இமாச்சல் பிரதேசத்தில் சட்லஜ் ஆற்றங்கரையில் சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமி காணாமல் போன நிலையில் பாறை இடுக்கு மற்றும் ஆற்றங்கரையோரங்களில் மனித உடற்பாகங்கள் கிடைத்துள்ளது. இது வெற்றி துரைசாமி உடற்பாகங்களா என்று டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அதிமுகவில் முக்கிய நிர்வாகியாக இருந்தவர் சைதை துரைசாமி; எம்ஜிஆரின் அபிமானி. மனிதநேயம் ஐஏஎஸ் அகாதமி என்ற அமைப்பை சைதை துரைசாமி நடத்தி வருகிறார். இந்த அகாதமி மூலம் ஏராளமான மாணவர்களுக்கு இலவசமாக குடிமைப்பணி தேர்வுகளுக்கான பயிற்சிகளை கொடுத்துள்ளார். இந்த அகாதமி பயிற்சி வகுப்பில் டிஎன்பிஎஸ்சிக்கும் பயிற்சி கொடுக்கப்படுகிறது. மேலும் ஐஏஎஸ், ஐபிஎஸ் கனவில் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வருபவர்களுக்கு இலவசமாக தங்குமிடம், உணவு, பயிற்சியையும் சைதை துரைசாமி வழங்கி வருகிறார்.
முன்னாள் எம்எல்ஏவான சைதை துரைசாமி எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் அவர் 2011ஆம் ஆண்டு கொளத்தூர் சட்டசபை தேர்தலில் இன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டார். அந்த தேர்தலில் தோல்வியுற்றார். இதையடுத்து மேயர் பதவிக்கு போட்டியிடும் வாய்ப்பை சைதை துரைசாமிக்கு கொடுத்தார், அன்றைய முதல்வர் ஜெயலலிதா. சென்னையின் 48ஆவது மேயரான சைதை துரைசாமி 2011 – 2016 ஐந்தாண்டுகள் மேயராக பணியாற்றினார். அதிமுகவின் முதல் சென்னை மேயர் சைதை துரைசாமி என்ற பெருமையை பெற்றார்.
சைதை துரைசாமிக்கு மல்லிகா என்ற மனைவியும் வெற்றி துரைசாமி என்ற மகனும் உள்ளனர். வெற்றி துரைசாமி, தனது தந்தையுடன் ஐஏஎஸ் அகாதெமியையும் கவனித்து வந்தார். இவர் ஒரு திரைப்பட இயக்குநரும்கூட. நடிகர் அஜித்தின் நெருங்கிய நண்பராகவும் வெற்றி உள்ளார். 2012ஆம் ஆண்டு வெற்றிக்கு திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கலந்துகொண்டார். அது போல் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் கலந்துகொண்டார்.
2016ஆம் ஆண்டு வருமான வரித் துறை சென்னையில் 40 இடங்களில் சோதனை நடத்தியது. அதில் வெற்றியின் வீடும் ஒன்று. அவர் வசிக்கும் சிஐடி நகர் வீடு, தாம்பரத்தில் உள்ள செம்பாக்கம் பண்ணை வீட்டிலும் ரெய்டு நடந்தது. வெற்றி ‘என்றாவது ஒரு நாள்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். 2021ஆம் ஆண்டு வெளியானது. 45 வயதான வெற்றி சென்னை நந்தனம் சிஐடி நகர் பகுதியில் வசித்து வந்தார்.
இந்நிலையில், வெற்றி துரைசாமி இமாச்சல் பிரதேசத்திலற்கு தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு கஷங் நாலா பகுதியில் உள்ள சட்லஜ் நதிக்கரையின் அருகே அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் 3 பேர் காரில் பயணம் செய்த போது கார் நேற்று மாலை விபத்துக்குள்ளாகி சட்லஜ் நதியில் விழுந்துவிட்டது. ஓட்டுநர் சடலமாக மீட்கப்பட்டார். இந்த காரில் பயணம் செய்த திருப்பூரை சேர்ந்த கோபிநாத் என்பவர் காயங்களுடன் மீட்கப்பட்டார். ஆனால், சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியை காணவில்லை. இதையடுத்து இந்த விபத்து குறித்து இமாச்சல பிரதேச போலீஸார் சென்னை போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.
விபத்து ஏற்பட்டபோது வெற்றி காரில் இருந்தாரா? அல்லது வேறு எங்கும் சென்றாரா? அவர் இமாச்சல் பிரதேசம் சென்றது ஏன்? சுற்றுலா பயணத்துக்காகதான் சென்றாரா? என்ற கேள்விகளுடன் காணாமல்போன வெற்றியை தேடும் பணியில் தொடர்ந்து தீவிரமாக தொடர்ந்து இமாச்சல் பிரதேச காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
அங்கு கடும் பனிப்பொழிவு நிகழ்வதால் வெற்றியின் உடலை தேடுவதில் தொய்வு ஏற்பட்டது. சைதை துரைசாமியும் தனது மகனின் நிலை அறிய அங்கு சென்றுள்ளார். தொடர்ந்து இந்திய விமான படை, இந்திய கடற்படையும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. இதற்காக சென்னை அடையாறு தளத்திலிருந்து சிறந்த வீரர்கள் இமாச்சல் சென்றுள்ளனர்.