ஜப்பான் (தமிழ்) – நெட்பிளிக்ஸ்
ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்து கடந்த மாதம் ரிலீஸான ‘ஜப்பான்’ இப்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன் நடந்த நகைக் கொள்ளையின் அடிப்படையில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
கோவையில் ஒரு பெரிய நகைக்கடையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகை கொள்ளையடிக்கப்படுகிறது. ஜப்பான் என்ற மிகப்பெரிய நகைத்திருடன் இந்த நகைக் கொள்ளையில் ஈடுபட்டதாக சந்தேகப்படும் போலீஸார், அவனை வலைவீசி தேடுகிறார்கள். ஆனால் தான் இந்த கொள்ளையில் ஈடுபடவில்லை என்று கூறும் ஜப்பான், இன்னொரு வழியில் உண்மையான கொள்ளையனைத் தேடி அலைகிறான். ஜப்பானால் உண்மையான கொள்ளையனை கண்டுபிடிக்க முடிந்ததா? போலீஸார் ஜப்பானை பிடித்து விடுகிறார்களா என்பதுதான் படத்தின் கதை.
குக்கூ, ஜோக்கர் போன்ற கலைப்படங்களை இயக்கிய ராஜு முருகன், முதல் முறையாக கார்த்தி போன்ற பெரிய நட்சத்திரத்தை வைத்து படம் இயக்கியிருக்கிறார். இதனால் கலைப் படமாக எடுப்பதா… இல்லை கமர்ஷியல் படமாக எடுப்பதா என்று பல இடங்களில் அவர் குழம்பியிருப்பது படத்தைப் பார்க்கும்போது தெரிகிறது.
கார்த்தியின் வித்தியாசமான நடிப்புக்காக மட்டும் ஒருமுறை பார்க்கலாம்.
சால்ட் மேங்கோ ட்ரீ (Salt Mango Tree –மலையாளம்) – அமேசான் ப்ரைம்
நகரில் மெடிகல் ஷாப் வைத்திருப்பவர் பிஜு மேனன். அவரது மனைவி ப்ரியா லஷ்மி ப்ரியாவுக்கு தங்கள் மகனை எப்படியாவது நகரின் பெரிய பள்ளியில் சேர்த்துவிட வேண்டும் என்று ஆசை. இதற்காக பயிற்சி கொடுக்கிறேன் என்ற பெயரில் மகனையும், தனது கணவரையும் பல வழிகளில் கஷ்டப்படுத்துகிறார்.
பல பள்ளிகளும் கைவிட்ட நிலையில் கல்வியாளரான சுகாசினியின் உதவியை அவர்கள் நாடுகிறார்கள். அவர்கள் மகனுக்கு பெரிய பள்ளியில் இடம் கிடைத்ததா இல்லையா என்பதுதான் இப்படத்தின் கதை.
ஒவ்வொரு பெற்றோரும் நல்ல பள்ளியில் தங்கள் குழந்தைக்கு சீட் வாங்க எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்பதை நகைச்சுவை கலந்து சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்கள்.
கிடா (தமிழ்) – ஆஹா, அமேசான் ப்ரைம்
தீபாவளிக்கு பேரன் கேட்ட உடையை வாங்கிக் கொடுக்க, அவன் செல்லமாக வளர்க்கும் ஆட்டை விற்க முடிவு செய்கிறார் பூ ராமு. சாமிக்கு நேர்ந்துவிட்ட ஆடு என்பதால் அதை வாங்க வியாபாரிகள் தயங்குகிறார்கள். தன் முதலாளிக்கு எதிராக சொந்தமாக ஒரு கசாப்பு கடையை திறப்பதாக சபதம் செய்யும் காளி வெங்கட், அந்த ஆட்டை வாங்குவதாக கூறுகிறார்.
தீபாவளிக்கு முன்தினம் அவர் ஆட்டை வாங்குவதற்காக பணத்துடன் வரும்போது அந்த அடு திருடுபோகிறது. ஆடு திரும்பவும் கிடைத்ததா? காளி வெங்கட்டால் கசாப்பு கடை போட முடிந்ததா? தாத்தாவால் பேரன் கேட்ட உடையை வாங்கிக் கொடுக்க முடிந்ததா என்பதுதான் படத்தின் கதை.
பரபரப்பான ஆக்ஷன் படங்களுக்கு மத்தியில் இப்படம் தென்றலாய் வீசி மனதை வருடிச் செல்கிறது.
கூஸ் முனுசாமி வீரப்பன் (தமிழ் டாக்குமெண்டரி சீரிஸ்) – ஜீ5
சந்தனக் கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட கூஸ் முனுசாமி வீரப்பன் டாக்குமென்டரி தொடர் ஜீ5 ஓடிடியில் வெளியாகி உள்ளது.
வீரப்பன் உயிருடன் இருந்த காலத்தில் அவருடன் பழகிய நக்கீரன் கோபால் உள்ளிட்டோரின் மேற்பார்வையில் இத்தொடர் தயாரிக்கப்பட்டுள்ளது. வீரப்பனின் வாழ்க்கை முறை மற்றும் அவனது போராட்டங்களை இத்தொடர் சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளது.