இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்கள் வரவு செலவுக் கணக்கை ஆண்டுதோறும் தேர்தல் கமிஷனிடம் தாக்கல் செய்ய வேண்டும். இந்த விதிப்படி கடந்த 2022 – 2023 நிதியாண்டுக்கான வரவு செலவுக் கணக்கை காங்கிரஸ் கட்சி தாக்கல் செய்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் செலவுகள் மற்றும் அதன் வருமானங்கள் பற்றிய சுவாரஸ்யமான பல விவரங்கள் இதில் வெளியாகி உள்ளன.
2022 – 2023 காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.452 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அதற்கு முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது, இது 90 கோடி ரூபாய் குறைவு. 2021-2022 நிதியாண்டில் காங்கிரஸ் கட்சிக்கு 542 கோடி ரூபாய் வருவாயாக கிடைத்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மொத்த வருவாயில் உறுப்பினர் கட்டணம், தேர்தலில் விருப்ப மனுக்களை தாக்கல் செய்யும் கட்டணம் என கட்சி உறுப்பினர்களிடம் இருந்து வாங்கிய பல்வேறு கட்டணங்கள் மூலம் 42 கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது.
நன்கொடைகள் மூலம் 268 கோடி ரூபாயும், தேர்தல் பாண்டுகள் மூலம் 171 கோடி ரூபாயும் காங்கிரஸ் கட்சிக்கு வருவாயாக கிடைத்துள்ளன.
வருவாய் குறைவாக கிடைத்த அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் செலவுகள் அதிகரித்துள்ளன. இந்த நிதியாண்டில் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 467 கோடி ரூபாய் செலவாகி உள்ளது.
இந்த செலவுக் கணக்கை பார்க்கும்போது காங்கிரஸ் கட்சி சமீப காலமாக அதிக அளவில் கருத்துக் கணிப்புகளை நடத்துவது தெரியவந்துள்ளது. கடந்த 2021-2022 நிதியாண்டில் காங்கிரஸ் கட்சி கருத்து கணிப்புகளை நடத்த மொத்தமே 23 லட்ச ரூபாயைத்தான் செலவு செய்துள்ளது. ஆனால் 2022-2023-ல் கருத்துக் கணிப்புகளை நடத்துவதற்காக மட்டும் 40 கோடி ரூபாய்களை செலவிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டில் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய அளவில் செலவு வைத்த விஷயம் ராகுல் காந்தியின் நடைப்பயணம். கன்னியாகுமரியில் தொடங்கி ஜம்மு காஷ்மீர் வரை 14 மாநிலங்களில் கடந்த நிதியாண்டின்போது ராகுல் காந்தி நடைப்பயணம் போனார். இந்த நடைப்பயணம் வெற்றியா, தோல்வியா என்ற விவாதம் பெரிய அளவில் ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோற்றதால், ராகுல் காந்தியின் நடைப்பயணம் தோல்வி என்று எதிர்க்கட்சியினர் கூறி வருகிறார்கள். ஆனால் தெலங்கானா மற்றும் கர்நாடக மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற ராகுல் காந்தி நடத்திய நடைப்பயணமே காரணம் என்று காங்கிரஸ் கட்சியினர் கூறி வருகிறார்கள்.
இப்படி வெற்றியா தோல்வியா என்று விவாதம் நடத்தப்பட்டு வரும் ராகுல் காந்தியின் நடைப் பயணத்துக்காக காங்கிரஸ் கட்சி கடந்த நிதியாண்டில் 71 கோடி ரூபாயை செலவு செய்துள்ளது. நிர்வாக விஷயங்களுக்காக 18 கோடி ரூபாய் செலவான நிலையில் தேர்தல் பிரச்சாரங்களுக்காக மீதி தொகை செலவாகி உள்ளது.