பொதுவாக நடிகைகளில் பலர் முன்னணி கமர்ஷியல் ஹீரோக்களுடன் சேர்ந்து ஜோடியாக நடிப்பதில் ஆர்வம் காட்டுவார்கள். படம் ஓடினால் மற்ற ஹீரோக்களுக்கு ஜோடியாக ஒரு ரவுண்ட் வர தூதுவிடுவார்கள். மார்க்கெட் இருக்கும் போது சம்பாதிப்பதில் மும்முரமாக இருப்பார்கள். அதற்கு மேல் அவர்களது பேட்டியோ அல்லது கருத்துகளோ அவர்கள் நடிக்கும் படங்களைப் பற்றி மட்டுமே இருக்கும்.
குறிப்பாக அவர்கள் சார்ந்திருக்கும் சினிமா துறை குறித்தோ, திரைப்படங்கள் பற்றியோ அல்லது சமூகம் சார்ந்த கருத்துகளையோ சொல்ல விரும்ப மாட்டார்கள். ஆனால் இந்த நடிகைகளில் இருந்து மாறுபட்ட ஒரு சில நடிகைகளில் தாப்ஸியும் ஒருவர்.
உதாரணத்திற்கு, தற்போது திரைப்படங்களுக்கு நிலவும் பஞ்சாயத்து குறித்து வெளுத்து வாங்கியிருக்கிறார் தாப்ஸி. சமீபத்தில்தான் இவர் ‘தக் தக்’ என்ற படமொன்றைத் தயாரித்து இருக்கிறார்.
‘இன்றைக்கு சிறிய பட்ஜெட் படங்களுக்கு திரையரங்கு உரிமை, ஒடிடி உரிமை விஷயங்களில் பெரும் பிரச்சினை இருக்கிறது. சின்ன பட்ஜெட் படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு தயாரிப்பு செலவை ஈடுகட்ட ஒடிடி உரிமைகள் மூலம் கிடைக்கும் வருவாய் உதவியாய் இருக்கும். ஆனாலும் அந்தப் படத்தை விளம்பரப்படுத்தவும், பப்ளிசிட்டி செய்யவும் தயாரிப்பாளர் தனது கையிலிருந்துதான் பணத்தை இறக்கியாக வேண்டும்.
சின்ன பட்ஜெட் படங்களை ஒடிடி-யில் நேரடியாக ஸ்ட்ரீமிங் செய்தால், அதை வாங்கிய ஒடிடி நிறுவனம் அந்தப் படங்களுக்கு விளம்பரம் செய்வது இல்லை. பெரிய நட்சத்திரங்கள் இல்லாததால் ஒடிடி நிறுவனங்கள் விளம்பரப்படுத்த ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் அப்படியொரு புதிய படம் வெளியாகி இருப்பது ரசிகர்கள் யாருக்கும் தெரிவதே இல்லை.
ஒடிடி வேண்டாம் திரையரங்குகளில் வெளியிடலாம் என்று பெரும் பிரச்சினைகளுக்கு மத்தியில் வெளியிட்டாலும், திரையரங்குகள் அதிகளவில் கிடைப்பதில்லை. சரியான காட்சிகளும் கொடுக்கப்படுவதில்லை. இதனால் மக்களுக்கும் படம் வெளியானது தெரியாமலேயே போய்விடுகிறது. உடனே அந்தப் படங்களை ஃப்ளாப் என்று முத்திரை குத்திவிடுகிறார்கள். இந்தப் படங்களை ஒடிடி- நிறுவனங்கள் வாங்காமல் தவிர்த்து விடுகின்றன.
திரையரங்குகளில் வெளியாகும் படங்களை எட்டு வாரங்கள் கழித்து ஒடிடி-யில் ஸ்ட்ரீமிங் செய்கிறார்கள் என்றால், அந்தப் படங்களின் ரிசல்ட்டை வைத்து ரசிகர்கள் முடிவு செய்கிறார்கள். திரையரங்குகளுக்குப் போவதா அல்லது ஒடிடி-யில் பார்க்காலாமா என்று யோசிக்கிறார்கள்.