யோகி அதித்யநாத்துக்குப் பிறகு அருண் யோகிராஜ்தான் இப்போதைக்கு உத்தரப் பிரதேசத்தின் ஹாட் டாபிக். அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் கருவறையில் இவர் வடிவமைத்த ராமர் சிலையைத்தான் பிரதிஷ்டை செய்யப் போகிறார்கள் என்பதே இதற்கு காரணம்.
அயோத்தியில் உள்ள ராமர் கோயில் கருவறையில் வைப்பதற்காக நூற்றுக்கணக்கான ராமர் சிலைகளை பலரும் வடிவமைத்துள்ளனர். இதில் மைசூருவில் வசிக்கும் அருண் யோகிராஜ் வடிவமைத்த சிலை, அயோத்தி ராமர் கோயிலில் உள்ள கருவறையில் வைப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, கடந்த புத்தாண்டு தினத்தன்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து யார் இந்த அருண் யோகிராஜ் என்ற கேள்வி பெரிய அளவில் எழுந்துள்ளது.
இந்தியாவின் புகழ்பெற்ற சிற்பிகளில் ஒருவரான அருண் யோகிராஜ் கர்நாடகாவின் மைசூரு பகுதியைச் சேர்ந்தவர். இவரது குடும்பம் கடந்த 5 தலைமுறையாக சிற்பங்களை வடிவமைப்பதில் ஈடுபட்டு வருகிறது. அவரது அப்பா யோகிராஜ், தாத்தா பசவண்ண சில்பி ஆகியோர் மைசூரு ராஜகுடும்பத்துக்காக ஏராளமான சிலைகளை வடித்துக் கொடுத்துள்ளனர்.
எம்பிஏ படித்தவரான அருண் யோகிராஜ், சில காலம் கார்ப்பரேட் நிறுவனத்தில் பணியாற்றி உள்ளார். பின்னர் அந்த தொழில் பிடிக்காததால் அதை விட்டுவிட்டு சிலைகளை வடிக்கும் குடும்ப வேலைக்கு வந்திருக்கிறார். 2008-ம் ஆண்டு முதல் அவர் இப்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்தியா கேட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 30 அடி உயர சுபாஷ் சந்திரபோஸ் சிலை, கேதார்நாத் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 12 அடி உயர ஆதி சங்கரர் சிலை, மைசூருவில் அமைக்கப்பட்டுள்ள 21 அடி உயர அனுமன் சிலை உள்ளிட்ட பல சிலைகளை அவர் வடிவமைத்துள்ளார்.