இந்திய கிரிக்கெட்டில் சர்ச்சைக்குரிய நபர்கள் ஸ்ரீஷாந்த்தும், கவுதம் காம்பீரும். செல்லும் இடங்களில் எல்லாம் ஏதாவது ஒரு சர்ச்சையை உருவாக்குவது அவர்களின் வழக்கம்.
2008-ம் ஆண்டில் நடந்த ஐபிஎல்லில் ஹர்பஜனிடம் வாயைக் கொடுத்து கன்னத்தில் அறை வாங்கியது, 2013-ம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியின்போது சூதாட்ட புகாரில் சிக்கியது, பிசிசிஐக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது என ஒரு பக்கம் ஸ்ரீஷாந்த்தின் சர்ச்சைப் பட்டியல் நீண்டு கிடக்கிறது.
அதற்கு சற்றும் குறையாமல் காம்பீருக்கும் சர்ச்சைப் பட்டியல் உண்டு. தோனிக்கு எதிராக அவ்வப்போது பேட்டிகள் கொடுப்பது, ஐபிஎல் போட்டிகளின்போது விராட் கோலியுடன் சண்டைக்குப் போனது என கிரிக்கெட் ரசிகர்களுக்கு சர்ச்சை தீனி போடும் வள்ளல் காம்பீர். கிரிக்கெட் போதாதென்று அவ்வப்போது அரசியலிலும் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது அவருக்கு பொழுதுபோக்கு.
இப்படி சர்ச்சைகளால் உருவான இருவர் ஒரு இடத்தில் மோதிக் கொண்டால் என்ன நடக்கும்? சூரத் நகரில் நடந்த லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று இருவரும் மோதிக் கொள்ள இன்று பரபரப்பான ஒரு புதிய சர்ச்சை கிரிக்கெட் உலகுக்கு கிடைத்திருக்கிறது.
மோதலைப் பற்றி தெரிந்துகொள்ளும் முன், லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டைப் பற்றி தெரிந்துகொள்வோம். ஐபிஎல் கிரிக்கெட்டின் இன்னொரு வடிவம்தான் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் லீக். ஐபிஎல் கிரிக்கெட்டில் இப்போதைய கிரிக்கெட் நட்சத்திரங்கள் ஆட, லெஜண்ட்ஸ் கிரிக்கெட் லீக்கில் ஓய்வுபெற்ற கிறிஸ் கெயில், காம்பீர், ரெய்னா, ஸ்ரீஷாந்த், டைன் ஸ்மித், முகமது கைஃப் போன்ற பல கிரிக்கெட் வீர்ர்கள் ஆடி வருகிறார்கள். 20 ஓவர்களைக் கொண்ட இந்த தொடரின் ப்ளே ஆஃப் சுற்று போட்டிகள் இப்போது சூரத் நகரில் நடந்து வருகின்றன. இதில் காம்பீரின் இந்தியா கேபிடல்ஸ் அணியும், ஸ்ரீஷாந்த்தின் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் நேற்று மோதியபோதுதான் இருவருக்கும் மோதல் எழுந்தது.
இந்த போட்டியின்போது ஸ்ரீஷாந்த் வீசிய ஒரு பந்தை பவுண்டரிக்கு பறக்க விட்டிருக்கிறார் காம்பீர். அப்போது காம்பீரைப் பார்த்து ஸ்ரீஷாந்த் முறைக்க, அவரைப் பார்த்து சில தகாத வார்த்தைகளைக் கூறியிருக்கிறார் காம்பீர். அம்பயர் வந்து காம்பீரை சமாதானப்படுத்தியும் அவர் கோபத்தில் கத்துவதை தொலைக்காட்சிகளில் காட்டியிருக்கிறார்கள்.
இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த சண்டையைப் பற்றிய தனது விளக்கத்தை அளித்திருக்கிறார் ஸ்ரீஷாந்த்.
“காம்பீருக்கு மூத்த வீர்ர்களை மதிக்கத் தெரியாது. வீரேந்தர் சேவக், விராட் கோலி என்று எல்லோருடனும் அவருக்கு சண்டைதான். எந்த காரணமும் இல்லாமல் எல்லோருடனும் அவர் சண்டை போடுவார். அதுதான் நேற்றும் நடந்தது. நேற்றைய போட்டியின்போது என்னைப் பார்த்து fixer என்று திட்டினார் கவுதம் காம்பீர். கூடவே சில தகாத வார்த்தைகளையும் அவர் கூறினார். நான் எந்த சண்டைக்கும் போகாமலேயே அவர் அந்த வார்த்தையைக் கூறினார்.
மேட்ச் பிக்சிங் தொடர்பான தவறான குற்றச்சாட்டால் நானும், என் குடும்பமும், என் மாநிலமும் ஏற்கெனவே நிறைய பாதிக்கப்பட்டிருக்கிறோம். இனியும் அந்த பொய்யான குற்றச்சாட்டை பொறுத்துக்கொள்ள முடியாது. அத்துடன் தவறான சில வார்த்தைகளையும் அவர் பயன்படுத்தி உள்ளார். இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று ஸ்ரீஷாந்த் கூறியுள்ளார்.