ஹைவேயில் டாப் கியரில் பறக்கும் ரோல்ஸ் ராய்ஸ் மாதிரி சூப்பர் வேகத்தில் போய்கொண்டிருந்த சமந்தாவின் சினிமா கேரியர், தனிப்பட்ட வாழ்க்கை எல்லாமும் இப்போது பங்க்ச்சர் ஆகி ரோட்டு ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது போல் மாறியிருக்கிறது.
சமந்தாவின் திருமண முறிவு அவருக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் பெரும் வருத்தத்தை உண்டாக்கிவிட்டிருக்கிறது. ஆனால் இதையும் தாண்டி பெரும் வலியையும், சோகத்தையும் ஆட்டோஇம்யூன் பிரச்சினையான மையோசிடிஸ் கொடுத்திருக்கிறது.
இதனால் பாலிவுட்டுக்கு போய் செட்டிலாகியும் சிட்டாடெல் வெப் சிரீஸ் தவிர வேறெந்த வாய்ப்பும் இவருக்கு கிடைக்கவில்லை. சினிமாவில் வாய்ப்புகள் வரவில்லை.
பொதுவாகவே சினிமாவில் இருப்பவர்களுக்கு சம்பாதித்தப் பிறகும் கூட செட்டிலாகி வீட்டில் நிம்மதியாக இருக்க முடியாது. மீண்டும் சினிமா பக்கம் எட்டிப்பார்க்க ஏதாவது ஒன்றை முயற்சிப்பார்கள். இதே சிண்ட்ரோம் இப்போது சமந்தாவுக்கு வந்திருக்கிறது.
எப்படியாவது சினிமாவில் தனது இருப்பை உறுதிப்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தோடு இப்போது திரைப்பட தயாரிப்பில் களமிறங்கிவிட்டார் சமந்தா.
இதற்காக ஹைதராபாத்தில் இருக்கும் மண்டோவா மீடியா வொர்க்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து சமந்தா.திரைப்படம் தயாரிக்க இருக்கிறார் தனது திரைப்பட தயாரிப்பு நிறுவனத்திற்கு ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸ் என்றும் பெயரும் வைத்துவிட்டார்.
சமந்தாவின் தயாரிப்பு நிறுவனம், இனி இந்த தலைமுறை திறமைசாலிகளுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் படங்களைத் தயாரிக்க இருக்கிறது. அர்த்தமுள்ள, உலகின் அனைத்து சினிமா தளங்களிலும் பார்த்து கொண்டாடுகிற வகையிலான சினிமாவை எடுக்கும் என்றும் சமந்தா உறுதியளித்திருக்கிறார்.
சமந்தாவின் ட்ரலாலா நிறுவனம் இனி திரைப்படங்கள், வெப் சிரீஸ், டிவி நிகழ்ச்சிகளை தயாரிக்க அருமையான, புதுமையான கதைகளைக் கேட்க ஆரம்பித்திருக்கிறது.
தென்னிந்திய சினிமாவை குறி வைக்கும் நெட்ஃப்ளிக்ஸ்!
ஒடிடி என்றாலே உலகளவில் பெரும் மார்க்கெட்டை வைத்திருக்கும் நெட்ஃப்ளிக்ஸூக்கு இந்தியா மட்டுமே இதுவரை புலப்படாத மார்க்கெட்டாக இருந்து வருகிறது.
இந்தியாவில் அசுர வேகத்துடன் களமிறங்கிய நெட்ஃப்ளிக்ஸ், அதற்குப் பிறகு தனது பலத்தைக் காட்ட முடியவில்லை. காரணம் பல மொழிகள், பல கலாச்சாரங்களைக் கொண்டிருக்கும் இந்திய சந்தையை அவர்கள் கண்டுக்கொள்ளவே இல்லை. தங்களது வீடியோ லைப்ரரியில் இருக்கும் ஹாலிவுட் மற்றும் இதர சர்வதேச ஒரிஜினல்கள், திரைப்படங்களை மட்டுமே ஸ்ட்ரீமிங் செய்தது.
ஒரு ரூபாய் கொடுத்தாலும், அதில் முப்பது ரூபாய் மதிப்புக்கு க்ளாமர், முப்பது ரூபாய்க்கு ஆக்ஷன், 20 ரூபாய்க்கு புதுமையான கதை, மீதி இருபது ரூபாய்க்கு காதல் என எதிர்பார்க்கும் இந்திய ரசிகர்களுக்கான படைப்புகளைக் கொடுக்காமல் தன் போக்கில் போய் கொண்டிருந்தது நெட்ஃப்ளிக்ஸ்.
இதனால் சந்தாதாரர்கள் விஷயத்தில் நெட்ஃப்ளிக்ஸினால் பலத்தைக் காட்டமுடியாமல் போனது. இதை கொஞ்சம் தாமதமாக புரிந்து கொண்ட நெட்ஃப்ளிக்ஸ் இப்போது, இந்திய சந்தைக்கான படைப்புகளை உருவாக்க இங்குள்ள சினிமா நட்சத்திரங்களை, தயாரிப்பாளர்களை, இயக்குநர்களை குறிவைத்து காய் நகர்த்த ஆரம்பித்திருக்கிறது.
இதன் தொடர்ச்சியாகவே இப்போது நெட்ஃப்ளிக்ஸின் தலைமை செயல் அதிகாரி டெட் சரண்டோஸ் இந்தியா பக்கம் தனது கவனத்தைத் திருப்பி இருக்கிறார். அமெரிக்காவில் ஏகப்பட்ட வேலைகள் இருந்தாலும், அதையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு இப்போது ஹைதராபாத்தில் அங்குள்ள தெலுங்கு சினிமா உலகின் முக்கியப்புள்ளிகளுடன் லஞ்ச், டின்னர் என பிஸியாக இருக்கிறார்.
எஸ்.எஸ். ராஜமெளலி, அல்லு அர்ஜூன், மகேஷ்பாபு, சுகுமாரன், ஜூனியர் என்.டி.ஆர். ராம் சரண், பிரபாஸ் என ஒவ்வொருத்தரையும் தனித்தனியாக சந்தித்துவருகிறார்.
தெலுங்கு சினிமா புள்ளிகளுடன் இப்படி டெட் சரண்டோஸ் நெருக்கமாக நினைக்க காரணம், தெலுங்கு சினிமாவை க்ளோபல் சினிமாவாக முன்னெடுப்பதில் அங்குள்ளவர்கள் காட்டும் மெனக்கெடலும், அக்கறையும்தான். இந்திய அளவில் தெலுங்கு நடிகர்களுக்கு இப்போது பான் – இந்திய நட்சத்திரங்கள் அடையாளமும் இருக்கிறது. அதை தங்களது படைப்புகளுக்குப் பயன்படுத்த நெட்ஃப்ளிக்ஸ் திட்டமிட்டு வருவதாக திரையுலகப் புள்ளிகள் கூறுகிறார்கள்.
இனி தெலுங்கு நட்சத்திரங்களை வைத்து நெட்ஃப்ளிக்ஸ் பல ஒரிஜினல்களை தயாரித்து ஸ்ட்ரிமிங் செய்ய இருப்பதாகவும் தெரிகிறது.