ஊரில் பெட்டிக்கடை வைத்திருப்பவர்கள், வெள்ளம் மாதிரி பிரச்சினை வந்தாலோ அல்லது குடும்பத்தோடு சொந்த ஊருக்கு கிளம்பினாலோ, கடையைச் சாத்திவிட்டு ’கடை இல்லை’ என்று போர்டை மாட்டிவிடுவது வழக்கம்.
அதேமாதிரிதான் இப்போது சமூக ஊடகங்களிலும் நடக்கிறது. சினிமா பிரபலங்களுக்கு தங்களது சமூக ஊடக கணக்கை பின் தொடர லட்சக்கணக்கான ரசிகர்களும் வேண்டும். ஆனால் கமெண்ட்களினால் காயப்படுத்தும் பஞ்சாயத்துகளும் இருக்க கூடாது என்று எதிர்பார்க்கிறார்கள்.
தங்களது படம் வெளியாகும் நேரத்தில் தங்களது சமூக ஊடக கணக்கில் கடையைத் திறந்து வைத்து, எப்படியெல்லாம் முடியுமோ அப்படியெல்லாம் வீடியோக்களையும், ட்வீட்களையும் சளைக்காமல் போட்டுக்கொண்டே இருப்பார்கள்.
இப்படி அவர்கள் வெளியிடுகிற வீடியோவோ அல்லது ட்வீட்டோ ஏதாவது சர்ச்சையைக் கிளப்பினால், பெட்டிக்கடைக்காரரைப் போல பட்டென்று தங்களது கடையைச் சாத்திவிட்டு கிளம்பிவிடுகிறார்கள்.
இப்படியொரு சிக்கலில் மாட்டியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இவர் அவ்வப்போது எனக்கு வேலை இருக்கிறது. சமூக ஊடகம் பக்கம் வரமாட்டேன் என்பார். சினிமாவில் சாதிக்க நினைப்பவர்களுக்காக, அவர்களை ஊக்கப்படுத்தி தகவல் பரிமாறவே சமூக ஊடகங்களில் இருக்கிறேன் என்றும் சொல்லி இருக்கிறார்.
இந்நிலையில் இப்போது அவரது தயாரிப்பு நிறுவனம் ’ஜி ஸ்குவாட்’ வெளியிடும் ’ஃபைட் க்ளப்’ பட வெளியீட்டுக்காக மீண்டும் சமூக ஊடகம் பக்கம் வந்தார் லோகேஷ் கனகராஜ்.
லோகேஷ் கனகராஜின் ஃபேஸ்புக் பக்கம் சிலரால் ஹேக் செய்யப்பட்டு இருக்கிறது என்று பகீர் தகவலை யாரா கிளப்பிவிட, சுதாரித்து கொண்டார் லோகேஷ் கனகராஜ்.
இதனால் தனது மற்றொரு சமூக ஊடக கணக்கில், ‘நான் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாக்ராமில் மட்டும்தான் இருக்கிறேன். இந்த இரண்டையும் தவிர வேறெந்த சமூக ஊடக கணக்குகளும் எனக்கு இல்லை. அதனால் அந்த ஹேக் சமாச்சாரத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுங்கள். அவற்றை அன்ஃபாலோ செய்யுங்கள்’ என்று தகவலை வெளியிட்டு இருக்கிறார்.
அயலான் டப்பிங் – சித்தார்த் சம்பளம் எவ்வளவு?
சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ‘அயலான்’ படம் ஒரு வழியாக பொங்கலுக்கு வெளியாக காத்திருக்கிறது.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஒரு ஏலியன் கதாபாத்திரமும் இடம்பெறுகிறது. இந்த கதாபாத்திரத்திற்கு டப்பிங் குரல் வேண்டுமென்பதால், பலரை வைத்து பைலட் பார்த்திருக்கிறார்கள். எதுவும் செட்டாகவில்லை.
இறுதியாக நடிகர் சித்தார்த்தை அணுகி இருக்கிறார்கள். அவரும் ஈகோ பார்க்காமல் டப்பிங் பேச நான் தயார் என்று சொல்லி அயலான் குழுவை அசத்தியிருக்கிறார்.
நான் டப்பிங் பேச தயார்தான் என்றதுமே குஷியான அயலான் குழு அவரை வைத்து மூன்று நாட்கள் ஏலியன் குரலுக்கான டப்பிங்கை முடித்துவிட்டார்கள். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இரண்டாம் ஞாயிறு சினிமா துறையில் விடுமுறை நாள். அன்று எந்த வேலைகளும் நடைபெறாது. இதனால் பெப்சி அமைப்பிடம் சிறப்பு அனுமதி பெற்ற பின்பே சித்தார்த் டப்பிங் பேசி முடித்திருக்கிறார்.
மூன்று நாட்கள் டப்பிங் பேசி முடித்த சித்தார்த்திடம் சம்பளம் எவ்வளவு என்று இழுத்திருக்கிறார்கள். ஆனால் சித்தார்த்தோ ஒரு பைசா கூட சம்பளம் வாங்கவில்லையாம். நட்புக்காகதான் நானே வந்து டப்பிங் பேசினேன் என்று கூறிவிட்டாராம்.