அயோத்தி ராமர் கோயிலில் இப்போது வைக்கப்பட்டிருக்கும் சிலை மைசூருவை சேர்ந்த அருண் யோகிராஜ் என்ற சிற்பியால் வடிவமைக்கப்பட்டது என்பது நாடறிந்த விஷயம். ஆனால் அந்த சிலையுடன் சேர்த்து மேலும் 2 சிலைகள் கருவறையில் வைப்பதற்கான போட்டியில் கடைசிவரை இருந்தன.
ராமர் கோயில் கருவறையில் அருண் யோகிராஜ் வடிவமைத்த சிலையுடன் கடைசிவரை போட்டியில் இருந்த சிலையை வடிவமைத்தவர் கணேஷ் பட். கர்நாடகாவின் மைசூரு பகுதியில் கிடைக்கும் கிருஷ்ண ஷைலா என்ற கருப்பு நிறக் கல்லில் இவர் ராமர் சிலையை வடிவமைத்திருந்தார்.
51 அங்குலம் உயரம் கொண்ட இந்த ராமர் சிலையின் ஓரத்தில் மகாவிஷ்ணுவின் மற்ற அவதாரக் காட்சிகாளையும் அவர் பார்த்துப் பார்த்து செதுக்கியிருந்தார். தற்போது ராமர் கோயில் கருவறையில் வைக்கப்பட்டுள்ள சிலையைப் போன்றே அழகாக இந்த சிலை இருந்தும், கடைசி நேரத்தில் கருவறைக்குள் நுழையும் வாய்ப்பை இழந்தது.
இந்தச் சிலையை இன்னும் சில நாட்களில், அயோத்தியில் உள்ள ராமர் கோயிலின் ஏதாவது ஒரு பகுதியில் சன்னதி அமைத்து பிரதிஷ்டை செய்வதாக ஆலய நிர்வாகிகள் அவருக்கு வாக்கு கொடுத்துள்ளனர்.
ராமர் கோயில் கருவறைக்குள் நுழையும் வாய்ப்பை இழந்த மற்றொரு சிலையை வடித்தவர் சத்யநாராயண் பாண்டே. வெள்ளை நிற பளிங்குக் கல்லில் அவர் இந்த சிலையை வடிவமைத்திருந்தார். தங்கம் மற்றும் வைர நகைகள் அணிந்த ராமரை இந்த சிலையில் வடித்திருந்த பாண்டே, சிலையை சுற்றியுள்ள வளைவில் தசாவதார காட்சிகளை கலைநயத்துடன் பொறித்திருந்தார். ஆனால் அந்தச் சிலையும் கடைசி நேரத்தில் கருவறையில் நுழையும் வாய்ப்பை இழந்தது.
அயோத்தி ராமர் கோயிலின் முதல் தளத்தில் அமையவுள்ள சிறிய சன்னதியில் அந்த சிலையை விரைவில் வைப்பதாக ஆலய நிர்வாகிகள் அவருக்கு வாக்கு கொடுத்திருக்கிறார்கள்.
அள்ளிக் கொடுத்த அம்பானி
தனக்கு பிடித்தவர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பரிசுப் பொருட்களை அள்ளிக் கொடுப்பவர் தொழிலதிபர் முகேஷ் அம்பானி. அவரிடம் பரிசு பெற்றவர்கள் வரிசையில் சமீபமாக சேர்ந்திருப்பவர் அயோத்தி ராமர்.
அயோத்தியில் தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு, சில நாட்களுக்கு முன் 2.51 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியிருக்கிறார் முகேஷ் அம்பானி. அப்படியும் அவர் மனம் திருப்தியாகாமல் இருக்க, அயோத்தி ராமருக்கு 33 கிலோ தாங்க நகைகளையும், 3 தங்க கிரீடங்களையும் கூடுதலாக வழங்கியிருக்கிறார் முகேஷ் அம்பானி.
ஆனால் அம்பானியையும் விஞ்சும் அளவில் ராமர் கோயிலுக்கு 101 கிலோ தங்கத்தை தானமாக கொடுத்திருக்கிறார் சூரத் நகரைச் சேர்ந்த வைர வியாபாரியான திலீப் குமார் லாகி. இவர் கொடுத்த நகைகளின் மொத்த மதிப்பு 86 கோடி ரூபாய் என்று கணக்கிடப்பட்டுள்ளது.