நாடாளுமன்றத்துக்குள் நேற்று 2 பேர் ஊடுருவிய விவகாரம்தான் இன்றைக்கும் தேசிய அளவில் ஹாட் டாபிக்காக இருக்கிறது. இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்துக்குள் ஊடுருவிய இருவரையும், வெளியில் போராட்டம் நடத்திய மற்ற மூவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள்.
இந்த சூழலில் நாடாளுமன்றத்துக்குள் ஊடுருவும் திட்டத்தில் ஈடுபட்டு கைதான 5 பேரைப் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
மனோரஞ்சன் (வயது 34):
கர்நாடக மாநிலத்தின் மைசூரு பகுதியைச் சேர்ந்த மனோரஞ்சன் இந்த ஊடுருவல் சம்பவத்தின் முதல் குற்றவாளியாக பார்க்கப்படுகிறார். மைசூரு எம்.பியிடம் இருந்து நாடாளுமன்றத்துக்குள் பார்வையாளர்களாக நுழைவதற்கான பாஸை இவர்தான் வாங்கியிருக்கிறார்.
பெங்களூரு பிஐயிடில் 2016-ம் ஆண்டில் கம்ப்யூட்டர் இஞ்ஜினீயரிங் படித்து முடித்த மனோரஞ்சன், சில நாட்கள் ஊரில் விவசாயம் பார்த்துள்ளார். பின்னர் டெல்லி மற்றும் பெங்களூருவில் சில நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். நாடாளுமன்ற ஊடுருவல் விவகாரத்தில் தொடர்புடைய அனைவரையும் சமூக வலைதளங்கள் மூலம் ஒருங்கிணைத்தவர் இவர்தான் என்று கருதப்படுகிறது.
மனோரஞ்சன் கைது செய்யப்பட்டது பற்றி கருத்து தெரிவித்துள்ள அவரது தந்தை, “என் மகன் மிகவும் நல்லவனாக இருந்தான். சிறுவயதில் விவேகானந்தரைப் பற்றிய புத்தகங்களை நிறைய படிப்பான். அவன் கல்லூரி நாட்களில் மாணவர் தலைவனாக இருந்துள்ளான். இப்போது அவன் டெல்லியில் இருப்பதே எனக்கு தெரியாது. மனோரஞ்சன் தவறு செய்திருந்தால், அவன் என் மகனே அல்ல. அவன் தவறு செய்திருந்தால் கடுமையாக தண்டிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
சாகர் சர்மா (வயது 27):
டெல்லியில் பிறந்தவரான சாகர் சர்மா, இ ரிக்ஷா ஓட்டுபவர். 12-ம் வகுப்பு வரை படித்திருக்கும் அவர் கரோனா காலகட்டத்தில் பெங்களூருவில் 2 ஆண்டுகள் தங்கியுள்ளார். அந்த காலகட்டத்தில் அவருக்கும் மனோரஞ்சனுக்கும் தொடர்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. தற்போது அவர் லக்னோ நகரில் தனது சகோதரியுடன் வசித்து வருகிறார். இவரது அப்பா ஒரு தச்சுத் தொழிலாளி.
சே குவேரா, பகத் சிங் மீது பெரிய அளவில் ஈர்ப்பு ஒண்டவராக சாகர் சர்மா இருந்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமையன்று லக்னோவில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்ற சாகர் சர்மா, புறப்படும் முன் தன் அம்மாவிடம் தான் ஒரு போராட்டத்தில் கலந்துகொள்ளப் போவதாக சொல்லியிருக்கிறார்.
நீலம் வர்மா (வயது 37):
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த நீலம் வர்மா, எம்.ஏ, எம்.ஃபில் பட்டதாரி. 7 ஆண்டுகளுக்கு முன் ஹரியானாவில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற இவருக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை. அதனால் வெறுத்துப் போன நீலம் வர்மா, அரசாங்கத்துக்கு எதிரான மனநிலையை கொண்டவராக மாறினார்.
அரசுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டத்திலும், மல்யுத்த வீரர்கள் நடத்திய போராட்டத்திலும் நீலம் வர்மா பங்கேற்றுள்ளார். இதில் மல்யுத்த வீர்ர்களின் போராட்டத்தின்போது டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். உள்ளூரிலும் பல மக்கள் பிரச்சினைகளுக்காக அவர் போராட்டங்களை நடத்தியுள்ளார். நாடாளுமன்றத்துக்கு எதிரே போராட்டம் நடத்தப் போவதைப் பற்றி தங்களிடம் நீலம் வர்மா எதையும் கூறவில்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
விஷால் சர்மா:
ஏற்றுமதி நிறுவனத்தில் ஒரு ஓட்டுநராக வேலை பார்த்த விஷால் சர்மா, பின்னர் ஆட்டோ ஓட்டுநராக இருந்துள்ளார். ஒரு சண்டையால் விஷால் சர்மாவின் மனைவி அவரை விட்டு பிரிந்துவிட்டார்.
அமோல் ஷிண்டே (வயது 25):
போராட்டக்காரர்களில் மிகவும் இளையவர் அமோல் ஷிண்டே. இவர் மகாராஷ்டிர மாநிலத்தில் லத்தூர் மாவட்டத்தில் உள்ள சாரி பட்ரக் கிராமத்தைச் சேர்ந்தவர். 12-ம் வகுப்பு வரை படித்துள்ள அமோல் ஷிண்டே, ராணுவத்திலும், காவல் துறையிலும் சேர பல முறை முன்றுள்ளார். அந்த முயற்சிகள் வெற்றி அடையாமல் போனதால் மனம் வெறுத்த நிலையில் இருந்திருக்கிறார். சில காலம் பிளம்பராக வேலை பார்த்த ஷிண்டே, இப்போது வேலை ஏதும் பார்க்காமல் இருந்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நுழைந்து போராடியதற்கான காரணம் பற்றி போலீஸாரிடம் கூறும்போது, “நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம், மணிப்பூர் பிரச்சினை போறவை எங்கள் மனதை பாதித்தது. இந்த விஷயத்தில் ஒரே எண்ணம் கொண்ட நாங்கள், இந்த போராட்டத்தின் மூலம் மக்கள் மற்றும் அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்க முயன்றோம்” என்று தெரிவித்துள்ளார்.