’திருவிளையாடல்’ படத்தில் வருவது போல், சிவனுக்கும், தருமிக்கும் இடையில் மீண்டுமொரு கேள்வி-பதில் அனுபவம் நிகழ்ந்தால், தமிழ் சினிமாவின் பாதிப்பால் அது இப்படியாகவும் இருக்கலாம்.
”தவிர்க்கவே முடியாதது?”
“கொரியா படங்களும், ஐரோப்பியப் படங்களும்.”
”சேர்ந்தே இருப்பது?”
ஒவர் பில்டப்பும், பொய்யான பப்ளிசிட்டியும்”
”பிரிக்க முடியாதது?”
“அறியாமையும், ஆஸ்கர் விருதும்”
கட்டுரையின் தலைப்புக்கும், அதன் ஓபனிங்குக்கும் சம்பந்தமே இல்லையே என நீங்கள் புரியாமல் தவிப்பது புரிகிறது., தமிழ் சினிமாவை பற்றிய செய்திகளை தவறாமல் படிப்பவராக இருந்தால், ’ஆஸ்கர் விருதை வெல்வதே என் லட்சியம்’, ‘எங்கள் படம் கான்ஸ் ஃப்லிம் ஃபெஸ்டிவலில் திரையிடப்பட்டது தமிழ் சினிமாவுக்கே பெருமை’ என ஒரு சில படைப்பாளிகள் பரபரப்பாக பேட்டியளித்தைப் படித்திருப்பீர்கள்.
இதுவரையில் 56 திரைப்படங்கள் இந்தியாவிலிருந்து ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதில் சிவாஜி கணேசன் நடித்த ‘தெய்வமகன்’, கமல் நடித்த ‘நாயகன்’, ‘தேவர்மகன்’, ’குருதிப்புனல்’, ’ஹே ராம்’, மணிரத்னத்தின் ‘அஞ்சலி’, ஷங்கரின் ‘ஜீன்ஸ்’, வெற்றிமாறனின் ‘விசாரணை’ ஆகிய 8 தமிழ்ப்படங்களும் அடங்கும். ஆனால் இதுவரையில் ஒரு ஆஸ்கர் விருதை கூட நம் படங்கள் பெறவில்லை.
உண்மையில் ஆஸ்கர் விருது தமிழ் சினிமாவுக்கு சாத்தியமா? பரபரப்பாக பப்ளிசிட்டி செய்யப்பட்ட படங்கள் பெரும்பாலானவை உலகப் புகழ் பெற்ற திரைப்பட விழாக்களில் விருதுக்கான போட்டியில் பரிந்துரைக்கப்பட்டு, திரையிடப்பட்டவையா என்றால், நிச்சயம் இல்லை.
இதற்கான பதில் மிகவும் சாதாரணமானது. உலகப்புகழ் பெற்ற ’ஆஸ்கர் விருது’ அல்லது ‘அகாடெமி விருது’ என்பது ஆங்கில மொழி பேசுபவர்களால், ஆங்கிலப் படங்களை மட்டும், குறிப்பாக அமெரிக்கப் படங்களைப் பாராட்டும் விதமாக, கெளரவப்படுத்தும் விருது. ஒராண்டில் வெளியான படங்களில் சிறந்த படமொன்றைத் தேர்ந்தெடுத்து அதன் இயக்குநருக்கோ, தயாரிப்பாளருக்கோ அல்லது தொழில்நுட்ப கலைஞர்களுக்கோ இவ்விருதை வழங்கி கெளரவிப்பார்கள். அமெரிக்காவின் உயரிய விருதுக்கு, உலகளாவிய வரவேற்பும், மரியாதையும் இருக்கவேண்டுமென்பதற்காகவே 1956-ல் போட்டியின் மூலம் தேர்ந்தெடுத்து வழங்கும், ‘பெஸ்ட் ஃபாரின் லாங்க்வேஜ் அவார்ட்’ உருவாக்கப்பட்டது. ஆங்கில மொழியில் எடுக்கப்பட்ட படங்களுக்கு மட்டுமான விருதை, ஒரு தமிழ்ப்படம் வெல்வது எப்படி சாத்தியமாகும்?
அப்படியானால் ஆஸ்கர் விருதை வெல்லவே முடியாதா? முடியும்! Best Foreign Language Film என்ற பிரிவில் வேண்டுமானால் தமிழ்ப் படங்கள் தனி விருதை வெல்லும் வாய்ப்பு இருக்கிறது. இந்த அந்நிய மொழி திரைப்பட விருதுகள் கூட, அதிகப்பட்சமாக ஐரோப்பியப் படங்களுக்கே (55 – 75 படங்கள்) அதிகம் வழங்கப்பட்டு வந்திருக்கிறது. இவ்விருதை வென்ற ஆசியாவைச் சேர்ந்த படங்கள் வெறும் விரல் விட்டு எண்ணும் அளவிலேயே அடங்கியிருக்கின்றன. ஆனால் இங்கு படைப்பாளிகளில் பலர் முன்னிறுத்தி சொல்லும் கருத்து, ‘தமிழ் சினிமா ஆஸ்கர் விருதை ஒரு நாள் வெல்லும்’ என்பதே. அது ‘பெஸ்ட் ஃபாரீன் லாங்க்வேஜ்’ பிரிவில் மட்டுமே சாத்தியமாகக்கூடும்.
ஆஸ்கர் விருதில் முன்வைக்கும் கருத்துகளைக் கூட ஏற்று கொள்ளமுடியும். ஆனால் உலகின் புகழ்பெற்ற திரைப்பட விழாக்களில் தமிழ்ப் படங்கள் திரையிடுவது பற்றி, சில விவரங்கள் மறைக்கப்படுகின்றன அல்லது சொல்லாமல் தவிர்க்கப்படுகின்றன. உதாரணத்திற்கு, புகழ்பெற்ற ‘கான்ஸ்’ திரைப்பட விழாவை எடுத்துக் கொள்வோம். இத்திரைப்பட விழாவில், Competition, Out of Competition, Un Certain Regard மற்றும் Cinefondation ஆகிய பிரிவுகளில் திரைப்படங்கள், குறும்படங்கள் திரையிடப்படுகின்றன. இதில் போட்டிப் பிரிவில் (Competition) திரையிடப்படும் படங்களுக்கே ‘ரெட் கார்பெட்’ வரவேற்பு அளிக்கப்பட்டு கெளரவிக்கப்படுகிறது. இதரப் பிரிவுகளில் திரையிடப்படும் படங்கள், திரைப்பட விழாவின் போது, விருதுகளுக்கு அல்லாமல் திரையிடுவதற்கு மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
இதில் இன்னொரு பிரிவு Marché du Film என்பதாகும். இது திரைப்படங்களின் உலகளாவிய சந்தைக்கான பிரிவாக திகழ்கிறது. அதாவது, இப்பிரிவில் யார் வேண்டுமானாலும் தங்களது படத்தை திரையிடலாம். திரையிடலுக்கான கட்டணத்தை மட்டும் செலுத்தி விட்டால் போதும், உங்களுடைய படம் திரையிடப்படும். பெரும்பாலான பாலிவுட் மற்றும் கோலிவுட் படங்கள் இந்த பிரிவில்தான் திரையிடப்படுகின்றன. ஒரு படத்தின் வணிகரீதியிலான பலன்களுக்காக பயன்படுத்தப்படும் இப்பிரிவில் தங்களது படம் திரையிடப்படுவதையே, கான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டதாக, தமிழ் சினிமாவில் பலர் பெருமையுடன் பேட்டி கொடுக்கிறார்கள். கூச்சப்படாமல் பெரும் விளம்பரமும் செய்கிறார்கள்.
உண்மையை முழுவதும் சொல்லாமல் மேலோட்டமாக கூறி, விளம்பரம் தேடும் இத்தகைய ட்ரெண்ட் தமிழ் சினிமாவிற்கு ஆரோக்கியமானது அல்ல. மேலும் இத்தகைய தகவல்களை வெளியிடும் போது ஊடகங்கள் அதன் பின்னணியை முழுவதுமாக அறியாமல் செய்தி வெளியிடுவதும் பிழையுள்ள வரலாற்றை உருவாக்கும்.
ஒரு வரலாற்று பின்னணியை உடைய நகரின் பெயரில் வெளியான படமொன்று இதே போல் கான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில், எங்களது படம் கான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படுவது தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பெருமை என்றரீதியில் படத்தின் நாயகன் கூறினார். ஒரு கட்டத்தில், இப்படம் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்பட்டதா அல்லது போட்டியில்லாத பிரிவில் திரையிடப்பட்டதா என்று கேள்வி எழுப்பப்பபட்டது. அந்த கேள்வியை நாயகன் எதிர்பார்க்கவில்லை. ‘சொல்றேன் செல்லம்’ என்றபடி அடுத்தடுத்த விஷயங்களுக்குத் தாவிவிட்டார். பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்ததும், தனியாக வந்து அப்படத்தின் திரையிடலைப் பற்றிய பின்னணி தகவலைக் கூறினார். இதுபோன்றுதான் இன்று தமிழ் சினிமாவில் விருதுகளைப் பற்றி தகவல் பரிமாற்றம், ஒரு மாய பிம்பத்தை உருவாக்கி கொண்டிருக்கிறது.
உண்மையில், திரைப்பட விருதுகளும், திரைப்பட விழாக்களும் ஒரு படைப்பாளி தளர்ந்து போகும்போதெல்லாம், தாங்கிப் பிடிக்கும் கலைத்தாயின் கரங்களாகவே இருக்கின்றன. அந்த கரங்களை சுய விளம்பரத்திற்காக கறைப்படுத்துவது என்பதுதான் இன்றும் அரங்கேறி வருகிறது. இதனால், படைப்பாளிகளின் மீது பாமர ரசிகன் வைத்திருக்கும் பிம்பம் வெறும் மாயை என்ற சூழலைத் தவிர்க்க பொய்யான பப்ளிசிட்டிக்கும், பில்டப்புக்கும் இனியாவது முக்கியத்துவம் கொடுக்காமல் கோலிவுட் இருக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வி.