முதலில் ராஷ்மிகா மந்தானா, அடுத்து கஜோல், ஆலியா பட், இப்போது ப்ரியங்கா சோப்ரா என வரிசையாக ’டீப் ஃபேக்’ தொழில்நுட்பம் மூலம் ஏடாக்கூடமான வீடியோக்களுடன் அதிர வைத்திருக்கும் செயற்கை நுண்ணறிவு, இனி வரும் காலத்தில் திரைப்படத்துறைக்கு ஏராளமான நல்ல விஷயங்களை அள்ளிக்கொடுக்க இருக்கிறது.
குறிப்பாக திரைப்பட தயாரிப்பு அம்சங்களில் செயற்கை நுண்ணறிவு வெகுவாக மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவு (AI) விஷுவல் எஃபெக்ட்களை இதுவரையில் இல்லாத ரகளையுடன், நாம் யோசிக்கவே முடியாத கோணத்தில் உருவாக்கும். அடுத்து தயாரிப்பில் கம்ப்யூட்டர் மூலம் செய்யும் வேலைகளை ஒரு க்ளிக்கில் கச்சிதமாக முடிப்பதோடு, ஒழுங்குப்படுத்துவதில் செயற்கை நுண்ணறிவு முக்கிய பங்கு வகிக்கும்.
இப்போது விறுவிறுவென வளர்ச்சிக்கண்டு வரும் மெஷின் லேர்னிங் மற்றும் டீப் லேர்னிங் அல்காரிதம்களின் அடுத்தக்கட்டமானது, ஒரு இயக்குநர் தனது கற்பனையில் நினைக்கும் காட்சிகளை அப்படியே உருவாக்கிவிடும். இதனால் ப்ரொடக்ஷன் வேலைகள் எதிர்பார்த்ததை விட உயர்தரத்தில் இருக்கும்.
செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தின் அடிப்படையில் செயல்படும் கருவிகள் இனி உண்மையா அல்லது பொய்யா என்று கண்டுப்பிடிக்க முடியாத வகையில் மிகவும் தத்ரூபமான CGI கதாபாத்திரங்களை உருவாக்கலாம். திரும்ப திரும்ப செய்யும் ஒரே வேலைகளை, ஆட்டோமேட்டிக்காக செயல்படுத்தவும் உதவலாம். உதாரணத்திற்கு, செயற்கை நுண்ணறிவு அல்காரிதம்கள் இனி ஃப்லிம் ப்ரொடக்ஷனில் திரும்ப திரும்ப செய்ய கூடிய வீடியோ எடிட்டிங், கலர் க்ரேடிங், சவுண்ட் மிக்ஸிங் பணிகளை தானியங்கி முறையில் கச்சிதமாக செய்து கொடுத்துவிடும்.
மிக முக்கியமாக, படத்தின் மார்க்கெட்டிங் தொடர்பான யுக்திகளை, இதுவரையுள்ள தரவுகளின் அடிப்படையில் ஒவ்வொன்றையும் அலசி ஆராய்ந்து, வியாபாரத்தை புத்திசாலித்தனமாக செய்வதற்கு உதவும். அதாவது ஒரு குறிப்பிட்ட கமர்ஷியல் ஹீரோவின் படமானது, தமிழ்நாட்டில் எந்தளவிற்கு வசூல் செய்திருக்கிறது, தமிழ் பேசும் மக்கள் உள்ள நாடுகளில் பாக்ஸ் ஆபீஸ் எவ்வளவு, அதே படம் பிற மொழி டப்பிங்கில் வசூல் செய்த தொகை என்ன என்பது போன்ற தரவுகளின் அடிப்படையில், வியாபாரத்தை முன்னெடுக்க உதவும்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் செயல்படும் சாஃப்ட்வேர்கள் இனி ஆறுசாமி, மார்க் ஸ்டீபன் மாதிரியான வேலைக்காரன் வந்து வேலை செய்தால்தான் நடக்கும் என்ற நிலையை மாற்றி, சாதாரணமாக செய்யும் வேலையாக்கி விடும். இதனால் படத்தயாரிப்பு செலவை எக்கச்சக்கமாக குறைந்துவிடும். ஒரு பிரம்மாண்டமான காட்சியை எடுக்க நூறு பேர் 250 பேர் என பெரும் நட்சத்திர, டெக்னீஷியன் பட்டாளத்தை வைத்துதான் படமெடுக்க முடியும் என இயக்குநர்கள் இனி பகட்டு காட்ட வேண்டிய அவசியமே இல்லை. எல்லா வேலைகளையும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப சாஃப்ட்வேர்கள் பார்த்து கொள்ளும்.
செயற்கை நுண்ணறிவுக்கு அடுத்தப்படியாக வர்ச்சுவல் ரியாலிட்டி படங்கள் [Virtual reality (VR) films] முக்கியத்துவம் பெற அதிக வாய்ப்புள்ளது. படம் பார்க்கும் ரசிகர்களை ஒரு முழுமையான மெய்நிகர் உலகத்திற்குள் அழைத்து செல்லவும் முடியும். தற்போதுள்ள விஆர் ஹெட்செட்கள், விஆர் இயங்குதளங்களில் படங்களைப் பார்க்கும் அனுபவத்தையும் இனி உருவாக்கிவிடுவார்கள். இது இதுவரை பார்த்திராத காட்சி அனுபவத்தை வழங்கும். இதனால் வர்ச்சுவல் ரியாலிட்டி படங்களுக்கு இனி வரவேற்பு அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. 2024-ல் ஆண்டில் வர்ச்சுவல் ரியாலிட்டி படங்களுக்கான சந்தையின் மூலம் வருவாய் சுமார் 1.8 பில்லியன் டாலர்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வர்ச்சுவல் ரியாலிட்டி படங்கள், ஒரு படைப்பாளியின் கதை சொல்லும் பாணியை முற்றிலும் புதிதாக மாற்றிவிடும். படம் பார்க்கும் போது அதில் ஆக்ஷனில் பட்டையைக் கிளப்பும் ஹீரோ உடன் ரசிகர்கள் பேச முடியும். ஒரு கார் சேசிங் காட்சி என்றால் பின்னால் வரும் வில்லன் பற்றி ஹீரோவுக்கு ரசிகர்கள் உஷார் படுத்த முடியும். இதனால் படம் பார்க்கும் ரசிகர்களும் அப்படத்தின் மெய்நிகர் உலகத்தில் ஒரு கதாபாத்திரமாகவே மாறிவிட முடியும் என்கிறது வர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பம்.
இந்த தொழில்நுட்ப அம்சங்களைப் பயன்படுத்துவதில் ஹாலிவுட்டுக்கு அடுத்து சீனாவின் ஆதிக்கம் அதிகமிருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இன்று பாக்ஸ் ஆபீஸ் வசூல் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய சந்தையாக சீனா உருவெடுத்து இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், சினிமா என்றால் நான்தான் என்று கெத்து காட்டிய அமெரிக்காவை சீனா பின்னுக்குத் தள்ளியிருக்கிறது.
இதற்கு காரணம் சீனாவில் சினிமா துறையின் வளர்ச்சி அபரிதமாகி இருக்கிறது. இங்குள்ள நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்கள் திரைப்படங்களைப் பார்ப்பதில் காட்டும் ஆர்வத்தினால் பட்டென்று பல மடங்கு வளர்ச்சியை எட்டியிருக்கிறது. அதேபோல் இரும்புக்கோட்டையாக கருதப்படும் சீனாவில் சினிமாவுக்கான கட்டமைப்பு அதிகரித்து இருக்கிறது. சீன அரசும் உள்நாட்டு சினிமா தயாரிப்பு ஆதரக்கரம் நீட்டி வருகிறது.
சீனா பெரும் சந்தை என்பதை புரிந்து கொண்டிருக்கும் ஹாலிவுட் ஸ்டூடியோக்கள் இப்போது சீன திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் வேலைகள் மும்முரமாக தொடங்கியுள்ளன. சீனா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த நட்சத்திரங்கள், திரைப்பட தொழில்நுட்ப கலைஞர்கள், படைப்பாளிகளை சினிமா தயாரிப்பில் பயன்படுத்தும் நடைமுறையை ஆரம்பித்துவிட்டார்கள். இதனால் இந்த இரு நாடுகளின் சினிமா துறை வளர்ச்சி உறுதியானதோடு, உலகளாவிய சந்தைக்கு தொழில்நுட்ப ரீதியாக சூப்பர் படங்களை கொடுக்கும் வாய்ப்புகளை உருவாக்கி இருக்கிறது.
இந்தியாவும் சினிமாவுக்கு மிகப்பெரிய சந்தைதான். ஆனால் இங்கே ஒழுங்குப்படுத்தப்படாத நடைமுறைகள் அதிகமிருக்கின்றன. படங்களின் வசூல் பற்றிய வெளிப்படைத்தன்மை எதுவுமில்லை. சினிமாவின் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் கட்டமைப்பு சரிவர மேற்கொள்ளப்படவில்லை. இந்தப் பிரச்சினைகளை எதிர்க்கொண்டு, சினிமாவுக்கு ஒரு சாதகமான சூழலை உருவாக்கும் பட்சத்தில் சீனாவுக்கு அடுத்து, சினிமாவின் சூப்பர் பவராக இந்தியாவும் கெத்து காட்ட முடியும்.