார் பலகலை கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன், பூட்டர் பவுண்டேசன் என்ற தனியார் நிறுவனம் தொடங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக, சேலம் மாநகர் கருப்பூர் காவல்துறையினரால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே, உள்ளாட்சி தணிக்கை குழுவில் நடந்த 9 நாள் ஆய்வில் ரூ.6 கோடி முறைகேடு செய்தது அம்பலமானது. மேலும் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியது. இது மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போது சுற்றறிக்கை அனுப்பியுள்ள பதிவாளர் தங்கவேல் உள்பட 3 பேர் மீது, 8 பிரிவுகளின் கீழ் அப்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து பதிவாளர் தங்கவேல் தலைமறைவானார். அந்த வழக்கு விசாரணைக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த பின்னரே, பதிவாளர் தங்கவேல் மீண்டும் பல்கலைக்கழக வந்தார்.

இந்த சூழலில், பெரியார் பல்கலைக் கழகத்துக்கு சென்ற தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, துணை வேந்தர் ஜெகநாதனுக்கு ஆதரவாக இருக்கும்படி துறை தலைவர்களை பகிரங்கமாக கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியானது.

இந்த பின்னணியிலேயே, பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர்கள் நூல்களை வெளியிடவும் சமூக ஊடகங்களுக்கு பேட்டியளிக்கவும் தடை விதித்து பதிவாளர் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக பேராசிரியர்களின் பணி பாடம் எடுப்பது மட்டுமல்ல; தொடர்ந்து ஆராய்ச்சிகள் செய்வதும், அதற்காக அறிவுத் தேடலில் ஈடுபடுவதும் படிப்பதும் நூல்கள் எழுதுவும்தான். அதற்கும் தடை என்றால் அவர்கள் வேறு என்னதான் செய்வார்கள்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...