தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இந்தியா – தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையே கடந்த புதன்கிழமை தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டி 2 நாட்களுக்குள் முடிந்தது. வெறும் 642 பந்துகளே வீசப்பட்ட நிலையில் இப்போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா ஜெயித்துள்ளது. இதன்மூலம் மிகக் குறுகிய காலத்தில் முடிந்த டெஸ்ட் போட்டி என்ற சாதனையை இந்த டெஸ்ட் படைத்துள்ளது.
மீண்டும் முதலிடத்தில்:
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான புள்ளிப் பட்டியலில் இந்தியா முதல் இடத்தைப் பிடித்துள்ளது. முன்னதாக கடந்த வாரம் செஞ்சூரியன் நகரில் நடந்த டெஸ்ட் போட்டியில் தோற்றபோது இந்திய அணி புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டிருந்தது. இந்த சூழலில் இப்போது கிடைத்த வெற்றியின் மூலம் இந்தியா மீண்டும் முதல் இடத்துக்கு முன்னேறி இருக்கிறது.
புள்ளிப்பட்டியலில் இப்போது இந்திய அணி 54.16 புள்ளிகளை பெற்றுள்ளது. இந்த பட்டியலில் 50.00 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம் ஆகிய அணிகள் இரண்டாவது இடத்தில் உள்ளன. பாகிஸ்தான் அணி 45.83 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
கேப் டவுன் டெஸ்ட்டின் சாதனைகள்:
கேப் டவுனில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஏராளமான புதிய சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
இதற்கு முன்பு 1932-ம் ஆண்டில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடந்த டெஸ்ட் போட்டிதான் மிக குறைந்த பந்துகள் வீசப்பட்ட ஒருநாள் போட்டியாக இருந்தது. அந்த போட்டியில் மொத்தம் 656 பந்துகள் வீசப்பட்டிருந்தன. ஆனால் இப்போது கேப் டவுனில் நடந்த டெஸ்ட், 642 பந்துகளில் முடிந்து, மிகக் குறைந்த பந்துகளில் முடிந்த டெஸ்ட் போட்டி என்ற புதிய சாதனையை படைத்துள்ளது.
பேட்ஸ்மேன்களில் ஒருவர்கூட அரைசதம் அடிக்காமல் இந்திய அணி வெற்றி பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி என்ற சாதனையையும் இந்த டெஸ்ட் படைத்துள்ளது. இதற்கு முன்பு 2015-ம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இப்படி ஒரு பேட்ஸ்மேன்கூட அரைசதம் அடிக்காதபோதிலும் வெற்றியை ருசித்துள்ளது.
டெஸ்ட் போட்டிகளில் 9 முறை 5 விக்கெட்களுக்கு மேல் எடுத்த வீர்ர் என்ற சாதனையை இந்த டெஸ்ட் மூலம் பும்ரா படைத்துள்ளார். இதில் 8 முறை ஆசியாவுக்கு வெளியில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் அவர் இந்த சாதனையைப் படைத்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3 முறை அவர் 5 விக்கெட்களுக்கு மேல் எடுத்துள்ளார்.