No menu items!

தயாநிதி மாறனின் பழைய வீடியோ கூட்டணியை உடைக்குமா?

தயாநிதி மாறனின் பழைய வீடியோ கூட்டணியை உடைக்குமா?


“அதிமுக பொதுக்குழு ஸ்பாட்டுக்கு வந்திருக்கேன். அதனால போன்லையே செய்திகளை சொல்றேன் குறிச்சுக்கங்க” என்றபடி சொல்ல ஆரம்பித்தாள் ரகசியா.

“பொதுக்குழு எப்படி? எடப்பாடி ஹேப்பியா?”

“சூப்பர் ஹேப்பி. அவர் நினைச்சதெல்லாம் நல்லா நடந்துக்கிட்டு இருக்கு. எடப்பாடி பொதுச் செயலாளரா தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு நடக்கற முதல் பொதுக்குழு இது. அதனால பொதுக்குழுவுக்கு வர்ற எடப்பாடிக்கு பிரம்மாண்டமான முறையில வரவேற்பு கொடுக்க அவரோட ஆதரவாளர்கள் தயாரா இருந்தாங்க. ஆனா வெள்ள பாதிப்பால மக்கள் கஷ்டப்படற இந்த நேரத்துல பொதுக்குழுவுல எந்த ஆடம்பரமும் வேண்டாம்னு அவங்ககிட்ட எடப்பாடி சொல்லியிருக்கார். அதனால பெரிய அளவுல ஆர்ப்பாட்டம் இல்லாம பொதுக்குழு அமைதியா நடந்தது”

“எல்லாருக்கும் சைவ சாப்பாடுதானாமே! அசைவத்தை தள்ளி வச்சிட்டாங்களே? ஏன்?”

“மார்கழி மாசம். நிறைய பேர் ஐயப்ப சாமிக்கு விரதம் இருக்கிறாங்க. அதனால அசைவம் வேண்டாம்னு சொல்லிட்டாராம் எடப்பாடி?”

“அதிமுகவோட மதுரை மாநாட்டுல சைவம் போட்டது பிரச்சினையாச்சே அதுனால இப்ப அசைவம் போடுவாங்களோனு நினைச்சேன்”

“சாப்பாட்டுலேயே இருக்கீங்க. பொதுக்குழு தீர்மானம் பத்திலாம் எதுவும் கேக்க மாட்டிங்களா?”

“எல்லாம் தெரிஞ்சதுதானே…எல்லா பவரும் எடப்பாடிக்குதான்னு தீர்மானம் போட்டிருக்காங்க. திமுக அரசைக் கண்டிச்சிருப்பாங்க. அதுக்கு மேல வேற என்ன இருக்கப் போகுது”

“பாஜக கூட்டணி இல்லன்றதை உறுதியா சொல்லியிருக்கிறார் கவனிச்சிங்களா? இனிமே சிறுபான்மையினர் காவலன் அதிமுகதான்னு எடப்பாடி பேசியிருக்கிறார்”

”பாஜகவை விமர்சனம் செஞ்சு ஏதாவது பேசுனாரா?”

“இல்லை. கூட்டணி இல்லன்றது மட்டும்தான். வேற எக்ஸ்ட்ரா வார்த்தை எதையும் விடல. உஷாராதான் இருந்தார்”

“பொதுக் குழுவுல வேற என்ன பேசுனாங்க?”

“பாஜக கூட்டணி இல்லாத பட்சத்துல பாமகவையாவது கூட்டணியில சேர்த்துக்கலாம்னு சிலர் சொல்லி இருக்காங்க. அதுக்கு கொஞ்சம் எதிர்ப்பு வந்திருக்கு. பாமகவை வளர்த்துவிட வேணாம்னு சிலர் சொன்னாங்களாம். கூட்டணி பத்தி இறுதி முடிவு எடுக்கற அதிகாரத்தை எடப்பாடிக்கு கொடுத்திருக்காங்க.”

“வெள்ள பாதிப்பை பார்க்க நிர்மலா சீதாராமன் ஸ்பெஷலா வந்திருக்காரே?”

“ஆமாம். தமிழ்நாடு சம்பந்தப்பட்ட விஷயத்தையெல்லாம் நிர்மலா சீதாராமன் தான் பாத்துக்கிறாங்க. இதனால திமுக டென்ஷனாவுதோ இல்லையோ, அண்ணாமலை டென்ஷன்ல இருக்கார். தமிழக அரசின் வெள்ள நிவாரணப் பணி மற்றும் தமிழக அரசியல் பற்றி பேசறதுக்காக அவர் டெல்லி போயிருக்கார். அமித் ஷாவை சந்திக்க நேரம் கேட்டப்ப, ‘தமிழகம் சம்பந்தமா நீங்கள் பேச வேண்டியது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கிட்டதான் அதனால நீங்க அவரைப் பாருங்க’ன்னு சொல்லிட்டாராம். அது அண்ணாமலைக்கு முதல் அப்செட். இருந்தாலும் மனசை தேத்திட்டு நிர்மலா சீதாராமனை சந்திக்க முடிவெடுத்து இருக்கார். இதுகாக அண்ணாமலை நேரம் கேட்க, தமிழக பாஜக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டியையும் கூட கூட்டிட்டு வாங்கன்னு நிர்மலா சீதாராமன் சொல்லி இருக்கார். இது அண்ணாமலைக்கு ரெண்டாவது அப்செட். இதுக்கு பிறகும் அவர் நிர்மலா சீதாராமனை சந்திக்கப் போக, அவர் இந்த சந்திப்புல கலந்துக்க சொல்லி மத்திய அமைச்சர் முருகனையும் கூப்ட்டிருக்கார். தனக்கும் முருகனுக்கும் ஆகாதுன்னு தெரிஞ்சும், முருகனை நிதி அமைச்சர் கூப்ட்டதுல அண்ணாமலை டோட்டல் அப்செட்.”

”தமிழக நிலவரம் பத்தி பேசறதுக்காக நிர்மலா சீதாரமன் நடத்தின பிரஸ் மீட்ல அண்ணாமலை கலந்துக்கலயே?”

“இதுல கலந்துக்க அண்ணாமலை விருப்பமாத்தான் இருந்தார். அதை நிர்மலா சீதாராமன் கிட்டயும் அவர் தெரிவிச்சிருக்கார். ஆனால் அண்ணாமலை இந்த பிரஸ் மீட்ல கலந்துக்க நிர்மலா சீதாராமன் பர்மிஷன் கொடுக்கல. ‘இது மத்திய அமைச்சர் என்ற முறையில் மத்திய அரசு ஏற்பாடு செய்திருக்கும் பிரஸ் மீட். இதுல நீங்க கலந்துகிட்டா நல்லா இருக்காது’ன்னு சொல்லி பிரஸ் மீட்ல அண்ணாமலையை ஓரம் கட்டிட்டாங்க”

“அண்ணாமலை டென்ஷன் ஆனது கிடக்கட்டும். நிர்மலா சீதாரமன் எதுக்கு தமிழக வெள்ளம் பத்தி திடீர்னு பிரஸ் மீட்லாம் நடத்தினாங்க?”

“பிரதமரோட யோசனைப்படி அவர் செய்தியாளர்களை சந்திச்சதா சொல்றாங்க. இந்த பிரஸ் மீட்ல வட மாநில செய்தியாளர்களைவிட தமிழக செய்தியாளர்களுக்குதான் அவர் அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கார். பிரதமர் எதிர்பார்த்தா மாதிரியே இந்த பிரஸ் மீட்டுக்கு நல்ல ரெஸ்பான்ஸ். நிர்மலா சீதாராமனோட பேட்டி பரபரப்பானதும், தமிழக வெள்ள நிலைமையை பார்வையிட அவரை பிரதமர் அனுப்பி வைச்சிருக்கார். மெல்ல மெல்ல அவரை தமிழக அரசியல்ல பிரதமர் தீவிரமா இறக்கி விடறார்”

“பொதுவா வெள்ளப் பகுதிகளை பிரதமரோ இல்லை உள்துறை அமைச்சரோதானே பார்ப்பாங்க. நிதி அமைச்சர் பார்வையிடறது புதுசா இருக்கே?”

“நிர்மலா சீதாராமன் இங்க வந்ததுக்கு இன்னொரு காரணமும் இருக்கு. வெள்ளத்துக்கு முன்னாடியே, டிசம்பர் 27-ம் தேதி ராமநாதபுரத்தில் மத்திய அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லும் பிரச்சார இயக்க நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் கலந்துக்கறதா இருந்தார். ராமநாதபுரம் மாவட்ட நிகழ்ச்சிகள்ல கலந்துக்கிட்டு வெள்ளப் பகுதிகளை அவர் பார்வையிடலைன்னா திமுக அதை அரசியலாக்கிடும். அதனாலதான் அவரோட நிகழ்ச்சி நிரல்ல வெள்ளப் பகுதிகளை பார்வையிடறதையும் சேர்த்துக்கிட்டார்னு சொல்றாங்க.”

“நிர்மலா சீதாராமனைப் போலவே இன்னொருத்தரும் தமிழக அரசியல்ல தீவிரம் காட்டத் தொடங்கி இருக்காரே?”

“தமிழிசை சவுந்தர்ராஜனைத்தானே கேட்குறீங்க. தெலங்கானா முதல்வரான அவர், ஊர்ப் பாசத்தால தூத்துக்குடி, திருநெல்வேலி வெள்ளப் பகுதிகளை பார்வையிட்டு இருக்கார். நிவாரணப் பணிகள் வேகமா இல்லைன்னு தமிழக அரசு மீது குற்றம் சாட்டியிருக்கார். அவர் திரும்பவும் அரசியலுக்கு வர்றதுக்கான முதல் படி இதுன்னு சொல்றாங்க. தமிழிசை திரும்பவும் அரசியலுக்கு வந்தா, அவர் தூத்துக்குடி தொகுதியில போட்டியிட வாய்ப்புகள் அதிகமாம்.”

”தேர்தல்ல நின்னு ஜெயிக்க முடியாதுனு சேகர் பாபு பேட்டி கொடுத்திருக்கிறாரே?”

“அது உண்மைதானே…இதுக்கு முன்னாடி அப்படிதானே நடந்திருக்கு.”

திமுக நியூஸ் ஏதும் இல்லையா?”

“அங்க இப்பவும் பொன்முடிதான் ஹாட் டாபிக். பொன்முடி வழக்கு நமக்கு சங்கடமா இருக்கும்னு திமுகலயே ஒரு க்ரூப் பேச ஆரம்பிச்சிருக்கு”

“அவருக்கு முன்னயே அமைச்சர் செந்தில்பாலாஜி, செல்வகணபதி மேல எல்லாம் நடவடிக்கைகள் வந்திருக்கே?”

“ஆனா அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த தவறுகளுக்காகத்தான் அவங்க மேல நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கு. ஆனா பொன்முடி அப்படி இல்லை. திமுக ஆட்சியில் செய்த தவறுக்காக அவர் மேல நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கு. அதனால அவர் விஷயத்தை அதிமுக ரொம்பவே பெருசுபடுத்தும்னு திமுக தலைவர்கள் நினைக்கறாங்க. அதேநேரத்துல பொன்முடியும் கொஞ்சம் வருத்தத்துல இருக்கறதா சொல்றாங்க.”

“பொன்முடிக்கு என்ன வருத்தம்?”

“செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட மருத்துவமனைக்கு போய் அவரை முதல்வர் பார்த்தார். முதல்வர் மட்டுமில்லாம அவரோட குடும்ப உறுப்பினர்களும் போய் பார்த்தாங்க. ஆனா பொன்முடியை அவர் போய் சந்திக்கல. தீர்ப்புக்கு பிறகு பொன்முடி போய் முதல்வரை சந்திச்சாலும், அவரா தன்னை வந்து சந்திக்கலையேன்னு பொன்முடிக்கு வருத்தம். அதேநேரத்துல பொன்முடி மேல முதல்வருக்கும் ஒரு வருத்தம் இருக்கு.”

“அவருக்குமா?”

“ஆமா. பொன்முடி வீட்டுக்குப் போய் மு.க.அழகிரி சந்திச்சதை முதல்வர் ரசிக்கவிலை இந்த சந்திப்பை பொன்முடி சாமர்த்தியமாக தவிர்த்து இருக்கணும்னு அவர் நினைக்கறாராம்.”

காங்கிரஸ் தலைவர் முகுல் வாஸ்னிக் தமிழ்நாட்டுக்கு வர்றதா கேள்விப்பட்டேனே?”

“தொகுதி பங்கீடு பற்றி பேசத்தான் இந்த வார இறுதியில அவர் வர்றாராம். முதலில் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் தொகுதி பங்கீடு பற்றி பேச்சு நடத்திட்டு, அதன்பிறகு முதல்வர் ஸ்டாலினை சந்திக்க அவர் திட்டமிட்டிருக்கார். திமுகவைப் பொறுத்தவரை முதலில் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு சுமூகமாக முடிஞ்ச பிறகு மற்ற கட்சிகளை அழைத்து பேசலாம்னு திட்டம் போட்டிருக்காங்களாம்.”

”காங்கிரஸ் கூட்டணில திமுக இருக்குமா? அதுவே டவுட்னு சொல்றாங்களே?”

”நானும் கேட்டேன்.அப்படிலாம் இல்ல. காங்கிரஸ் கூட்டணிலதான் திமுக இருக்கும்னு அறிவாலயத்துல அடிச்சு சொல்றாங்க”

“தயாநிதி மாறன் பீகார் ஆட்களைப் பத்தி பேசுனது, சனாதனம் பத்தி உதயநிதி பேசுனதுனு சோஷியல் மீடியாவுல வந்துக் கிட்டே இருக்கே. திமுகவை கூட வச்சுக்கிட்டு வட இந்தியாவுல காங்கிரஸ் வாக்கு கேக்க முடியாதுனு சொல்றாங்களே?”

“அது பழைய வீடியோ. திமுககாரங்க யாரும் தேர்தல் முடியற வரை வட இந்தியா, மதம் பத்தியும் பேசக் கூடாதுனு கட்டுப்பாடு போட்டுருக்காங்க. தயாநிதி பேசுனதுக்கெல்லாம் கூட்டணி உடையாதுனு அடிச்சு சொல்றாங்க”

“உதயநிதி பேசியிருக்கிறாரே. நான் எந்த மதமும் இல்லை எந்த சாதியும் இல்லனு”

“அரச குடும்பத்துல பிறந்தவங்களுக்கு சட்டம் இருக்கா?” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...