No menu items!

ராமநாதபுரத்தில் மோடி போட்டி? – மிஸ் ரகசியா

ராமநாதபுரத்தில் மோடி போட்டி? – மிஸ் ரகசியா

“பாஜக கூட்டணி வேட்பாளர் பட்டியலை படிக்கறேன் கேட்கிறீங்களா?”
என்று உற்சாகமாக கேட்டபபடி ஆபீசுக்குள் என்ட்ரி ஆனாள் ரகசியா.

“நீ சுறுசுறுப்பான ரிப்போர்ட்டர்னு எனக்குத் தெரியும் அதுக்காக இப்படித்தான் தேர்தல் அறிவிப்புக்கு முன்னாடியே ஸ்கூப் நியூஸா வேட்பாளர் பட்டியல் அறிவிப்போட வந்து நிப்பியா?”

“இது ஸ்கூப் நியூஸான்னெல்லாம் எனக்கு தெரியாது. ஆனா இதுதான் பாஜக கூட்டணியோட வேட்பாளர் பட்டியல்னு வாட்ஸப்ல ஒரு நியூஸ் சுத்திட்டு இருக்கு.?”

“கூட்டணியே முடிவாகல. அதுக்குள்ள வேட்பாளர் பட்டியலா?”

“பாமக, தேமுதிக, ஓபிஎஸ் அதிமுக, அமமுக கட்சிகள் இந்த தேர்தல்ல பாஜக கூட்டணியில இருக்கும்னு இந்த பட்டியல் மூலமா மறைமுக தகவலை சில பாஜக பிரமுகர்கள் பரப்பிட்டு இருக்காங்க. பாஜக 17, பாமக 7, தேமுதிக 4, ஓபிஎஸ் அணி 2, அமமுக 2, தமாகா, சமக, புதிய நீதிக் கட்சி, புதிய தமிழகம், இஜக, இமகமுக கட்சிகளுக்கு ஒரு சீட்னு இந்த வேட்பாளர் பட்டியல் மூலமா ஜோசியம் சொல்லி இருக்காங்க.”

“இந்த வாட்ஸ் அப் பட்டியல்ல யாருக்கெலாம் சீட் கிடைச்சிருக்கு?”

“கன்னியாகுமரில தமிழிசை சவுந்தர்ராஜன், விருதுநகர்ல பேராசிரியர் சீனிவாசன், நீலகிரியில எல்.முருகன், கோவையில ஏ.பி.முருகானந்தம், மத்திய சென்னையில குஷ்பு, தென் சென்னையில மைத்ரேயன், வட சென்னையில கரு.நாகராஜன் நிக்கப்போறதா இந்த பட்டியல் சொல்லுது. நிர்மலா சீதாரமன் புதுச்சேரியில நிப்பார்னும் இதுல சொல்லப்பட்டு இருக்கு. நிர்மலா சீதாராமன் பத்தி இன்னொரு நியூஸும் உலவுது”

“என்னது?”

“அவங்க தென் சென்னை தொகுதில நிக்கப் போறாங்கனு டெல்லிலருந்து சொல்றாங்க.”

“தென் சென்னைல மைத்ரேயன்னு சொன்னியே”

”தென் சென்னைக்கு நிறைய போட்டி இருக்கு. குஷ்புவும் தென் சென்னைதான் கேட்டிருக்காங்களாம். மத்திய சென்னைனா திமுகவுக்கு சாதகமாக இருக்கும்னு சொல்லியிருக்காங்க. இப்ப நிர்மலா சீதாராமன் அங்க போட்டியிட்டா இவங்க இரண்டு பேருக்கும் நிச்சயம் வாய்ப்பு இருக்காது”

“நிர்மலா சீதாராமன் இதுவரைக்கும் தேர்தல்லயே போட்டியிட்டதில்லையே”

“இப்படி நீங்க சொல்றிங்கல அதை நிறுத்தணும்னுதான் இப்ப களத்துல இறங்குறாங்க. திருவான்மியூர்ல ஒரு வீடு வாங்கிட்டாங்கனுகூட ஒரு பேச்சு இருக்கு”

“முக்கியமான தொகுதியான ராமநாதபுரத்தை விட்டுட்டியே. அங்க பிரதமர் மோடி நிக்கலையா?”

“தென் மாநிலங்கள்ல ஏதாவது ஒரு தொகுதியில பிரதமர் போட்டியிட்டா, சவுத்ல கட்சியை வலுப்படுத்தலாம்னு கட்சிக்காரங்க நினைக்கறாங்க. தமிழ்நாட்ல கன்னியாகுமரி, இல்லைன்னா கேரளால திருச்சூர் தொகுதியில பிரதமர் போட்டியிட வாய்ப்பு இருக்குன்னு சொல்றாங்க. இந்த 2 தொகுதியிலயும் கிறிஸ்தவர்கள் ஓட்டும் அதிகம் இருக்குங்கிறதால சில கிறிஸ்தவ பாதிரியார்களை பிரதமர் சந்திச்சதா சொல்றாங்க”

“கன்னியாகுமரில தமிழிசை நிப்பாங்கனு சொன்னியே”

“ஆமாம். ஆனா பிரதமர் அங்க நின்னா தமிழிசை தூத்துக்குடி பக்கம் போறதுக்கு வாய்ப்பு இருக்கு”

“தமிழகத்துல சின்ன கட்சியா இருக்கிற பாஜக கூட்டணியில 7 சீட் கொடுத்தா பாமக சம்மதிக்குமா?”

“இப்போதைக்கு இந்த கூட்டணியில அவங்க மட்டும்தான் விலகி நிக்கறாங்க. ராமதாஸ் கூட ஏ.சி.சண்முகம் தொடர்ந்து பேசிட்டு வர்றார். அதனால அவங்க அதிமுக பக்கம் சாயவும் வாய்ப்பு இருக்கு.”

“திமுக கூட்டணி தொகுதி பங்கீடு நியூஸ் ஏதும் இல்லையா?”

“திமுக கூட்டணியில இருக்கிற கட்சிகளோட தொகுதிப் பங்கீடு பத்தி டி.ஆர்.பாலு அண்ட் கோ பேசினாலும் இன்னும் யாருக்கும் எந்த பதிலையும் சொல்லலை. அந்த கூட்டணியில இருக்கிற எல்லா கட்சிகளும் போன தேர்தலைவிட இந்த முறை அதிக சீட்ல போட்டியிட விரும்பறாங்க. அதேபோல மதிமுக, விசிக கட்சிகள் தங்களோட சொந்த சின்னத்துல நிற்க விரும்பறாங்க. இதையெல்லாம் கேட்ட டி.ஆர்.பாலு, முதல்வர் வந்ததும் இறுதி முடிவை சொல்றோம்னு சொல்லியிருக்கார். அதனால கூட்டணிக் கட்சிகள் முதல்வர் வரவை ஆர்வமா எதிர்பார்த்து காத்திருக்காங்க.

“திருச்சியிலயும், சிவகங்கையிலயும் திமுகதான் நிக்கணும்னு உடன்பிறப்புகள் ஒத்தக் கால்ல நிக்கறாங்களாமே?”

“திருச்சி தொகுதியில அமைச்சர் நேருவோட மகனுக்கு சீட் கொடுக்கணும்னு மாவட்ட திமுக நிர்வாகிகள் தீர்மானம் போடற மூடுல இருக்காங்க. ஆனா காங்கிரஸ் கட்சி இந்த முறையும் திருச்சியை தங்களுக்கு ஒதுக்கச் சொல்லி கேட்டிருக்காங்க. அவங்க போதாதுன்னு மதிமுகவும் திருச்சிக்காக துண்டைப் போட்டிருக்காங்க. இதை கேள்விப்பட்ட உள்ளூர் திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சிக்கு தொகுதியை ஒதுக்கீடு செஞ்சா அவங்களோட வெற்றிக்கு எங்களால உத்தரவாதம் தர முடியாதுன்னு கட்சித் தலைமைகிட்ட நேரடியாவே பேசிட்டாங்களாம்.”

“சிவகங்கையில என்ன ஆச்சு?”

“இங்க தன்னோட மகன் அண்ணாமலையை நிறுத்தறதுக்காக சட்ட அமைச்சர் ரகுபதி, திமுக தலைமைகிட்ட பேச்சுவார்த்தை நடத்திட்டு வர்றார். இதுக்கு நடுவுல முன்னாள் எம்.பி. சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் கூடிய சிவகங்கை காங்கிரஸ் நிர்வாகிகள், இந்த முறை சிவகங்கை தொகுதியில் கார்த்திக் சிதம்பரத்தை வேட்பாளரா நிறுத்தக்கூடாதுன்னு தீர்மானம் நிறைவேற்றி இருக்காங்க. இந்த கூட்டத்துல சிதம்பரத்தோட தீவிர ஆதரவாளரான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுந்தரமும் கலந்துகிட்டார். இதைக் கேள்விப்பட்டதும் ப.சிதம்பரம் அப்செட் ஆகிட்டாராம்.”

“விஜய் கட்சி ஆரம்பிச்சதோட ரியாக்‌ஷன் ஏதும் இல்லையா?”

“சொல்லாம இருப்பேனா… விஜய் கட்சி பற்றிய அறிவிப்பு வந்ததும் ஸ்பெயினில் இருந்து உதயநிதி மற்றும் முக்கிய அமைச்சர்கள்கிட்ட முதல்வர் பேசி இருக்கார். நடிகர் விஜய்க்கு பின்புலமாக இருக்கறது யார்னு அவர் கேட்டதுக்கு பிரசாந்த் கிஷோர் பேரை உதயநிதி சொல்லி இருக்கார். இதைக் கேட்ட முதல்வர், ‘சரி… நான் அவர்கிட்ட பேசறேன்’ன்னு சொல்லி இருக்கார்.”

“புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, விஜய்க்கு போன் போட்டு வாழ்த்து தெரிவிச்சிருக்காரே?”

“விஜய்யும், அவரும் ஏற்கெனவே ரொம்ப நெருக்கம். இந்த நட்பு நெருக்கமானதுக்கு விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த்தான் காரணம். ரெண்டு பேருக்கும் நடுவுல அவர்தான் உறவுப் பாலம் போட்டிருக்கார். ரங்கசாமிக்கு பாரதிய ஜனதா தன்னை சுதந்திரமா ஆட்சி செய்ய விடாமல் தடுக்குதுன்னு ஒரு ஆதங்கம் இருக்கு. அதனால விஜய் ஆதரவோட அடுத்த சட்டசபை தேர்தலை சந்திக்க அவர் திட்டம் போடறார். அதனாலதான் அவர் விஜய்க்கு வாழ்த்து சொல்லி இருக்கார். அதே நேரத்துல முதல்வர் ரங்கசாமியோட க்ளீன் இமேஜ் தன் கட்சிக்கு உதவும்னு விஜய்யும் நினைக்கிறாராம். விஜய் கட்சி பத்தி இன்னொரு நியூஸும் இருக்குது”

”என்னது?”

“நாடாளுமன்றத் தேர்தல்ல ஒரே ஒரு தொகுதில போட்டிப் போட்டு களத்தை டெஸ்ட் பண்ணலாம்கிற ஐடியாவுல விஜய் இருக்கிறாராம்?”

“போட்டி இல்லைனு அறிக்கைல சொல்லியிருந்தாரே”

“அறிக்கைதானே. தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று போட்டியிடுகிறேன் என்று சொல்லிக்கலாம். தூத்துக்குடி தொகுதில விஜய் கட்சி போட்டியிடலாம். விஜய்யே நிற்பதற்கும் வாய்ப்பிருக்குனு சொல்றாங்க. தடாலடியா வந்து ஜெயிச்சிருணும்னு விஜய் நினைக்கிறாராம்.”

“சினிமாவுலதான் எல்லாம் தடாலடியா நடக்கும் நிஜத்துல நடக்குமா?”

”நடத்துவோம்னு விஜய் ரசிகர்கள் சொல்றாங்க”

‘சீமான் கட்சி ரெய்ட் என்னாச்சு? ஏதாவது நியூஸ் உண்டா?”

”விஜய் கட்சி தொடங்குறதுக்கும் நாம் தமிழர் கட்சியினர் மீது நடந்த ரெய்டுக்கும் முடிச்சுப் போடுறாங்க. நாம் தமிழர் கட்சியை உடைத்தால் விஜய் கட்சிக்கு லாபகரமா இருக்கும்னு டெல்லி சிலர் நினைக்கிறாங்க என்கிறார்கள் சீமான் ஆதரவாளர்கள்”

”எல்லாமே டெல்லி ஆட்டமா இருக்கு”

“ஒரு சென்னை ஆட்டத்தையும் சொல்றேன். சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ ராதாகிருஷ்ணன் விரைவில் மத்திய அரசு பணிக்கு மாறிப் போகப் போராராம்.”

“ஏன் கலர் கலரா சட்டைப் போட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்து நல்லாதானே இருந்தார்.”

”ஆமாம் சென்னை மாநகராட்சியில் நடக்கும் சில விஷயங்கள்ல உடன்பாடு இல்லாததால இந்த முடிவுனு தனக்கு நெருக்கமானவர்கள்கிட்ட சொல்லியிருக்கிறார்”

“என்னாச்சு?”

“சென்னை வெள்ளத்துல ராதாகிருஷ்ணன் சரியா பணி செய்யலனு அரசுக்கு அதிருப்தி இருக்கு. அதனால வெள்ள நிவாரணப் பணிகள்ல ககன்தீப் சிங் பேடி ஐஏஎஸ்ஸை கொண்டு வந்து பணிகளை பார்க்க சொன்னாங்க. அப்பவே ராதாகிருஷ்ணன் கொஞ்சம் அப்செட். அண்ணாநகர் டவர் பார்க்ல திமுககாரங்ககூட சண்டை வந்தது. சென்னை மாநகராட்சி விவகாரங்கள்ல அமைச்சர் சேகர் பாபு தலையிடுறார்னும் ஒரு புகார் வச்சிருக்கிறார். ஆனா அரசு தரப்புல இவர் தன்னை மீடியாவுல ப்ரொஜக்ட் பண்றாரே தவிர உருப்படியா வேலை செய்யலனு நினைக்கிறாங்க. இப்படி பல விஷயங்கள் சென்னை மாநகராட்சில ஓடிட்டு இருக்கு”

“மேயர் பிரியா என்ன பண்றாங்க”

“அவங்க பாவம்..அமைச்சர் போன் பண்ணா மீட்டிங்குனு கூட பார்க்காம போனை எடுத்து பேசுறாங்க. உதயநிதி கூட்டங்களுக்கு மிஸ் பண்ணாம போறாங்க. கட்சில மூத்தவங்களை மீறி எதுவும் பண்ன முடியாம இங்கேயும் அங்கேயும் ஓடிட்டு இருக்காங்க”

“பாவம்தான் சீனியர்ஸ்கிட்ட மாட்டிக்கிட்டு கஷ்டப்படுறாங்க போல”

“எங்க போனாலும் உங்களை மாதிரி சீனியர்ஸால பிரச்சினைதான் எங்கள மாதிரி ஜூனியர்ஸ்க்கு” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...