No menu items!

 அப்செட் அண்ணாமலை ஹேப்பி பிரேமலதா – மிஸ் ரகசியா

 அப்செட் அண்ணாமலை ஹேப்பி பிரேமலதா – மிஸ் ரகசியா

“விஜயகாந்தைப் பாத்திங்களா? ரொம்ப பாவமா இருக்கு” என்று வருத்தப்பட்டுக் கொண்டே அலுவலகத்துக்குள் வந்தாள் ரகசியா.

“ஆமாம். அவரை எதுக்கு மேடை ஏத்துனாங்க? அவரை வச்சு இவங்கலாம் கேம் ஆடிக்கிட்டு இருக்காங்க. தொண்டர்கள் யாரும் இதை சொல்லலையா?”

“பொதுக் குழு அவசர அவசர கூட்டி அந்தம்மா தன்னை பொதுச் செயலாளராக்கிக்கிட்டாங்கன்ற பேச்சு தொண்டர்கள் கிட்ட இருக்கு. இப்பதான் ஆஸ்பத்திரிலருந்து வந்த மனுஷனை இப்படி பண்ணலாமானு கேள்விகளும் வந்துருக்கு”

“ஆனா, மாவட்டச் செயலாளர்கள் எல்லாம் பிரேமலதாவை பொதுச் செயலாளரா தேர்ந்தெடுத்திருக்காங்களே?”

“அவங்களுக்கு வேற வழி கிடையாது. மாவட்ட செயலாளரா இருக்கணும்னா அவங்க தலைமையை ஏத்துக்கணும். அது மட்டுமில்லாம. இப்ப கொஞ்ச வருஷமா அவங்க தலைமைலதான் கட்சி நடந்துக்கிட்டு இருக்கு. அதனால அவங்களுக்கு இது புதுசு இல்லை. பொது செயலாளர் ஆனதுல பிரேமலதா ஹேப்பி. கட்சியை செல்வாக்கை கூட்டணும்னு சீரியசா கட்சிக்காரங்ககிட்ட பேசியிருக்கிறார்”

“இன்னும் தேமுதிகவுக்கு செல்வாக்கு இருக்கா? யார் கூட கூட்டணி வைக்கப் போறாங்க?”

“விஜயகாந்த் இருக்கிற நிலையைப் பாத்துட்டு அவரால தேர்தல் பிரச்சாரத்துக்கெல்லாம் வர முடியாதுனு அதிமுக தலைமை நினைக்குது. விஜயகாந்த் தேர்தல் பரப்புரை செய்யலனா அவங்க கூட்டணி வைக்கிறது வேஸ்ட்னு முடிவு பண்ணியிருக்கு. அதனால அதிமுக கூட்டணிக்கு வாய்ப்பில்லை. திமுக கூட்டணி ஃபுல்லா இருக்கு. அதனால ஒரே வாய்ப்பு பாஜகதான். அவங்களும் கூட்டணிக்கு ஆள் தேடிக்கிட்டு இருக்காங்க”

”அப்போ இந்த முறை பாஜக பெரிய கூட்டணி அமைக்குமா?”

“இப்போதைக்கு தேமுதிக, ஓபிஎஸ், பாரிவேந்தர்னு லிஸ்ட் ரெடியாகிட்டு இருக்கு. தினகரனையும் சசிகலாவையும் சேர்த்துக்கணும்கிறது மேலிடத்து விருப்பம். அதற்கான முயற்சிகள்ல பாஜக இருக்கு”

“அண்ணாமலைதான் எல்லாத்தையும் சாதிக்கிறவரே. மாசம் எட்டு லட்சம் கொடுக்கிற நண்பர்கள் இருக்கும்போது அவர் இந்த கூட்டணியை அமைச்சிட மாட்டாரா?”

“உங்க நக்கல் புரிது. ஆனா அவரே அப்செட்ல இருக்கார்”

“அண்ணாமலை அப்செட்டா? என்னாச்சு?”

 “ரெண்டு காரணம் இருக்கு. முதல் காரணம் நிர்மலா சீதாராமன். தமிழக பாரதிய ஜனதா கட்சியோட முக்கிய முடிவுகளை எடுக்கற இடத்துல இப்ப நிர்மலா சீதாராமன் இருக்கார். அவருக்கு டெல்லி தலைமையோட முழு ஆதரவு இருக்கு. அந்த அதிகாரத்தை வச்சு பல விஷயங்கள்ல அண்ணாமலைக்கு குடைச்சல் கொடுத்துட்டு வராங்க நிர்மலா சீதாராமன்.  இது அண்ணாமலை எதிர்ப்பாளர்களுக்கு வசதியா போயிருச்சு. நிர்மலாவும் அவங்களை வச்சு பாலிடிக்ஸ் பண்ணிட்டு இருக்கார். சமீபத்துல  39 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர்களை அண்ணாமலை நியமிச்சார். அந்த பட்டியலை அண்ணாமலை டெல்லிக்கு அனுப்ப, அவங்க நிர்மலாஜிக்கு அனுப்பி இருக்காங்க. பட்டியலை வாங்கிப் பார்த்த நிர்மலா சீதாராமன் சில மாற்றங்களை பண்ணியிருக்கார். குறிப்பா வீடியோ  சர்ச்சையில் சிக்கி கொஞ்ச நாளா அரசியல்ல இருந்து ஒதுங்கி இருக்கற கே.டி.ராகவனை அந்த பட்டியல்ல சேர்க்கச் சொல்லி சிபாரிசு பண்ணியிருக்கார். அண்ணாமலையும் வேற வழியிலாம அவர் பெயரைச் சேர்த்திருக்கார் இது முதல் காரணம்.”

 “ரெண்டாவது காரணம் என்ன?”

 “சென்னையில புயல் மழையால பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட மத்திய குழு, தமிழக அரசின் நடவடிக்கைகளை பாராட்டி இருக்கு.  ‘சரியான நேரத்தில் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட்டீங்க. இல்லைன்னா பெரிய சேதம் ஏற்பட்டிருக்கும். நீங்க எடுத்த நடவடிக்கையால பாதிப்பு குறைஞ்சிருக்கு’ன்னு சொல்லி இருக்காங்க. இதை மேற்கோள் காட்டி தமிழக அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டிருக்கு. திமுக அரசு வெள்ளத்தை தடுக்க ஒண்ணுமே செய்யலைங்கிற அண்ணாமலையோட குற்றச்சாட்டுக்கு இதை பதிலா சொல்றாங்க திமுக அமைச்சர்கள்.  நம்ம விரலை வச்சே நம்ம  கண்ணை குத்திட்டாங்களே’ன்னு அண்ணாமலை அப்செட்ல ஆகிட்டாராம்.”

“திமுகவுக்கும் பாஜகவுக்கும் உறவு இருக்கு. அதான் இந்த பாராட்டுனு அதிமுகவினர் இதை வச்சு சொல்றாங்களே”

“ஆமாம். மத்திய குழுவின் ஸ்டேட்மெண்ட் அவங்களுக்கு வசதியாய் போயிருச்சு”

 “வெள்ளம்னு நீ சொன்னதும் ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருது. வெள்ள நிவாரண நிதி கலெக்‌ஷன் எந்த அளவுல இருக்கு?”

 “சினிமா பிரபலங்கள் கிட்ட இருந்து பெரிய அளவுல நிதி வரலைங்கிற  வருத்தம் உதயநிதி ஸ்டாலினுக்கு. சிவகார்த்திகேயன், விஷ்ணு விஷால் மாதிரியான லேட்டஸ்ட் நடிகர்கள் தரும் அளவுக்கு விஜய், அஜித் போன்ற மூத்த நடிகர்களும், தயாரிப்பு நிறுவனங்களும் நிதி  தரலையேன்னு வருத்தத்துல இருக்கார். நிதி விஷயத்துலதான் இப்படின்னா கருணாநிதி நூற்றாண்டு விழா நிகழ்ச்சியிலயும் திரையுலக முன்னணி கலைஞர்கள்கிட்ட இருந்து ரெஸ்பான்ஸ் இல்லையாம்.”

 “ரஜினி, கமல் வர்றதா சொல்லி இருக்காங்களே?”

 “அவங்க வந்தா போதுமா? இப்போதைய முன்னணி நடிகர்கள் வர வேண்டாமா?  இந்த விழால கலந்துக்க முடியாதுன்னு விஜய்யும், அஜித்தும் உறுதியா சொல்லி இருக்காங்க. ஹைதராபாத்ல நடக்கற ஷூட்டிங்கை விஜய் காரணமா சொல்ல, நிகழ்ச்சி நடக்கற ஜனவரி 6-ம் தேதி நான் அஜர்பைஜான்ல இருப்பேன்னு அஜித் சொல்லி இருக்கார். இதைப்பத்தி விழா அமைப்பாளர்கள் உதயநிதிகிட்ட சொல்லி இருக்காங்க, வெறுத்துப் போன அவர், ‘நிகழ்ச்சிக்கு வர்றவங்க வரட்டும். யாரையும் வற்புறுத்த வேண்டாம்’ன்னு சொல்லி இருக்கார்.”

 “கலைஞரோட விழாவுக்கு வர முடியாதுன்னு சொன்ன விஜய், தினகரன் பிறந்த நாள்ல அவருக்கு வாழ்த்து சொல்லி இருக்காரே”

 “அவர் மட்டுமா? அண்ணாமலையும்தான் வாழ்த்தி இருக்கார். அரசியல் நோக்கர்கள் இதை சீரியசா பார்த்துட்டு இருக்காங்க. உதயநிதி பிறந்த நாள் அன்னைக்கு அவருக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய், இப்ப தினகரனுக்கு வாழ்த்து தெரிவிச்சதை கவனிச்சு பார்க்கணும்னு அவங்க சொல்றாங்க.”

 “26-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூடப்போகுதே… அதைப்பத்தி ஏதும் தெரியுமா?”

“எடப்பாடி பொதுச்செயலாளரா பதவி ஏற்ற பிறகு,  சட்டப் போராட்டங்கள்ல அவருக்கு கிடைச்ச வெற்றிகளுக்கு பிறகு,  தேர்தல் ஆணையத்தோட அங்கீகாரத்துக்குப் பிறகு நடக்கும் முதல் பொதுக்குழு இது. அதனால  இந்த பொதுக்குழுவில் எந்த சலசலப்பும் இருக்கக் கூடாது.  வெறும் வாழ்க கோஷம் மட்டும்தான் இருக்கணும்னு முக்கிய நிர்வாகிகளுக்கு உத்தரவு போட்டிருக்கார் எடப்பாடி. அதேபோல்  கூட்டணி பற்றி முடிவெடுக்கும் அதிகாரத்தை இந்த பொதுக்குழு தனக்கு தர்ற மாதிரி தீர்மானம் நிறைவேற்றணும்னும் நிர்வாகிகள்கிட்ட ஸ்டிரிக்டா சொல்லி இருக்காராம்.”

  “முதல்வரை பேச்சுவார்த்தைக்கு வரச்சொல்லி ஆளுநர் அழைப்பு அனுப்பி இருக்காரே. முதல்வர் போவாரா?”

“எல்லா மசோதாக்களையும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிட்டு, இப்ப வாங்க பேசலாம்னு கூப்டா என்ன பேசறதுன்னு முதல்வர் குழப்பத்துல இருக்காராம். இருந்தாலும் உச்ச நீதிமன்றமே சொல்லி இருக்கறதால  சட்டசபையில் அவருக்கு நாம் எப்படி நம் எதிர்ப்பை கடுமையாக தெரிவிச்சோமோ, அதேபோல் ஆளுநர்  மாளிகைக்கும் போய்  நேரில் நம் எதிர்ப்பை சொல்லிட்டு வரப் போரேன்னு அமைச்சர்கள்கிட்ட அவர் சொல்லி இருக்கார்.”

 “சந்திப்பு காரசாரமா இருக்கும்னு சொல்லு.”

 “கடைசியா ஒரு ஸ்கூப் நியூஸ் சொல்றேன் கேட்டுக்குங்க. நாடாளுமன்ற தேர்தல்ல இந்துக்களோட ஓட்டைக் கவர, பக்தி மயமா கோயில் கோயிலாகப் போய்ட்டு இருக்கற  துர்கா ஸ்டாலினை வேட்பாளராக நிறுத்தினா என்னங்கிற யோசனை முதல்வர் குடும்பத்துக்கு சொல்லப்பட்டிருக்கு.  தென் சென்னை தொகுதியில அவரை வேட்பாளரா நிறுத்துங்கனு ஆலோசனை சொல்லியிருக்காங்க.”

“யார் சொன்னது?”

“தேர்தல் வியூகம் அமைக்கிறவங்கதான். இதனால பெண்கள் ஓட்டு வரும்னு சொல்லியிருக்காங்க”

“முதல்வர் குடும்பத்துல என்ன ரியாக்‌ஷன்”

“வேண்டாம்..நடக்கிற காரியமா ஆலோசனை சொல்லுங்கனு முதல்வர் கடந்து போயிட்டாராம்”

“அப்போ தென் சென்னைக்கு யார் வேட்பாளர். அதே தமிழச்சியா?”

“தமிழ்நாட்டுல போட்டியிடுற எல்லா பெண் வேட்பாளர்களும் தமிழச்சிகள்தானே?” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...