பல தொடர் தோல்விப் படங்களுக்குப் பிறகு விக்ரம் பெரிதும் நம்பியிருக்கும் படம் ‘தங்கலான்’. பா. ரஞ்சித் இயக்குகிறார். பெரும் பொருட்செலவில் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.
இந்தப் படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிவடைந்துவிட்டது. அதற்கு பிறகான பணிகளுக்கு அதிக காலம் எடுப்பதால் இப்பட ரிலீஸ் தள்ளிப் போவதாக தெரிவிக்கப்பட்டது.
பொங்கலுக்கு வெளியாகும் என்றார்கள். ஆனால் அதுவும் இல்லாமல் ஜனவரி 26-ல் வெளியாக இருக்கிறது என்றார்கள். அதுவும் நடக்கவில்லை. இதனால் ரிலீஸ் ஏப்ரலில் இருக்கும் என சொல்லப்பட்டது. ஆனால் ஏப்ரலில் எந்த தேதி உறுதி செய்யப்பட்டு இருக்கிறது என்பது குறித்து தகவல் சொல்லப்படவில்லை. இதனால் ஏப்ரல் 11-ம் தேதி இருக்கலாம் என வியாபார வட்டாரங்களில் பேசிக்கொண்டார்கள்.
இப்போது ஏப்ரல் மாதம் கூட தங்கலான் வெளியாகாது. அதன் வெளியீடு இன்னும் தள்ளிப்போகலாம் என்று முணுமுணுக்கப்படுகிறது.
இதற்கு காரணம் வர இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தல்தான். ஏப்ரலில் தேர்தல் இருப்பதால், மே மாதத்திலேயே தேர்தல் நடைமுறைகள் மேற்கொள்ளப்படும். தேர்தல் பிரச்சாரங்களின் அனல் பறக்கும். மக்களின் கவனம் திரைப்படங்களில் இல்லாமல் தேர்தல் களத்தின் மீதுதான் அதிகமிருக்கும்.
இப்படியொரு சூழலில் படத்தை வெளியிட்டால், படம் வருவதும் தெரியாது. போவதும் தெரியாது. போட்ட பணம், உழைப்பு எல்லாமே வீணாகிவிடும். அதனால் தேர்தலின் போது திரையிடுவதற்குப் பதிலாக, அரசு அமைக்கப்பட்ட பிறகு தங்கலானை வெளியிட்டால், மக்கள் பார்க்க ஆர்வம் காட்டுவார்கள் என்று யோசனை சொல்லப்பட்டு இருக்கிறதாம்.
இப்படி தள்ளி தள்ளிப்போட்டால் படம் ஓடாது என்றும் ஒரு தரப்பு அறிவுறுத்துகிறதாம்.
இதனால் தயாரிப்பு தரப்பு குழப்பத்தில் இருக்கிறதாம். ஏப்ரலா அல்லது ஏப்ரலுக்குப் பிறகா என தயாரிப்பு யோசனையில் இருந்தாலும், தங்கலான் ரிலீஸ் தள்ளிப்போகவே வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள்.