2023-ம் ஆண்டு முடிந்து 2024-ம் ஆண்டு பிறக்க இன்னும் சில நாட்கள்தான் இருக்கின்றன. புத்தாண்டை உற்சாகமாக கொண்டாட நாம் அனைவரும் தயாராகி வருகிறோம். கேக் வெட்டுவதும், பட்டாசு வெடிப்பதும், ஓட்டல்கள் மற்றும் கடற்கரை ஓரங்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுடன் புத்தாண்டை வரவேற்பதும்தான் நம் வழக்கம். ஆனால் இதைவிட வித்தியாசமான முறையில் சில நாடுகளில் புத்தாண்டு கொண்டாடப் படுகிறது. அவர்கள் எப்படி புத்தாண்டை கொண்டாடுகிறார்கள் என்று பார்ப்போம்…
பிரேசில்:
புத்தாண்டுக்கு பிறக்கும் இரவில் வெள்ளை நிற உடைகளை மட்டுமே அணிவது பிரேசில் மக்களின் வழக்கம். வெள்ளை நிற உடைகளை அணிவதுடன், யெமன்ஞ்சா என்ற கடல் தெய்வத்தை திருப்திப்படுத்த, கடற்கரையில் அவர்கள் மலர்களை தூவுவார்கள்.
ஸ்பெயின்
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர்கள் புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் 12 திராட்சைப் பழங்களைச் சாப்பிடுவார்கள். புது ஆண்டில் வரும் 12 மாதங்களும் அதிர்ஷ்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்பதற்காக அவர்கள் 12 திராட்சைப் பழங்களை சாப்பிடுவதாக சொல்லப்படுகிறது.
ஜப்பான்
புத்தாண்டு தொடங்கும் நேரத்தில் ஜப்பனிய கோயில்களில் 108 முறை மணிகளை ஒலிக்கவிடுவது வழக்கம். மனிதர்களின் துன்பங்களுக்கு காரணமான 108 வகை ஆசைகளில் இருந்து விடுபடுவதற்கு இறைவனின் ஆசியை வேண்டி இந்த 108 மணிகளை ஒலிக்க விடுவதாக கூறப்படுகிறது.
ஸ்காட்லாந்து
ஸ்காட்லாந்து நாட்டில் புத்தாண்டு பிறந்த பிறகு ஒரு வீட்டில் முதலாவதாக காலடி எடுத்து வைக்கும் விருந்தினர், ஒரு பரிசுப் பொருளையாவது கொண்டு செல்ல வேண்டும் என்பது ஐதீகம். அப்போதுதான் அந்த வீட்டுக்கு ஆண்டு முழுக்க செல்வங்கள் சேரும் என்பது அவர்களின் நம்பிக்கை.
டென்மார்க்
நண்பர்கள் வீட்டு கதவின்மீது உடையக்கூடிய பாத்திரங்களை வீசி எறிந்து உடைப்பது டென்மார்க் மக்களின் புத்தாண்டு கொண்டாட்ட ஸ்டைல். அப்படி பாத்திரங்களை வீசி எறிந்து உடைப்பதால், நட்பு வலுப்படுவதுடன், நல்ல அதிர்ஷ்டம் வந்து சேரும் என்பது அவர்களின் நம்பிக்கை.
கிரீஸ்
கிரீஸ் நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக பெரிய கேக் தயாரிக்கும்போது அதில் ஒரு நாணயத்தையும் போட்டு வேகவைப்பார்கள். நாணயத்துடன் கூடிய கேக் துண்டு யாருக்கு கிடைக்கிறதோ, அவருக்கு அந்த ஆண்டு அதிர்ஷ்டமாக இருக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை.
தென் ஆப்பிரிக்கா
நம் ஊரில் போகி கொண்டாடுவதைப் போல்தான் தென் ஆப்பிரிக்காவில் புத்தாண்டைக் கொண்டாடுகிறார்கள். நாம் போகியன்று பழைய பொருட்களை எரிப்போம். ஆனால் தென் ஆப்பிரிக்க மக்கள், புத்தாண்டின்போது வீட்டில் உள்ள பழைய மரச் சாமான்களை ஜன்னல் வழியாக தூக்கி எறிவார்கள்.
பிலிப்பைன்ஸ்
வட்டமான பொருட்கள் அதிர்ஷ்டத்தை கொண்டுவரும் என்பது பிலிப்பைன்ஸ் மக்களின் நம்பிக்கை. அதனால் அவர்கள் புத்தாண்டுக்கு வட்ட வடிவமான உடைகளையே அணிவார்கள். வட்ட வடிவமான பழங்களையே சாப்பிடுவார்கள்.
ரஷ்யா
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ரஷ்யர்கள் அந்த ஆண்டுக்கான விருப்பங்களை ஒரு தாளில் எழுதி அதை எரிப்பார்கள். பின்னர் அந்த சாம்பலை மதுவிலோ, அல்லது தாங்கள் குடிக்கும் பழரசத்திலோ கலந்து குடிப்பார்கள். அப்படி செய்வதால் தங்கள் விருப்பங்கள் அந்த ஆண்டுக்குள் நிறைவேறும் என்பது அவர்களின் நம்பிக்கை.
அமெரிக்கா
நியூயார்க் நகரத்தில் உள்ள டைம்ஸ் ஸ்குயரில் பந்துகளை போட்டுவிட்டுச் செல்வது அங்குள்ள அமெரிக்கர்களின் வழக்கம். இதனால் ஒவ்வொரு ஆண்டும் அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து பந்துகளை போட்டுவிட்டுச் செல்வார்கள்.