‘அன்னபூரணி’ படத்தில் ராமர் அசைவம் சாப்பிட்டார் என்ற கருத்தை பிரதிபலிக்கும் காட்சி இடம்பெற்றதற்காக நயன்தாரா மன்னிப்பு கேட்டுள்ளார்.
நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா நடித்த ‘அன்னபூரணி’ திரைப்படம் கடந்த மாதம் தியேட்டர்களில் வெளியானது. சில வாரங்களுக்குப் பின் இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியானது.
இப்படத்தில் ஆச்சாரமான பிராமண குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணாக நயன்தாரா நடித்துள்ளார், கதைப்படி நயன்தாராவின் அப்பா கோயிலில் பிரசாதம் சமைக்கும் வேலை செய்பவர். அவரது மகளான நயன்தாரா, இந்திய அளவில் மிகச்சிறந்த சமையல் கலைஞராக விரும்புகிறார். அதற்காக சமையல் கலை படிப்பில் சேரும் அவர், அசைவம் சமைக்கிறார்.
ஒரு கட்டத்தில் அவர் அசைவம் சாப்பிடவேண்டி வருகிறது. அதைச் சாப்பிடுவது தவறோ என்று நினைத்து நயன்தாரா கலங்க, அவரது இஸ்லாமிய நண்பரான ஜெய், ராமரே அசைவம் சாப்பிட்டதாக கூறி அவரை ஆறுதல்படுத்துகிறார். அதற்கு சான்றாக வால்மீகி ராமாயணத்தில் இருந்து ஒரு பகுதியை சொல்கிறார்.
இதே படத்தில் மற்றொரு காட்சியில், பிரியாணி செய்வதற்கு முன் நயன்தாரா இஸ்லாமிய முறைப்படி நமாஸ் செய்வதாகவும் ஒரு காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இது இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக கூறி, காவல் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் இந்துக்களின் மனதை இப்படத்தின் சில காட்சிகள் புண்படுத்துவதால் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்தும் அது நீக்கப்பட்டது.
இந்த சூழலில் அன்னபூரணி படம் தொடர்பான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, நயன்தாரா இன்று ஒரு அறிக்கையை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது…
ஜெய் ஸ்ரீ ராம்… எனது நடிப்பில் வெளியான ‘அன்னபூரணி’ திரைப்படம் கடந்த சில நாட்களாக பேசு பொருளாகியிருப்பது குறித்து கனத்த இதயத்துடனும் சுய விருப்பத்துடனும் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.
‘அன்னபூரணி’ திரைப்படத்தை வெறும் வணிக நோக்கத்துக்காக மட்டுமல்லாமல் ஒரு நல்ல கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சியாகவே பார்த்தோம். மன உறுதியோடு போராடினால் எதையும் சாதிக்கலாம் என்பதை உணர்த்தும் வகையிலேயே ‘அன்னபூரணி’ திரைப்படத்தை நாங்கள் உருவாக்கினோம். ‘அன்னபூரணி’ வாயிலாக ஒரு நேர்மறையான கருத்தை விதைக்க விரும்பிய நாங்கள் எங்களை அறியாமலேயே சிலரது மனங்களை புண்படுத்தியிருப்பதாக உணர்ந்தோம்.
தணிக்கை குழுவால் சான்றளிக்கப்பட்டு திரையரங்கில் வெளியான ஒரு படம் OTTயில் இருந்து நீக்கப்பட்டது நாங்கள் சற்றும் எதிர்பாராத ஒன்று. மற்றவர் உணர்வை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் எனது குழுவுக்கும் துளியும் இல்லை. கடவுளின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் நான் ஒருபோதும் இதை உள்நோக்கத்துடன் செய்திருக்க மாட்டேன்.
அதையும் மீறி உங்களின் உணர்வுகளை எந்த வகையிலாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். ‘அன்னபூரணி’ படத்தின் உண்மையான நோக்கம் ஊக்கமும் உத்வேகமும் அளிப்பது தானே தவிர யார் மனதையும் புண்படுத்துவது அல்ல. எனது 20 ஆண்டுகால திரைப் பயணத்தின் நோக்கம் ஒன்றே ஒன்றுதான் அது நேர்மறையான எண்ணங்களை பரப்புவதும், மற்றவர்களிடமிருந்து நல்லவற்றை கற்றுக் கொள்வதும் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.