ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370 ரத்து செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், அங்கு வரும் 2024 செப்டம்பருக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த 5 நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று (டிச.11) தனது தீர்ப்பை வழங்கியது.
இந்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370 தற்காலிகமானதே. சட்டப்பிரிவு 1 மற்றும் 370-ன் படி ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. சட்டப்பிரிவு 370 ஏற்படுத்தப்பட்டது ஒரு இடைக்கால ஏற்பாடு. சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்வதற்கு இந்திய குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது. ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த பிறகு அது தனித்த இறையாண்மையைக் கொண்டிருக்கவில்லை.
ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் ஒருங்கிணைக்கவே சட்டப்பிரிவு 370 இருந்தது. இந்தியாவில் இருந்து அதனை பிரிப்பதற்காக அல்ல. சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்வதற்கான அறிவிப்பை வெளியிடும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உண்டு. இதற்காக அவர் சட்டப்பிரிவு 370(3)ஐ பயன்படுத்தியதில் தவறு இல்லை. குடியரசுத் தலைவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தியது செல்லுபடியாகும். சட்டப்பிரிவு 370(1)(d)-ன்படி அரசியலமைப்பின் அனைத்து விதிகளையும் ஜம்மு காஷ்மீருக்குப் பயன்படுத்தலாம். ஜம்மு காஷ்மீர்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய மாநில அரசின் ஒப்புதலைப் பெறத் தேவையில்லை. சிறப்பு அந்தஸ்து ரத்து செல்லும்.
ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்க மத்திய அரசுக்கு உரிமை உள்ளது. லடாக்கை யூனியன் பிரதேசமாக அறிவித்தது செல்லும். அடுத்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதிக்குள் இந்திய தேர்தல் ஆணையம் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடத்த வேண்டும். ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு தொடர்பான மத்திய அரசின் அறிக்கையின்படி, விரைவில் ஜம்மு காஷ்மீருக்கு மத்திய அரசு மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
சிகிச்சை முடிந்து விஜயகாந்த் வீடு திரும்பினார்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை முடிந்து அவர் இன்று வீடு திரும்பினார். விஜயகாந்த் பூரண குடைந்துள்ளதாக அவர் சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனை செய்தி வெளியிட்டுள்ளது.
தேமுதிக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அக்கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 14-ம் தேதி விஜயகாந்த் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச முதல்வராக மோகன் யாதவ் தேர்வு
மத்திய பிரதேச மாநிலத்தின் புதிய முதல்வராக மோகன் யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.
மத்தியப் பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. இந்நிலையில் அம்மாநிலத்தின் புதிய முதல்வராக மோகன் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். போபாலில் இன்று நடந்த பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அவர் முறைப்படி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இவர் இந்த தேர்தலில் தெற்கு உஜ்ஜைன் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
சான்றிதழ்களை பெற சென்னையில் நாளை முதல் முகாம்
புயல் வெள்ளத்தால் இழந்த அரசுசான்றிதழ்களை மீண்டும் பெறுவதற்காக, சென்னையில் நாளைமுதல் 46 இடங்களில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளம் காரணமாக சென்னையில் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பிறப்பு,இறப்பு, சாதி, இருப்பிடம், வாரிசு, பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அரசு சான்றிதழ்களை இழந்தவர்கள், அவற்றை மீண்டும் கட்டணமின்றி பெறும் வகையில் சிறப்புமுகாம்கள் நடத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
அதனடிப்படையில் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து மண்டலங்களிலும் இழந்த அரசு சான்றிதழ்களை மீண்டும் பெறநாளை (டிச.12) முதல் சிறப்பு முகாம்கள் தினந்தோறும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடத்தப்படவுள்ளது. அதன்படி திருவொற்றியூர், மணலி, புழல், மாதவரம், அம்பத்தூர், பாடி, அண்ணாநகர், கீழ்ப்பாக்கம், மயிலாப்பூர், தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம், தி.நகர், போரூர், வேளச்சேரி, அடையாறு, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை உட்பட 46 பகுதி அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.