No menu items!

மழையோடு மழையாக! – மனுஷ்ய புத்திரனின் மழைக் கவிதைகள்

மழையோடு மழையாக! – மனுஷ்ய புத்திரனின் மழைக் கவிதைகள்

மிக்ஜாம் புயல் பேயாட்டம் ஆடிய சூழலில், தன் அனுபவங்களை கவிதைகளாக முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் கவிஞர் மனுஷ்ய புத்திரன். அந்த கவிதைகளில் சில

மழைக்கவிதைகள் 1

சட்டென இருட்டிவிட்டது
மழை நீரில் விழுகிறது
இரவின் நிழல்

இப்போது மழையின் தனிமை
வெகுவாக கூடிவிட்டது

பிசாசாசைப்போல
தண்ணீரில் நடந்து செல்கிறது
இருள்
ஆளற்ற சாலைகளில்
இருளையும் மழையையும் தவிர
யாருமில்லை

இந்த நாளின் மனச்சோர்வு
திடீரென ஒரு கனத்த சுமையாக மாறுகிறது
இடையறாத காற்றினூடே
அவ்வளவு வருத்தமாய்
ஒன்றை நினைக்கிறேன்
என் இதயத்தின் கிளை ஒன்று முறிகிறது

இடையறாத மழைச்சத்தத்தினூடே
ஒரு முகத்தை நினைத்துவிடுகிறேன்
மழை நீரில் சூடான கண்ணீர் ஒன்று விழுகிறது

மழையோடு மழையாக
எங்கோ பள்ளிவாசலிருந்து
தொழுகைக்கான அழைப்பு
நனைந்துகொண்டே வருகிறது
நான் மேலும் முறிந்துவிடாதிருக்க
கடவுள் கை நீட்டுகிறார் என
நானாக நினைத்துக்கொள்கிறேன்

பொருள் ஈட்டவோ
எவரையும் ஏமாற்றவோ
எனக்குத் திறமைகள் ஏதுமில்லை
மழை செல்லும் பாதைகளை
பின் தொடர்ந்துபோவேன்
அவ்வளவுதான்

உங்களைப் பற்றி
நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ
அதையேதான்
என்னைப்பற்றி நானும் நினைக்கிறேன்
‘ நாம் இதைவிட மேலாக நடத்தப்படவேண்டியவர்கள்
ஒரு உண்மையான அன்புக்கு தகுதியானவர்கள்’

மழையிருளில்
அதற்குள் இரவு வந்துவிட்டது
உண்மையான இரவு வர
இன்னும் எவ்வளவோ நேரமிருக்கிறது

இந்தக் காற்றையும் மழையையும்
எவ்வளவு குழப்பத்யோடும் பதற்றத்தோடும்
என் நாய்க்குட்டி எதிர்கொள்கிறதோ
அப்படித்தான் நானும் எதிர்கொள்கிறேன்

இந்த மழை என் துயரத்தின் ஏரி ஒன்றை
நிரப்பிக்கொண்டிருக்கிறது
எப்போது உடைவேன் என்று தெரியாது
ஆனால்
உடைவேன் என்று தெரியும்

மழைக்கவிதைகள் – 2

வெய்யில் அடிக்கும் ஊரில் இருப்பவர்கள்
பெரு மழை பெய்யும் ஊரில் இருப்பவர்களின்
மனநிலைகளை எப்படிப் புரிந்துகொள்வார்கள்?

புரிந்துகொள்ள இயலாது
ஒவ்வொரு மழைக்கும்
தனித்துவமான சில இன்பங்களுண்டு
தனித்துவமான சில துன்பங்களுண்டு

மழை தண்ணீரால் பெய்கிறது
என்று மட்டும் வேண்டுமானால்
மழைக்கு வெளியே இருப்பவர்கள்
புரிந்துகொள்ள்ளலாம்

அந்தந்த மழைகளை
அந்த மழைக்குள்
இருப்பவர்கள் மட்டுமே
அறிய முடியும்

மேலும்
ஒரே மழைக்குக் கீழ் நனைபவர்களுக்கு
ஒரே குடையில் இருப்பவர்களிடையே
ஒரு பந்தம் உருவாவதுபோல
ஏதோ ஒரு பிணைப்பு உருவாகிவிடுகிது

மழைக்கவிதைகள் – 3

மழையில் தேநீர் இனியது என்பது
நெடுங்காலமாக நிலவி வரும் நம்பிக்கை
எல்லோருக்கும் அப்படியல்ல

காலையில் முழங்கால் அளவு தண்ணீரில்
காற்று குடையைப் பிடுங்கும் புயலில்
நிலவில் நடப்பதுபோல
அடிமேல் அடிவைத்து
நீரில் நகர்ந்து நகர்ந்து வருகிறாள்
பாக்கெட் பால் போடும் பெண்மணி

” இந்த மழையில் வரவேண்டுமா?” என்ற
என் கேள்விக்கு அவள் பதில் அளிக்கக்கூட இல்லை
ஏறெடுத்துப் பார்க்கவில்லை
பால் பாக்கெட்டை நீட்டிவிட்டு
மஞ்சள் பை முழுக்க பால் பாக்கெட்டுகளுடன்
அவள் மற்றவீடுகள் நோக்கி
நீரில் ஒரு வாத்தைபோல மிதந்து செல்கிறாள்

எளிய மனிதர்கள்
வெய்யிலில் அலைவதுபோலத்தான்
காற்றிலும் மழையிலும் அலைந்து திரிகிறார்கள்
அவர்கள் வேலைகளுக்கு
அவசர கால விடுப்புகள் இல்லை
மழைக்காலத்தின்
உற்சாகமான தேநீரை உருவாக்க
அவர்கள் வந்துதானாகவேண்டும்
அவர்கள் வானிலை அறிக்கைகளை படிப்பதில்லை
புயல் எச்சரிக்கைக் கூண்டுகளின்
எண்களைப் பார்ப்பதில்லை
தொலைக்காட்சி வர்ணையாளர்களின்
போலிப் பதற்றங்களை கவனிப்பதில்லை

அவள் தெருமுனையில்
ஒரு சின்ன நீர்துளியென மறையும்வரை
பார்த்துக்கொண்டிருந்தேன்
மழைக்கால தேநீர் என்பது
இனிமையற்ற பலவற்றால் உருவாக்கப்படுகிறது

மேலும் பால்பாக்கெட்டுகளையோ
காய்கறிகளையோ வாங்க
முழங்கால் அளவு தண்ணீரில்
அனுப்பப்படும் முதியவர்கள் பலரையும்
பார்த்துக்கொண்டிருந்தேன்
வீட்டு வேலைகளுக்கு
ரெயின் கோட் இல்லாமல் செல்லும்
பணிப்பெண்களை பார்த்துக்கொண்டிருந்தேன்

மழைக்கால தேநீர்
எல்லா நேரத்திலும்
இனியதாக இல்லை
அதில் எப்படியோ
குற்ற உணர்வின் உப்புக் கரிப்பு
சேர்ந்துவிடுகிறது

மழை எல்லோருக்கும்
ஜன்னல் வழி காணும் மழையல்ல
அது தலைமேல் நேராகவும் பெய்கிறது

மழைக்கவிதைகள் 4

‘சீக்கிரம் எனக்கு பதிலளி
செல்போனில் சார்ஜ்
தீர்ந்துகொண்டிருக்கிறது

இரண்டுநாளாய் மின்சாரம் இல்லை
எப்போது வருமென்று தெரியாது
செல்போனில் 3 பெர்செண்டேஜ்தான்
இருக்கிறது.

பேசு ஏதாவது பேசு
பேசாவிட்டாலும் பேட்டரி தீர்ந்துவிடும்

மின்சாரம் வரும்வரை
வாடாத உன் சொல்லின் மலரொன்றை
எனக்குக் கொடு
நான் அதை என் மார்பில் ஏந்தி
நுகர்ந்துகொண்டே இருப்பேன்

இது ஒன்றுமே இல்லாத நாள்
எங்குமே நகரமுடியாத இடம்
இது ஒரு நீர்ச்சிறை
நீ மேடான நிலத்தில் வசிக்கிறாய்
நான் ஆற்றங்கரையோரம் தத்தளிக்கிறேன்
இங்கு எளிதில் நீர் வடியாது
உன் முத்தத்தின் கரை ஒன்றை
எனக்குக் காட்டு

இதோ பேட்டரி ஒரு நிமிடம்தான் காட்டுகிறது
இது கடைசி மூச்சுபோல இருக்கிறது
கடைசி தருணத்தில்
உன் கைகளை பற்றிக்கொள்வதுபோல
இருக்கிறது

எல்லோரும் இருக்கிறார்கள்
எனினும்
யாருமில்லை
யாருமில்லை
யாருமில்லை
நீ மட்டும்தான் இருக்கிறாய்
இந்த இருளில்
வேறு விளக்குகளே இல்லை

என்னை கண்ணீர் சிந்தவைக்கிறாய்
இந்தக் குளிரில் அழுவது
இந்த இருளில் அழுவது
மிகவும் துயரமாக இருக்கிறது

இன்னும் சில விநாடிகளில்
இந்த போன் அணைந்துவிடும்
யாருக்குத் தெரியும்
ஏதோ ஒரு நாளில்
நீயும் என் வாழ்வில் இதேபோல
அணைந்துபோனாலும் போவாய்

ஆனால்
நீ என்றெனெக்குத் தேவை
எவ்வளவு இருக்கிறாயோ
அதைவிடவும் கூடுதலாகத் தேவை
இந்தப் பேட்டரி தீர்ந்துகொண்டிருக்கிறது

எப்போது வருவேன் எனத் தெரியவில்லை
கடவுளே
இது என்ன
உன்னிடம் நான் விடைபெறப்போகும்
நாளின் சிறு ஒத்திகையா?”

நான் படித்துக்கொண்டேயிருந்தேன்
அப்புறம் அவளிடமிருந்து
சொற்கள் ஏதும் வரவில்லை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...