No menu items!

கவர்னர் ரவி புகார், கோயில் அர்ச்சகர் மறுப்பு! – என்ன நடந்தது?

கவர்னர் ரவி புகார், கோயில் அர்ச்சகர் மறுப்பு! – என்ன நடந்தது?

அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, சென்னை தி.நகர் கோதண்டராமர் கோயிலுக்கு தரிசனம் செய்ய சென்றபோது, அர்ச்சகர்கள் கண்ணில் பய உணர்வை பார்த்ததாகவும், நாட்டின் பிற பகுதிகளில் கொண்டாடப்படும் பண்டிகை சூழலுக்கு முற்றிலும் அது மாறுபட்டிருந்தது என்றும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கூறியுள்ளதை, கோதண்டராமர் கோயில் தலைமை அர்ச்சகர் மறுத்துத்துள்ளார்.

அயோத்தியில் இன்று (ஜனவரி 22, 24) ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட 8000 துறவிகள், ரஜினிகாந்த் உட்பட பல சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய புள்ளிகள் என பலர் கலந்துகொண்டுள்ளனர். இந்நிகழ்வை முன்னிட்டு இந்தியா முழுவதும் பல கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன; அன்னதானமும் வழங்கப்பட்டன. தமிழ்நாட்டிலும் பல கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்து அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இன்று காலை 8 மணியளவில் சென்னை தி.நகரில் உள்ள கோதண்டராமர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்து ஆளுநர் மாளிகை திரும்பிய ஆர்.என். ரவி, கோதண்டராமர் கோவில் சென்று வந்தது குறித்து, ராஜ்பவன் எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவு சர்ச்சைக்குள்ளானது.

அந்த பதிவில், ‘இன்று காலை சென்னை, மேற்கு மாம்பலம் அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயிலுக்குச் சென்று, அனைவரும் நலம்பெற பிரபு ஸ்ரீராமரிடம் பிரார்த்தனை செய்தேன். இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ளது. பூசாரிகள் மற்றும் கோயில் ஊழியர்களின் முகங்களில் கண்ணுக்குப் புலப்படாத பயம் மற்றும் மிகப்பெரிய அச்ச உணர்வு இருந்தது. நாட்டின் பிற பகுதிகளில் கொண்டாடப்படும் பண்டிகை சூழலுக்கு முற்றிலும் அது மாறுபட்டிருந்தது. பால ராமர் பிராண பிரதிஷ்டையை நாடு முழுவதும் கொண்டாடும் போது, அக்கோயில் வளாகம், கடுமையான அடக்குமுறையின் உணர்வை வெளிப்படுத்துகிறது” என்று ஆளுநர் தெரிவித்திருந்தார்.

ஆளுநரின் இந்த ட்விட் வைரலான நிலையில், வாவ் தமிழா யூ டியூப் சேனலுக்காக, தி.நகர் கோதண்டராமர் கோவில் தலைமை அர்ச்சகரை சந்தித்தோம். ஆளுநரின் குற்றச்சாட்டை மறுத்த தலைமை அர்ச்சகர், “இன்று காலை ஆளுநர் வர இருப்பது குறித்து நேற்று எங்களுக்கு காவல்துறையினர் தெரிவித்தனர். இதனையடுத்து இரவு முழுவதும் கண் விழித்து ஏற்பாடுகளை செய்தோம்.

இன்று காலையில் ஆளுநர் வரும்போது கோவில் வாசலில் தேவஸ்தானம் சார்பில் பூரண கும்ப மரியாதை செய்து, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் கோவில் அர்ச்சகர்கள், நிர்வாகத்தினரிடம் தல வரலாறு குறித்து கேட்டு தெரிந்துகொண்டார். அனைத்து சந்நிதிகளிலும் வழிபாடு செய்தார். கோவில் பிரசாதமும் ஆளுநருக்கு வழங்கப்பட்டது. பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியுடன் தான் சென்றார். சுமார் இருபது நிமிடம் அவர் கோவிலில் இருந்திருப்பார்.

ஆளுநர் வரும்போது எங்களிடம் எந்த அச்ச உணர்வும் இல்லை. ஆளுநர் வருவதை முன்னிட்டு முன்தயாரிப்பு வேலைகள் இருந்ததால் நேற்று அர்ச்சகர்கள், உப அர்ச்சகர்கள் என பலரும் உறங்காமல் வேலை பார்த்தோம். அதனால் முகத்தில் களைப்பு தெரிந்திருக்கலாம். அதனை ஆளுநர் தவறாக புரிந்துகொண்டிருக்கலாம்” என்று தெரிவித்தார்.

முன்னதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், ‘தமிழ்நாட்டில் அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் கோவில்களில் ராமர் பெயரில் சிறப்பு பூஜைகளோ அல்லது அன்னதான நிகழ்வுகளோ நடக்க கூடாது என்று தமிழ்நாடு அரசு வாய்மொழி உத்தரவு போட்டுள்ளது. அயோத்தியில் நடக்கும் நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்பும் போது மின்சாரத் தடை ஏற்படும் என்று கேபிள் டிவி உரிமையாளர்களுக்கு கூறப் பட்டுள்ளது’ என்று ‘தினமலர்’ நாளிதழ் வெளியிட்டிருந்த செய்தியை பகிர்ந்து குறிப்பிட்டிருந்தார்.

உடனே இதற்கு மறுப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசுத் தரப்பில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், “உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு குடமுழுக்கு நடைபெறுவதையொட்டி, தமிழ்நாட்டு கோயில்களில் சிறப்பு பூஜைகளும் அன்னதானமும் நடத்துவதற்கு தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை வாய்மொழியாக தடைவிதித்துள்ளது என ‘தினமலர்’ நாளிதழில் தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ஆலயப் பணிகளை அனைவரும் போற்றும் வகையில் நிறைவேற்றி வரும் தமிழ்நாடு அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்திடும் தீய நோக்கத்துடன் உண்மைக்கு மாறான செய்தியை வெளியிட்டு, பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி, அரசு மீது வெறுப்பைத் தூண்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ‘தினமலர்’ நாளிதழின் இச்செயல் மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும், “சில நாளிதழ்கள் தொடர்ந்து இது போன்ற பொய் செய்திகளை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால், உயர் பதவியில் இருக்க கூடிய நிர்மலா சீதாராமன் எதைப் பற்றியும் ஆராயாமல் ஒரு கருத்தை தெரிவிப்பது அவர் வகிக்கின்ற பதவிக்கு அழகல்ல. உணவுப் பாதுகாப்புத் துறையால் அனுமதிக்கப்பட்ட எந்த ஒரு திருக்கோவில்களிலும் உணவுகள் வழங்க தடையில்லை. அதேபோல் வழக்கமான பூஜை நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் எந்த தடையும் இல்லை” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்தான், இன்று காலையில் தி.நகர் கோதண்டராமர் கோயிலுக்கு சென்று திரும்பிய ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார். ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனல் பேட்டியில் இது குறித்த கேள்விக்கு பதிலளித்த கோதண்டராமர் கோயில் தலைமை அர்ச்சகர், “அப்படி எந்த வாய்மொழி உத்தரவும் எங்களுக்கு வரவில்லை. ஆளுநர் வரும்போது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் எங்களுடன் இருந்தனர். முன்னேற்பாடுகளை அவர்களும் இணைந்துதான் செய்தனர். சிறப்பு பூஜைக்கும் அன்னதானம் வழங்கவும் முழு உத்துழைப்பு தந்தனர்’” என்றார்.

இதனிடையே, ‘அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு நேரலையின் போது மின்சாரம் தடைபட வாய்ப்புள்ளதாக கேபிள் டிவி ஆபரேட்டர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டிருந்தை மறுத்து, தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தின் மாநில தலைவர் சுப. வெள்ளைச்சாமி, “அப்படி ஏதும் மாநில அரசாங்கத்திடம் இருந்து எங்களுக்கு அறிவுறுத்தல் வரவில்லை. அயோத்தி ராமர் கோவில் நேரலையை ஒளிபரப்புவது அந்தந்த ஊடகங்களின் உரிமை, அதில் தலையிட எந்த அரசுக்கும் உரிமையில்லை” என்று தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...