சென்னையில் இருந்து கோவைக்கு செல்ல சில விமானங்களிலேயே சுமார் 3 ஆயிரம் ரூபாய்தான் கட்டணம். ஆனால் இந்த பொங்கல் பண்டிகையின்போது சில தனியார் பேருந்துகள் சென்னையில் இருந்து கோவைக்குச் செல்ல 5 ஆயிரம் ரூபாய் வசூலிப்பதாக தெரியவந்துள்ளது.
கோவைக்கு 5 ஆயிரம் ரூபாய் கட்டணம் என்றால் மற்ற ஊர்களுக்கு என்ன கட்டணம் வசூலிக்கிறார்களோ என்று பயமாக இருக்கிறதா?… அந்த பட்டியலும் வெளியாகி இருக்கிறது. அதன்படி மதுரைக்கு 3,960 ரூபாயும், திருநெல்வேலிக்கு 4,070 ரூபாயும், சேலத்துக்கு 3,140 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறதாம்.
அதி பயங்கரமான இந்த கட்டண உயர்வுக்கு 2 காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம் தமிழக அரசுக்கும், போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான மோதல். ஊதிய உயர்வு தொடர்பான அரசுடன் தங்கள் பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்படாவிட்டால், நாளைமுதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக போக்குவரத்து சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனால் பொங்கலுக்கு அரசு பேருந்துகள் இயங்குமா என்ற பயம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் பொங்கல் பண்டிகைக்கு ஒரு மாதம் முன்பே, சிறப்பு பேருந்துகள் பற்றிய அறிவிப்பு வெளியானது. ஆனால் இந்த ஆண்டு அப்படி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் பொருளாதார ரீதியாக கொஞ்சம் முன்னேறிய மக்கள், அரசு பஸ்களை நம்பி ரிஸ்க் எடுக்க தயாராக இல்லை. ரயிலிலோ அல்லது தனியார் ஆம்னி பேருந்துகளிலோ ஊருக்கு செல்ல அவர்கள் தயாராகி வருகிறார்கள். ரயில் டிக்கெட்கள் ஏற்கெனவே ஃபுல்லான நிலையில் எந்த விலை கொடுத்தாவது தனியார் பேருந்துகளில் செல்ல அவர்கள் தயாராகிவிட்டனர்.
அடுத்த காரணம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம். கோயம்பேட்டில் பேருந்து நிலையம் இருந்தபோது, அது சென்னையின் மையப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பயணம் செய்ய வசதியாக இருந்தது. ஆனால் இப்போது கோயம்பேட்டில் இருந்து பல கிலோமீட்டர்கள் தள்ளி இருக்கும் கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அரசு பேருந்துகளில் செல்ல வேண்டுமென்றால் முதலில் இங்கிருந்து கிளாம்பாக்கத்துக்கு செல்ல வேண்டும். அதுவே சில மணிநேரம் ஆகிவிடும் என்பதால் மக்களுக்கு சவுகரியமாக இல்லை. அதேநேரத்தில் பெரும்பாலான ஆம்னி பேருந்துகள் கோயம்பேடில் இருந்து புறப்படுகின்றன,
கிளாம்பாக்கத்தில் இருந்து சில தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டாலும், அந்த பேருந்து நிறுவனங்கள் தங்களிடம் டிக்கெட் வாங்கிய பயணிகளுக்காக சிறப்பு பேருந்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன. அதனால் அரசு பேருந்துகளில் செல்வதைவிட, தனியார் பேருந்துகளில் செல்வது மக்களுக்கு வசதியாக இருக்கிறது.
அரசுடனான போக்குவரத்து தொழிற்சங்கங்களின் பேச்சுவார்த்தை தோல்வியடைந்து, அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் நிலைமை இன்னும் மோசமாக வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அப்படி நடக்காது என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் உறுதி கூறியிருக்கிறார். போக்குவரத்து தொழிற்சங்கத்துடனான பேச்சுவார்த்தையில் சுமுகமான தீர்வு காணப்பட்டு, பொங்கலுக்கு முன் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அவர் கூறியிருக்கிறார்.