No menu items!

சூரியன் நாளையும் உதிக்கும் – சோகத்தில் வீரர்கள் டானிக் கொடுத்த ராகுல்

சூரியன் நாளையும் உதிக்கும் – சோகத்தில் வீரர்கள் டானிக் கொடுத்த ராகுல்

இந்த உலகக் கோப்பையில் இந்திய அணி வெற்றிகரமான அணியாக உருவெடுக்க முக்கிய காரணம் அணியின் டிரெஸ்ஸிங் ரூம். அணியின் தொடர்ச்சியான 10 வெற்றிகளுக்கும் காரணமாக இருந்த விஷயம் டிரெஸ்சிங் ரூமில் நம் வீர்ர்களிடையே இருந்த நட்பும், விட்டுக்கொடுக்கும் தன்மையும்தான்.

சில மாதங்கள் முன்புவரை இந்திய டிரெஸ்ஸிங் ரூம் ரோஹித் அணி, கோலி அணி என்று இரண்டாக பிரிந்திருந்தது. ஆனால், இது தங்களின் கடைசி உலகக் கோப்பை என்பதை உணர்ந்ததால், இருபெரும் ஜாம்பவான்களும் தங்கள் வேற்றுமைகளை மறந்து கைகோர்த்தனர். இந்திய அணியின் டிரெஸ்சிங் ரூமில் இதனால் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது.

“இந்திய அணியில் நண்பர்கள் என்று யாரும் இல்லை. அணியில் இடம்பிடிக்க ஒவ்வொரு வீரருக்கும் இடையில் நடக்கும் போட்டிகளால் யாரிடமும் நட்பை எதிர்பார்க்க முடிவதில்லை. நண்பர்கள் என்பதைவிட சக வீர்ர்கள் என்ற நிலையே அணியில் இப்போது உள்ளது” என்று கடந்த ஜூன் மாதத்தில் ஒரு கருத்தை தெரிவித்திருந்தார் ரவிச்சந்திரன் அஸ்வின், கவாஸ்கர், யுவராஜ் சிங் போன்ற முன்னாள் வீர்ர்கள் பலரும் இந்த நிலை குறித்து வருத்தம் தெரிவித்திருந்தனர். ஆனால் இந்த உலகக் கோப்பையில் அந்த நிலை மாறி வீர்ர்களிடையே ஒரு நெருக்கமான நட்பு இருந்ததைப் பார்க்க முடிந்தது.

அணியில் இருக்கிறோமோ இல்லையோ, வெற்றிக்கு தானும் பங்களிக்க வேண்டும் என்பதில் அனைவரும் உறுதியாக இருந்தனர். அணியில் இல்லாதபோதும், டிரிங்ஸ் இடைவேளைகளின்போது கூல்டிரிங்ஸுடன் உள்ளே செல்லும் அஸ்வின், சக பந்துவீச்சாளர்களுக்கு சீரியஸாக ஆலோசனை சொல்வதைப் பார்க்க முடிந்தது. முதல் 5 போட்டிகளில் ஆல்ரவுண்டர் தேவை என்பதால் வெளியே உட்கார வைக்கப்பட்டிருந்த முகமது ஷமியும் இதைத்தான் செய்துகொண்டிருந்தார். டிரிங்க்ஸ் பிரேக்கின்போது மட்டுமின்றி, பவுண்டரி லைனுக்கு வெளியில் இருந்தும் சக வீர்ர்களுக்கு அவர்கள் ஆலோசனைகளைச் சொன்னதை பார்க்க முடிந்தது.

பொதுவாக போட்டியின்போது சகவீர்ர்கள் கேட்ச்களை தவறவிட்டால் மற்றவர்கள் கோபப்படுவார்கள். கேட்ச் விட்டவர், அந்த சோகத்திலேயே மேலும் சில தவறுகளைச் செய்வார். ஆனால் இந்த உலகக் கோப்பையில் அதற்கு மாறாக கேட்ச் விடும் வீர்ர்களை ஆறுதல்படுத்தி அவர்கள் தளராமல் பார்த்துக்கொள்ளும் விஷயத்தையும் இம்முறை இந்திய வீர்ர்கள் செய்தனர்.

பேட்டிங்கில் அதிரடி தொடக்கத்துக்கு ரோஹித் சர்மா, கடைசிவரை நங்கூரமிட்டு நிற்க விராட் கோலி என்று இந்திய ஜாம்பவான்கள் தங்கள் பணியை பிரித்துக்கொள்ள மற்ற வீர்ர்கள் அவர்களைச் சுற்றி அரண் அமைத்தனர். அதேபோல் ரன்களை கட்டுப்படுத்தும் பணியை பும்ரா பார்க்க, விக்கெட்களை எடுக்கும் வேலையை ஷமி ஏற்றுக்கொண்டார்.

இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஒவ்வொரு போட்டி முடிந்த பிறகும் இந்திய அணியின் டிரெஸ்ஸிங் ரூம் உற்சாகமாக இருக்கும். அன்றைய போட்டியின் சிறந்த பீல்டருக்கான விருதை, பீல்டிங் பயிற்சியாளர் அளிக்க, விருது வாங்கிய வீர்ர்களை சக வீர்ர்கள் பாராட்டுவார்கள்.

அன்றைய போட்டியில் சிறப்பாக ஆடிய வீர்ர்களை கேப்டன் ரோஹித் சர்மாவும், பயிற்சியாளர் ராகுல் திராவிட்டும் பாராட்டி பேச, அடுத்த போட்டியில் எப்படி செயல்பட வேண்டும் என்ற விவாதங்கள் தொடரும். இப்படியாக இந்திய அணியை உயிர்ப்புடன் வைக்கும் அம்சமாக டிரெஸ்ஸிங் ரூம் இருந்தது. பயிற்சியாளர் பொறுப்புக்கான ஒப்பந்தம் திராவிட்டுக்கு இன்றுடன் முடியும் நிலையில், உலகக் கோப்பையை அவருக்கு பரிசாக அளிப்பதில் அனைத்து வீர்ர்களும் ஒற்றுமையாக இருந்தனர்

ஆனால் நேற்று இறுதிப் போட்டியில் தோற்றதும் அனைவரும் துவண்டனர். தொப்பியால் முகத்தை மூடியபடி டிரெஸ்சிங் ரூமுக்குள் நுழைந்த விராட் கோலி, கைகளில் முகத்தை புதைத்துக்கொண்டார். எல்லாப் போட்டிகளுக்குப் பிறகும் நீண்டநேரம் பேசும் ரோஹித் சர்மா, பேசுவதற்கு வார்த்தையின்றி தடுமாறினார். கதறி அழுத சிராஜை, பும்ரா சமாதானப்படுத்தினார்.

இப்படி ஒவ்வொருவரும் சோகமாக இருக்க, அவர்களை ஆறுதல்படுத்தி ஒரு சிறிய உரையை நிகழ்த்தியிருக்கிறார் ராகுல் திராவிட். “இறுதிப் போட்டியின் தோல்வியின் இருந்து பல விஷயங்களை கற்றுக்கொண்டோம். இந்த அனுபவத்தை வைத்து எதிர்காலத்தில் நாம் முன்னேறுவோம். சூரியன் நாளையும் உதிக்கும். கிரிக்கெட்டில் நீங்கள் பல உச்சங்களை தொட்டிருக்கிறீர்கள். சில சறுக்கல்களையும் சந்தித்திருக்கிறீர்கள். விளையாட்டு வீர்ர்களுக்கு இதெல்லாம் சகஜம். அதனால் இந்த தோல்வியால் துவண்டு இருந்துவிடாமல் தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள்” என்று வீர்ர்களை ஆறுதல்படுத்தி உற்சாக டானிக் கொடுத்திருக்கிறார் ராகுல் திராவிட்.

பயிற்சியாளராக திராவிட்டின் பணிகள் இன்றோடு முடியலாம். ஆனால் கடைசியாக அவர் சொன்ன வார்த்தைகளை இந்திய வீர்ர்கள் நிச்சயம் மறக்க மாட்டார்கள். அடுத்தடுத்த வெற்றிகளுக்கு வழிகாட்டியாக இந்த வார்த்தைகள் நிச்சயம் இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...