No menu items!

சென்னை மக்களுக்கு 5000 ரூபாய் – திமுக திட்டம் – மிஸ் ரகசியா

சென்னை மக்களுக்கு 5000 ரூபாய் – திமுக திட்டம் – மிஸ் ரகசியா

”உங்களுக்கெல்லாம் எப்போ கரண்ட் வந்துச்சு” என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தாள் ரகசியா.

“எங்களுக்கு செவ்வாய்கிழமை ராத்திரிதான் வந்துச்சு. நிறைய இடத்துல புதன், வியாழன் தான் வந்துச்சாமே”

“ஆமாம். அதுல ரொம்ப பாவம் வட சென்னை மக்கள்தான். அவங்களை யாருமே கண்டுக்கல. அதுல ரொம்ப வெறுத்துப் போயிட்டாங்க”

“அதான் அந்த ஏரியாவை சேர்ந்த மேயர் பிரியவையே கேள்வி கேட்டாங்களே”

“அவங்களை மட்டுமா சேகர்பாபுக்கு நிலைமை மோசமாதான் இருக்கு. அந்த மக்கள் அத்தனை கொதிச்சு போயிருக்காங்க.வண்ணாரப்பேட்டை, எண்ணூர், திருவொற்றியூர், வியாசர்பாடின்னு அந்த ஏரியாலாம் கஷ்டப்படும்போது வேளச்சேரி, துரைப்பாக்கம்னு தென்சென்னை பகுதிகள்லயே எல்லோரோட கவனமும் சுத்திட்டிருக்கு”

“பாவம்தான். வெள்ளத்தால திமுக அரசோட இமேஜுக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கே. 4000 கோடி ரூபாய் என்னாச்சுன்னு எதிர்கட்சிங்க மட்டுமல்ல எல்லோருமே கேள்வி எழுப்புறாங்களே?”

“முதல்வர் ரொம்ப அப்செட். இத அவர் எதிர்பார்க்கல. இன்னும் ஆறு மாசத்துல தேர்தல் வருது. இந்த நேரத்துல இப்படி ஆகிடுச்சேனு கோபமா இருக்கிறார். அவர் உடல்நிலையும் எல்லா இடங்களையும் சுத்திப் பாக்க ஒத்துழைக்கல”

“ஆமாம். ஜீப்ல ஏறுவதற்கே தடுமாறினாரே”

”ஆமாம். அவருக்கு இப்ப கவலை ஜாஸ்தியாயிடுச்சு. குடும்பத் தலைவிகளுக்கு 1,000 ரூபாய், பெண்களுக்கு இலவச பஸ் பயணம் திட்டங்கள்லாம் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு வாக்கு வங்கியா மாறும்னு உறுதியா நம்பிட்டு இருந்தார் முதல்வர். ஆனா இந்த மழை வெள்ளத்துக்குப் பிறகு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள்ல திமுகவுக்கு வாக்குகள் குறையும்னு நினைக்கிறார். அது மட்டுமில்லாம அமைச்சர்களுக்கு எதிரா மக்கள் குரல் கொடுத்ததுதான் அவரை ரொம்ப பாதிச்சிருக்கு போல. அத பத்தி விசாரிக்க சொல்லியிருக்கிறாராம். நிஜமாவே மக்கள்தானா இல்ல அதிமுக, பாஜக தூண்டிவிட்டு சிலர் எதிர் குரல் கொடுக்கிறாங்களானு கேட்டிருக்கிறார். உளவுத் துறை விசாரிக்க தொடங்கியிருக்கு”

”ஆமா, இதெல்லாம் திமுகவுக்கு புதுசு. என்ன செய்யப் போறாங்க”

“அதிகாரிகள், அமைச்சர்கள் தனக்கு வடிகால் பணி நிலவரத்தை சரியா சொல்லலனு முதல்வர் அதிருப்தி காட்டியிருக்கிறார். வழக்கமான மழையைவிட அதிகம் மழை வந்ததால் கால்வாய்லாம் தாங்கலனு அமைச்சர்களும் அதிகாரிகளும் சொல்லியிருக்காங்க”

”அதை முதல்வர் ஏத்துக்கிட்டாராமா?”

“இல்லை, நீங்க எல்லோரும் என் கிட்ட கள நிலவரத்தை சொல்லவே இல்லை. நான் உங்களை நம்பினேன்னு மூத்த அமைச்சர்கள்கிட்ட சொன்னாராம்”

“அதுக்கு அவங்க என்ன பதில் சொன்னாங்களாம்”

“அதெல்லாம் சமாளிச்சிரலாம்னு ஜெயலலிதா உதாரணத்தை சொல்லியிருக்காங்க. 2015 சென்னை வெள்ளத்துல அத்தனை பேரு செத்தாங்க. ஆனா அப்புறம் வந்த தேர்தல்ல அதிமுகதான் ஜெயிச்சது. காரணம் அவங்க சென்னைல இருக்கிற எல்லோருக்கும் ஐயாயிரம் ரூபாய் கொடுத்தது. அப்படி நாமும் மக்களுக்கு நிவாரணத் தொகை கொடுக்கலாம்னு யோசனை சொல்லியிருக்காங்க”

“அப்போ எல்லோருக்கும் ஐயாயிரம் ரூபாய் கிடைக்க போகுதா?”

“அதுக்கு நிதி நிலைமை கைகொடுக்கணும்ல. ஏற்கனவே மாசம் மாசம் ஆயிரம் ரூபாய் பெண்களுக்கு போகுது. இதுல இந்த செலவானு நிதித் துறை அதிகாரிகள் மட்டத்துல முணுமுணுப்பு கிளம்பியிருக்கு”

”அவங்க முணுமுணுப்பும் கரெக்ட்தான். சரி, மீட்பு பணிகளில் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் தீவிரமா செயல்படணும்னு முதல்வர் சொல்லி இருக்காரே?”

“ஆனா அதுலயும் சின்ன பாலிடிக்ஸ் இருக்கு. மீட்புப் பணிகளை மேற்பார்வையிட ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு அமைச்சரை நியமிச்சு இருக்காங்க. ஆனா அந்த அமைச்சர்களுக்கு, உள்ளூர் திமுகவினர் சரியா ஒத்துழைப்பு கொடுக்கலையாம். அமைச்சர்களும் இதை உணர்ந்திருக்காங்க. அதனால சம்பந்தப்பட்ட பகுதியில் பொறுப்பேற்றிருக்கும் அமைச்சர்கள் தங்கள் மாவட்ட கட்சி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு நிவாரண பொருட்களை அனுப்பச் சொல்லி உத்தரவு போட்டு இருக்காங்க. உதாரணமா அமைச்சர் முத்துசாமி இப்ப கோவை மாவட்ட பொறுப்பாளரா இருக்கறதால அங்க இருந்து நிவாரண பொருட்களை அனுப்பச் சொல்லி இருக்கார். காஞ்சிபுரம் பகுதிக்கு கோவையில இருந்து பத்து லாரியில் நிவாரண பொருட்கள் வந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் விநியோகம் செய்யப்படுது. அதேபோல் அமைச்சர் நேரு திருச்சி மற்றும் சேலத்தில் இருந்து நிவாரண பொருட்களை வரச் செய்து தனக்கு கொடுக்கப்பட்ட பகுதியில மக்களுக்கு விநியோகிச்சிருக்கார். எ.வ.வேலு திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து நிவாரணப் பொருட்களை வரவைத்து தனது பொறுப்புள்ள பகுதிக்கு வழங்கியிருக்கார். தங்கள் மாவட்டங்கள்ல இருந்து பொருட்களை விநியோகிக்கற அமைச்சர்கள், அதோட தங்களுக்கு ஒத்துழைக்காத உள்ளூர் பிரமுகர்கள் பத்தி கட்சி தலைமை கிட்ட புகார் சொல்லி இருக்காங்க”

“ நிவாரணங்களுக்குப் பிறகு முதல்வர் ஆக்‌ஷன் என்னவாக இருக்கும்?”

“வெள்ள நிலைமை சீரானதும், முறையா செயல்படாத ஆட்கள் மேல நடவடிக்கை எடுப்பேன்னு உறுதி கொடுத்திருக்காராம். அதே நேரம் காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் போன்ற கூட்டணி கட்சிகளும் மீட்பு பணிகள்ல பெருசா உதவலைங்கிற கோபம் அவருக்கு இருக்கு. குறிப்பா வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினரான ஹசன் மவுலானா பேசுன பேச்சுல அப்பகுதி மக்கள் கொந்தளிச்சு போயிருக்காங்க. அவர் மேலயும் முதல்வர் கோபமா இருக்கார். காங்கிரஸ் தலைவர்கள்கிட்ட அவரைப் பத்தி திமுககாரங்க புகார் கொடுத்திருக்காங்க”

“எல்லா விஷயத்துலயும் மூக்கை நுழைக்கற ஆளுநர், வெள்ளம் விஷயத்துல எந்த நடவடிக்கையும் எடுக்கலையே. எந்த இடத்தையும் போய் பார்வையிடலயே?”

“ஆளுநர் இந்த விஷயத்துல ஆர்வமாத்தான் இருந்தார். ஆனா மத்திய அரசுதான் வேணாம்னு தடுத்திருக்கு.”

“ஏன்?”

“ஆளுநர் மேல தமிழக அரசு தொடர்ந்த வழக்கு விசாரணையின்போது ‘அரசின் மசோதாக்களுக்கு காலதாமதம் இன்றி ஆளுநர்கள் ஒப்புதல் தர வேண்டும். ஆளுநர்கள் தங்கள் கடமையை உரிய நேரத்தில் செய்ய தவறினால் மசோதாக்கள் ஒப்புதல் தர உச்ச நீதிமன்றம் புதிய விதிகளை வகுக்க நேரிடும்’னு சொல்லி இருக்கு. உச்ச நீதிமன்றம் சொன்ன இந்த கருத்து ஆளுநருக்கு இல்லை. நமக்கான எச்சரிக்கைன்னு மத்திய அரசு நினைக்குது. இந்த நேரத்துல ஆளுநரை வெள்ளம் விஷயத்துலயும் மூக்கை நுழைக்க விட்டு கெட்ட பெயர் சம்பாதிச்சுக்க வேணாம்னு நினைக்குது. அதனாலதான் ஆளுநருக்கு அவங்க தடை விதிச்சிருக்காங்க.”

“5 மாநில தேர்தல்ல காங்கிரஸ் கட்சி பெரிய அடி வாங்கி இருக்கே. இது இந்தியா கூட்டணியை பாதிக்குமா? அந்த கூட்டணியில காங்கிரஸ் கட்சிக்கு பழைய செல்வாக்கு இருக்குமா?”

“காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரைக்கும் எந்த கட்சியோடயும் கூட்டணி சேராம தனிச்சு நின்னே இந்த அளவுக்கு வாக்குகளை வாங்குனது பெரிய விஷயம்னு நினைக்குது. ‘நாடாளுமன்ற தேர்தல்ல பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலதான் போட்டிங்கிற நிலை 5 மாநில தேர்தலுக்கு பிறகு உருவாகிடுச்சு. குறைந்த அளவு சதவீத வித்தியாசத்தில்தான் நாம் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம் இதற்கு சனாதன எதிர்ப்பு பிரச்சாரமும், கோஷ்டி பூசலும்தான் காரணம். இன்னும் கடுமையா உழைச்சா நாடாளுமன்ற தேர்தல்ல அதிக இடங்களில் ஜெயிக்கலாம்’னு காங்கிரஸ் தலைவர்கள்கிட்ட ராகுல் காந்தி சொல்லி இருக்கார். இந்தியா கூட்டணியில மற்ற கட்சிகளுக்கு கட்டளையிடற இட்த்தில் நாம இருக்கணும்னு அவர் சொல்லி இருக்காராம்.”

“சட்டமன்ற தேர்தல்கள்ல பாஜக ஜெயிச்சதால அதிமுகவோட அணுகுமுறைகள்ல மாற்றம் வருமா?”

“இந்த சந்தேகம் சில அதிமுக தலைவர்களுக்கும் வந்திருக்கு. வேலுமணியும், கே.பி.முனுசாமியும் இதைப்பத்தி எடப்பாடிகிட்ட கேட்டிருக்காங்க. அதுக்கு எடப்பாடி பழனிசாமி, ‘நம்ம நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. பாரதிய ஜனதா வட மாநிலங்களில்தான் செல்வாக்கு பெற்ற கட்சியா இருக்கு. தென்னிந்தியாவில் அப்படி இல்லை. தென்னிந்தியாவில் காங்கிரஸ் கட்சி மெல்ல வளரத் தொடங்கி இருக்கு. நாம இதைத்தான் கவனிக்கணும். இந்த நேரத்துல நாம பாஜகவைப் பத்தி கவலைப்பட வேண்டாம். அதேநேரத்தில் மழை வெள்ளத்தால் திமுக மீது மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். அதை நமக்கு சாதகமாக்க பார்க்கணும்’னு சொல்லி இருக்காரு”

“எடப்பாடியின் தன்னம்பிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கு”

“ஆமாம். அவருக்கு மழை வெள்ளம்னு இயற்கையும் கை கொடுக்குது” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...