திருச்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள விமான முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். மேலும், தமிழ்நாட்டில் ரூ 20,140 கோடி மதிப்பிலான 20 திட்டங்களை பிரதமர் இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவியும் முதல்வர் ஸ்டாலினும் ஒரே மேடையில் பங்கேற்றனர். மேலும், பிரதமரின் இன்றைய திருச்சி விசிட்டில் நடந்தவை இங்கே…
பிரதமர் வரவேற்பில் மிஸ்ஸான அண்ணாமலை
திருச்சி வந்த பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வரவேற்றனர். பிரதமர் மோடி வருகையின் போது திருச்சி மாநகரம் தூய்மையாக இருக்க வேண்டும் ; ஒரு இடத்தில் கூட குப்பையே இருக்கக் கூடாது என கூறி தொண்டர்களுடன் களமிறங்கி இன்று காலை தூய்மைப் பணியில் ஈடுபட்டார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை. ஆனால், பிரதமர் மோடி காலை 10 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்த போது அவரை வரவேற்க அண்ணாமலை வரவில்லை. பாஜகவில் இருந்து நீக்கப்பட்டு மீண்டும் சேர்க்கப்பட்டவரும் அண்ணாமலை ஆதரவாளருமான திருச்சி சூர்யா கூட பிரதமரை வரவேற்க வந்திருந்தார். ஆனால், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பிரதமர் மோடியை விமான நிலையத்தில் வரவேற்கும் இடத்தில் தென்படவில்லை.
மாணவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து சொன்ன மோடி
விமான நிலையத்திலிருந்து, பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக, பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு காரில் சென்றார் பிரதமர். பாஜக சார்பில் வழி நெடுக அவருக்கு உற்சாக வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆங்காங்கே மேடை அமைத்து பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டன. சாலையில் திரண்டிருந்த பாஜகவினர் பிரதமரின் கார் கடந்தபோது மலர்தூவினர்.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு வந்த பிரதமர் மோடி அங்கு பாரதிதாசன் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். முன்னதாக பதக்கம் பெறும் மாணவர்களுடன் பிரதமர், ஆளுநர், முதல்வர் குழு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். பின்னர் மாணவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். பட்டம் பெற்ற மாணவர்களை நோக்கி “டெல்லிக்கு வர விருப்பமா?” என்று அவர் வினவினார். மாணவர்கள் உற்சாகமான குரலில் ஆமோதித்தனர்.
பாஜக – திமுகவினர் போட்டி கோஷம்
ரூ. 20,140 கோடி மதிப்பிலான 20 திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச எழுந்தபோது ‛மோடி.. மோடி..’ என பாஜகவினர் கோஷம் எழுப்பினர். இதனால் முதல்வர் பேசுவதற்கு இடைஞ்சலாக இருந்தது. அப்போது பிரதமர் மோடி கையசைத்து அமைதியாக இருக்கும்படி கேட்டும் அவர்கள் கேட்கவில்லை. இந்நிலையில் ‘மோடி மோடி’ என்ற கோஷமிட்டு கொண்டிருக்கும் போதே முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பேச்சை நிறுத்தாமல் தொடர்ந்தார். அதன் பிறகு கூட்டத்தினர் அமைதியாகினர். ஆனால், அதன்பிறகு முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தின் பெருமையை பேசியபோது திமுகவினர் ‛‛ஸ்டாலின்… ஸ்டாலின்…” என கோஷமிட்டனர்.
பிரதமருக்கு முதல்வர் கோரிக்கை
முதல்வர் ஸ்டாலின் பேசும்போது பிரதமருக்கு கோரிக்கைகளை வைத்தார். “திருச்சியில் புதிய விமான முனையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடிக்கு நன்றி. மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக அறிவிக்க பிரதமர் பரிசீலனை செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் சேலம் உள்பட பிற விமான நிலையங்களை நவீனமயமாக்க வேண்டும். மேலும் சென்னை – பினாங்கு, சென்னை -டோக்கியோ இடையே நேரடி விமான சேவையை தொடங்க வேண்டும். சென்னை மெட்ரோ பணிகளை விரைவுப்படுத்த வேண்டும். தமிழக வெள்ளப் பாதிப்புகளை சரிசெய்ய நிவாரண நிதி வழங்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
விஜயகாந்தை புகழ்ந்த மோடி
திருச்சியில் புதிய சர்வதேச விமான முனையத்தை தொடங்கி வைத்து பிரதமர் பேசும்போது, “தமிழ் குடும்பத்தை சேர்ந்த ஒவ்வொருவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். கனமழை காரணமாக கடந்த சில வாரங்கள் மிகவும் சிரமத்தை ஏற்படுத்தியது – மத்திய அரசு உங்களுக்கு எல்லா உதவிகளையும் செய்து வருகிறோம்.
விஜயகாந்தை நாம் இழந்துள்ளோம் – சினிமாவில் மட்டும் அல்ல அவர், அரசியலிலும் கேப்டனாக இருந்து வந்துள்ளார். விஜயகாந்த் மக்களின் இதயத்தை கொள்ளை கொண்டுள்ளார் – தேசிய நலனுக்கு விஜயகாந்த் செயல்பட்டுள்ளார். விஜயகாந்த் குடும்பத்தாருக்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
பாரத நாட்டின் பிரதிபலிப்பு தான் தமிழ் நாடு – தமிழகத்திற்கு வரும் போதெல்லாம் ஒரு புதிய சக்தியை நான் நிரப்பிச் செல்கிறேன். திருச்சி நகரம் என்றாலே வளமான வரலாற்று சான்றுகள் உள்ளது – பல்லவர்கள், சோழர்கள், நாயக்கர்கள் இங்கு ஆட்சி செய்துள்ளனர். தமிழ் கலாச்சாரம் குறித்து நண்பர்களுடன் கற்றுக் கொண்டுள்ளேன். உலகில் எங்கு சென்றாலும் தமிழகத்தை பற்றி தமிழ் மொழியை பற்றி நான் பேசாமல் வர மாட்டேன்.
தமிழ்நாடு மேக் இன் இந்தியா திட்டத்தில் பிராண்ட் அம்பசிடராக மாறி கொண்டுள்ளது. மாநில வளர்ச்சி மூலம் தேசத்தின் வளர்ச்சி என்பதை அடிப்படையாக வைத்து செயல்பட்டு வருகிறோம். தமிழகம் விரைவான வளர்ச்சி பெறும் போது கண்டிப்பாக தமிழக வளர்ச்சியால் நாடும் வளர்ச்சி அடையும். புதிய விமான முனையம் காரணமாக இணைப்பு திறன் மூன்று மடங்கு அதிகரிக்கும். திருச்சியில் விமான இனைப்பின் மூலம் பல்வேறு நாடுகளுக்கு செல்லும் வசதி. புதிய வணிகம் போன்ற பல சிறப்புகள் கிடைக்கும். தமிழகத்தில் ரயில் இணைப்புளை மேலும் வலு சேர்க்க ஐந்து புதிய திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம், சிதம்பரம், வேலூர், மதுரை, ராமேஸ்வரம் போன்ற சுற்றுலா இடங்களை அனைவரும் வந்து பார்க்க இந்த புதிய ரயில் சேவைகள் உதவும்” என்றார்.
சென்னை – சேலம் பயண நேரம் குறைகிறது
சேலம் – வாணியம்பாடி சாலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திருச்சியில் நடந்த விழாவில் நாட்டுக்கு அர்பணித்தார். இந்த சாலை பயன்பாட்டிற்கு வந்துள்ளதால், சென்னையில் இருந்து சேலம் செல்வோருக்கு பயண நேரம் கணிசமாக குறையும். இந்த வாணியம்பாடி – சேலம் நான்கு வழி சாலையில் பயணித்தால் சென்னையிலிருந்து சேலத்தை 5 மணி நேரத்தில் அடைய முடியும். தற்போதைய நிலையில் சேலத்தில் இருந்து சென்னை செல்ல பெரும்பாலும ஆத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலை 347 கிலோ மீட்டர் தூரம் உடையது. இந்த சாலை வழியாக கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், பகுதி மக்கள் சென்னை செல்கிறார்கள். ஏற்கனவே திருச்சி, மதுரை, திருநெல்வேலியில் இருந்து வரும் வாகனங்கள் உளுந்தூர் பேட்டையில் இணைவதால், அதன்பின்னர் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பொங்கல், தீபாவளி, வார இறுதி நாட்களில் பயணிப்பது சவாலாக உள்ளது. இனி இந்த சாலை வழியாக சென்னை டூ சேலம் 5 மணி நேரத்தில் போக முடியும் என்கிறார்கள்.
பாஜக முக்கிய பிரமுகர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
பிரதமர் மோடியின் திருச்சி வருகையில், பாராளுமன்ற தேர்தலுக்கு தமிழகத்தில் பாஜகவின் நிலைபாடுகளை குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற 5 மாநில தேர்தலில் பாஜக 3 இடங்களில் வெற்றி பெற்றது அந்த கட்சிக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது தமிழத்தில் இன்று மோடி வருகை அரசியல் ரீதியாகவும் இருக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு திருச்சியில் இருக்கும் ஓட்டலில் தமிழகத்தின் பாஜக நிர்வாகிகளை சந்திக்க உள்ளார் பிரதமர் மோடி. பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன். இராதகிருஷ்ணன், எச். ராஜா போன்ற 31 முக்கிய தலைவர்களை சந்திக்க தனித்தனியாக அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் கூட்டணி பற்றிய ஆலோசனைகளை பிரதமர் மோடி வழங்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.