அயோத்தியில் ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை பூஜையை தமிழ்நாட்டில் கொண்டாடுவதற்கு தடைவிதிக்கப்பட்டதாக பாஜகவினர் குற்றம்சாட்டியிருக்கிறார்கள். தமிழக அரசு அதை மறுத்திருக்கிறது. இந்தப் பிரச்சினை இன்று உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் வழக்குகளாக வந்து தீர்க்கப்பட்டிருக்கிறது.
என்ன நடந்தது?
நேற்று காலை தினமலர் நாளிதழில் தடை என்ற தலைப்பில் பெரிய அளவில் ஒரு செய்தி வந்தது. அந்த செய்தி இதுதான்.
’அயோத்தியில் நாளை ராமர் கோவில் கும்பாபிேஷகம் நடக்க உள்ள நிலையில், அதை முன்னிட்டு தமிழக கோவில்களில் அன்னதானம் மற்றும் சிறப்பு பூஜை நடத்தக்கூடாது என, தமிழக அரசு தடை விதித்து வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது, தமிழகம் முழுவதும் பக்தர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாளை அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்படுவதை ஒட்டி நாடே விழாக்கோலம் பூண்டுள்ள நிலையில், தமிழக கோவில்களிலும் பக்தர்கள் மற்றும் அமைப்புகள் சார்பில் சிறப்பு பூஜைகள் நடத்தி அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அதற்கு தடை விதித்து தமிழக அரசு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது.
‘அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு தமிழக கோவில்களில் சிறப்பு பூஜை, அன்னதானம் வழங்குதல், அது சார்ந்த நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தக்கூடாது.
‘கோவில் நிர்வாகம் சார்பிலோ பக்தர்கள் பெயரிலோ அமைப்புகள், கட்சிகள் பெயரிலோ எந்த நிகழ்ச்சியும் நடத்தக் கூடாது. அதை விளம்பரப்படுத்தி பேனர் வைக்கக் கூடாது. மீறி அன்னதானம் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகள் நடந்தாலும், சம்பந்தப்பட்ட கோவில் செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என வாய்மொழியாக எச்சரிக்கப் பட்டுள்ளது.’
தினமலரில் வெளியான இந்த செய்தியை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உட்பட பாஜகவினர் தங்கள் சமூக ஊடகப் பக்கங்களில் பரப்பினர்.
இதற்கு தமிழ்நாட்டு அரசின் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு மறுப்புத் தெரிவித்தார்.
‘மதிப்பிற்குரிய திருமிகு.@nsitharaman அவர்களே, திருக்கோயில்களில் எந்த பூஜை புனஸ்காரங்கள் நடத்துவது என்றாலும், அன்னதானம் வழங்குவது என்றாலும், சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு அதற்குரிய அனுமதியை இந்து சமய அறநிலையத்துறை நிச்சயம் வழங்கும். அப்படி விதிமுறைகளுக்குட்பட்டு எந்தெந்த திருக்கோயில்களில் வழிபாடு மற்றும் அன்னதானத்திற்கு தாங்கள் அனுமதி கோரியுள்ளீர்கள் என்ற பட்டியலை தந்தால் உடனடியாக அதற்கு சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு அனுமதி வழங்க தயாராக இருக்கிறோம்.’ என்று தனது எக்ஸ் பக்கத்தில் நிர்மலா சீதாராமனுக்கு பதிலளித்தார்.
அது மட்டுமில்லாமல் ஊடகங்களுக்கு அளித்த பேட்டிகளில், ‘ஒன்றிய அமைச்சர் என்ன கடவுளா? என்ன ஆதாரத்துடன் இத்தகைய தகவலை பரப்புகிறார்? தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில், நாளை ராமர் பெயரில் பூஜை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என பரப்பப்படுவது வதந்தி’ என்று தெரிவித்தார்.
’சேலத்தில் எழுச்சியோடு நடைபெற்று வரும், திமுக இளைஞரணி மாநாட்டை திசைதிருப்புவதற்காக திட்டமிட்ட வதந்தி பரப்பப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் ராமர் பெயரில் பூசை செய்யவோ, அன்னதானம் வழங்கவோ, பிரசாதம் வழங்கவோ பக்தர்களுக்கு எந்தத் தடையையும் அறநிலையத்துறை விதிக்கவில்லை.முற்றிலும் உண்மைக்குப் புறம்பான, உள்நோக்கம் கொண்ட பொய்ச் செய்தியை, உயர்ந்த பதவியில் உள்ள ஒன்றிய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் போன்றோர் பரப்புவது வருத்தத்துக்குரியது!’ என்று சேகர்பாபு குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார்.
’ திரு. சேகர் பாபு அவர்களே, உங்கள் tweet க்கு பதில்கொடுக்கும் வகையிலே தரவுடன்/ஆதாரத்துடன் மக்கள் எடுத்துகாட்டுகிறார்கள். இந்துக்களின் வழிபாட்டு முறையில், மாற்றி மாற்றி, இடையூறுகளை ஏற்படுத்துவதை TN முழுவதிலிருந்தும் வரும் செய்திகளுக்கு முற்றப்புள்ளி வைக்கவேண்டிய கடமை உங்களுடையது. மேலும், சின்ன சின்ன தனியார் கோவிலில் நடக்கும் ஏற்பாடுகளிலும், காவல்துறையினர் அங்கேயிருந்து அநாவசிய தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றனர். ஆதலால், அமைச்சர் அவர்களே, இந்துக்களின் அடிப்படை உரிமைகளை காக்கும் ரீதியில், அறநிலைய துறை அமைச்சராக நீங்கள் முன்நின்று காப்பற்ற வேண்டும். தடையில்லையேல், உங்கள் அதிகாரிகளை, உடனே தடங்கல் செய்வதை நிறுத்தி, பக்தர்களுக்கு ஒத்துழைக்குமாறு ஆணையிடுங்கள்.’ என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் இந்த சர்ச்சையில் தன்னுடைய கருத்துக்களை தெரிவித்து வந்தார். அவருடன் பல பாஜக தலைவர்களும் கருத்துக்கள் பதிவிட்டிருந்தார்கள்.
தினமலர் செய்தி முற்றிலும் தவறானது, பொய்யானது என்றும் மதப் பிரச்சினையை தூண்டுவதற்காக வெளியிடப்பட்டது. தினமலர் நாளிதழ் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுகவினரும் அவர்கள்து ஆதரவாளர்களும் கருத்துக்களை தெரிவித்தார்கள்.
இந்தப் பின்னணியில் இந்த சர்ச்சை குறித்து சென்னை உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடுக்கப்பட்டன.
பொது நல வழக்கு ஒன்று தமிழக பாஜக செயலாளர் வினோஜ் பி செல்வம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை அவசர வழக்காகக் கருதி விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. வினோஜ் பி செல்வம் சார்பில் வழக்கறிஞர் ஜி.பாலாஜி இந்த மனுவை தாக்கல் செய்தார்.
மனுவில், “அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழாவை தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களில் நேரலையாக ஒளிபரப்ப தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. அதோடு, அனைத்து வகையான பூஜைகள், அர்ச்சனைகள், அன்னதானம், பஜனை ஆகியவற்றுக்கும் தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. மாநில அரசு காவல்துறை மூலம் தன்னிச்சையாக இதுபோன்று தடை விதிப்பது, இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை பறிக்கும் செயல்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கின் விசாரணை இன்று காலை நடைபெற்றது. அப்போது, இந்நிகழ்வை நேரலையாக ஒளிபரப்பவோ, பூஜைகள், அர்ச்சனைகள், பஜனைகள் மேற்கொள்ளவோ, அன்னதானம் வழங்கவோ எவ்வித கட்டுப்பாடுகளும் தடையும் இல்லை எனவும் இந்த மனுக்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும் தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
பிற மதத்தவர்கள் அருகில் வசிக்கிறார்கள் என்ற ஒற்றைக் காரணத்தைச் சொல்லி கோயில்களில் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா நேரடி ஒளிபரப்பை தடை செய்யக் கூடாது. விண்ணப்பித்தவர்கள் குறித்த தகவல்களை அரசு பராமரிக்க வேண்டும். விண்ணப்பத்தின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
சென்னை பட்டாபிராமில் உள்ள தனியார் மண்டபத்தில் பஜனைகள், அன்னதானம் நடத்த அனுமதி மறுத்ததாக கூறி விவேகானந்தா இந்து இயக்கத்தின் தலைவர் கணபதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அயோத்தி செல்ல இயலாத பக்தர்களுக்காக பஜனை, அன்னதான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த நிலையில் உரிய அனுமதி பெறவில்லை எனக் கூறி, நிகழ்ச்சியை நடத்த காவல்துறை அனுமதி மறுத்ததாக மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
அதுமட்டுமில்லாமல், ‘உடனடியாக அனுமதி கோரி விண்ணப்பித்த போது, ஏழு நாட்களுக்கு முன் விண்ணப்பிக்கவில்லை என்றும், திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படக் கூடும் எனவும் கூறியதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை அவசர வழக்காக நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் இன்று காலை விசாரித்தார்.
அப்போது மனுதாரருக்கு அனுமதி வழங்கப்பட்டுவிட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதி, தனியார் கோயில்கள் மற்றும் திருமண மண்டபங்களில் நேரலை ஒளிபரப்பு செய்யவோ அல்லது பூஜைகள் மேற்கொள்ளவோ போலீஸார் அனுமதி தேவையில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.