சூர்யா மீண்டும் சுதா கோங்குரா உடன் இணையும் படத்திற்கு தற்காலிமாக ’சூர்யா 43’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் சூர்யா ஹிந்திக்கு எதிராக குரல் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று வாவ் தமிழாவில் ஏற்கனவே கூறியிருந்தோம்.
இப்போது அது சம்பந்தமான கூடுதல் அப்டேட் என்னவென்றால், 1965-ல் நடைப்பெற்ற ஹிந்தி திணிப்பிற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டவர் மாணவத்தலைவர் ராஜேந்திரன். இவர் அந்தப் போராட்டத்தில் மரணம் அடைந்தார். இவருடன் சூர்யா இருப்பது போன்ற புகைப்படங்கள் இப்போது சமூக ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இதற்காக சுதா கோங்குரா பெரும் ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறாராம்.
திராவிடக்கட்சிகளின் தாக்கத்தை அந்த கட்சிகளைப் பற்றி காட்சிப்படுத்தாமல், திரைக்கதை வடிவமைக்கப்பட்டு வருகிறதாம். இதில் அரசியல் தொடர்பான வசனங்களும் அதிகம் இடம்பெறுகிறதாம். அதனால் இப்படம் வெளிவரும் போது சர்ச்சைகள் கிளம்புவது நிச்சயம் என்கிறார்கள்.
தென்னிந்தியாவின் டாப் 5 இயக்குநர்கள்!
‘அனிமல்’ என்று ஒரு படம் வெளியாகி இருக்கிறது. ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தானா இருவரும் நடித்திருக்கிறார்கள். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கி இருக்கிறார்.
இன்று இந்திய சினிமாவில் இந்த சந்தீப் ரெட்டி வங்காதான் பரபர பர்ஸனாலிட்டி. இவர் இயக்கியது ‘அர்ஜூன் ரெட்டி’, அடுத்து அதன் ஹிந்தி ரீமேக் ‘கபீர் சிங்’ அடுத்து இப்போது வெளியாகி இருக்கும் ‘அனிமல்’ என மொத்தம் மூன்றே மூன்றுப் படங்கள்தான். ஆனால் சந்தீப்பைத் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள்.
சந்தீப்பை இப்படி பாராட்ட காரணம், அவரது சினிமா பாணிதான். ஏடாக்கூடமான நெருக்கமான காட்சிகள், முரட்டுத்தனமான கதாபாத்திர வடிவமைப்பு, ஐயோ என்று சொல்ல வைக்கும் கெட்ட வார்த்தைகள் அதிகமிருக்கும் வசனம், கதை சொல்லும் விதம் இப்படிப்பட்ட இத்தியாதிகள்தான் சந்தீப்பின் அடையாளம்.
இந்த பாணியில் இவர் எடுத்த 3 படங்களும் மெகா ஹிட். கதை சொல்லுவதில் இதுவரை இருக்கும் பாணியெல்லாம் சுக்கு நூறாக உடைத்து எறிந்திருக்கிறார். இவரது படங்கள் எல்லாமும் ஏ சர்டிஃபிகேட் படங்கள்தான்.
தெலுங்கு சினிமாவிலிருந்து பாலிவுட்டுக்கு போயிருக்கும் இவரை பாலிவுட் இயக்குநர்கள் மனம்விட்டு பாராட்டி இருக்கிறார்கள். அதேபோல் கடுமையான விமர்சனங்களையும் முன் வைத்திருக்கிறார்கள். இது இவரது வெற்றிக்கான அடையாளங்களாகி இருக்கின்றன.
அனிமலின் மூலம் தென்னிந்தியாவின் டாப் 5 இயக்குநர்களின் பட்டியலில் சந்தீப் ரெட்டி வங்காவின் பெயரும் இடம் பிடித்திருக்கிறது.
கடந்த நான்கைந்து ஆண்டுகளில் அசர வைக்கும் வெற்றியைக் கொடுத்த இயக்குநர்களின் டாப் 5 பட்டியலைக் கேட்டால் ராஜமெளலி, பிரஷாந்த் நீல், அட்லீ, லோகேஷ் கனகராஜ், சுகுமார் என்றவர்கள் இப்போது சந்தீப் ரெட்டி வங்காயும் சேர்த்து விடலாம்.
இந்தப் பட்டியலில் இருக்கும் சுகுமாருக்கு அடுத்து ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ’புஷ்பா 2’ பெரும் வெற்றியடைய வேண்டும். அதே போல் பிரஷாந்த் நீலுக்கு பிரபாஸை வைத்து இயக்கி இருக்கும் ‘சலார்’ படம் வெற்றிப் பெற்றே ஆக வேண்டும்.
ஆனாலும் இந்த தென்னிந்திய இயக்குநர்களின் படங்கள் இந்தியா முழுவதிலும் தூள் கிளப்பியதால் பாலிவுட் இயக்குநர்களை விட இவர்களுக்கு மவுசு அதிகமாகி இருக்கிறது.