ஆர்யா – நயன்தாராவை வைத்து ‘ராஜா ராணி’ மூலம் அறிமுகமான அட்லீ, அடுத்தடுத்து ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என விஜய்யை வைத்து மூன்று படங்களை இயக்கினார். இப்போது அவர் பாலிவுட்டில் ஷாரூக்கானை வைத்து ‘ஜவான்’ என்ற மெகா ஹிட் படம் ஒன்றையும் கொடுத்துவிட்டார்.
உச்சி குளிர்ந்து போன ஷாரூக், அட்லீயுடன் மீண்டும் இணைய விரும்புவதாகவும் கூறியிருக்கிறார்.
இதனால் அட்லீக்கான வியாபாரம், எதிர்பார்பு பெரிதாகி இருக்கிறது. இது மிகச்சரியாக புரிந்து கொண்டிருக்கிறார் அட்லீ. இதனாலேயே சில நாட்களாகவே ஷாரூக், விஜய் என அடிக்கடி கூற ஆரம்பித்திருக்கிறார்.
’அடுத்து விஜய் அண்ணா, ஷாரூக் சார் இரண்டு பேரையும் ஒரே படத்தில் நடிக்க வைக்க ஆசை. இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்க பச்சைக்கொடி காட்டிவிட்டார்கள். இவர்கள் இருவருக்குமான கதையை தயார் பண்ண வேண்டும்’ என்று ஒரு துண்டைப் போட்டு, தனது அடுத்த வாய்ப்பிற்கான முன்பதிவையும் முடித்துவிட்டார் அட்லீ.
இந்நிலையில் அட்லீ, கமலையும் நேரில் சந்தித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கமலைச் சந்தித்த அட்லீ, அவருக்கு ஒரு கதையின் ஒன்லைன்னையும் சொல்லி இருக்கிறாராம். இந்த ஒன்லைன்னை கேட்ட கமல், உற்சாகமானதாகவும் கூறுகிறார்கள்.
இப்போது சம்பளம் எவ்வளவு, எத்தனை நாட்கள் கால்ஷீட் வேண்டுமென அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் தெரிகிறது.
ஆனால் இந்த கதை கமலை மட்டும் வைத்து எடுக்கும் படத்திற்கா அல்லது கமல் தயாரிப்பில் அட்லீ இயக்கப் போகிறாரா அல்லது ஷாரூக்கான், விஜய் நடிக்கும் படத்தில் கமலையும் நடிக்க வைக்கும் முயற்சியா என்ற தகவல் இன்னும் வெளியே கசியவில்லை.
ஆனால் கமல் இப்போது இளைய ஹீரோக்களுக்கு கடும் சவால் விடுக்கும் வகையில் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். ஷங்கரின் ‘இந்தியன் 2’, ‘இந்தியன் 3’, அடுத்து மணிரத்னமுடன் ‘தக் லைஃப்’, ஹெச். வினோத் இயக்கத்தில் ஒரு படம், தெலுங்கில் பிரபாஸூக்கு வில்லனாக நடிக்கும் ‘கல்கி 2898 ஏடி’ என கைவசம் பெரிய படங்களை வைத்திருக்கிறார்.
இவை தவிர சிம்பு, சிவகார்த்திகேயனை வைத்து படங்கள் தயாரித்தும் வருகிறார்.
இதனால் கமலின் கால்ஷீட் எப்படி என்பது குறித்து இன்னும் ஒரு தெளிவு இல்லையாம். கமல் எப்போது கால்ஷீட் கொடுப்பார்… அந்த நாட்களில் ஷாரூக்கானும் விஜயும் கால்ஷீட் கொடுப்பார்களா அல்லது ஷாரூக்கான் கொடுக்கும் நாட்களில் விஜயும், கமலும் கால்ஷீட் கொடுப்பார்களா என பல கோணங்களில் கேள்விகளை எழுப்புவதால், இது குறித்த ஒரு தகவல் வெளிவர இன்னும் சில நாட்கள் பிடிக்கும் என்கிறார்கள்.