கோலிவுட்டின் லேட்டஸ்ட் பரபரப்பு இளையராஜாவின் வாழ்க்கை, ஒரு திரைப்படமாக உருவாக இருக்கிறது என்பதுதான்.
இப்படத்தை எழுதி, இயக்குவதோடு நடிக்கவும் திட்டமிட்டு வருவது தனுஷ் என்பது கூடுதல் தகவல்.
இளையராஜாவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க வேண்டுமென விரும்பியது தனுஷ்தான். தன்னுடைய மனதில் உதித்த இந்த எண்ணத்தை அசைப் போட்டவர், ஒரு வழியாக இளையராஜாவை நேரிலேயே சென்று சந்தித்து இருக்கிறார்.
முதல் சந்திப்பிலேயே தனது எண்ணத்தை வெளிப்படையாக கூறியிருக்கிறார் தனுஷ். இதைக்கேட்ட இளையராஜாவுக்கு ஆச்சர்யம். ’நீங்களா நடிக்கப் போறீங்க. நீங்களே இயக்கவும் போறீங்களா?’ என்று தனுஷிடம் கேட்டிருக்கிறார்.
‘ஆமாம்’ என்று தனுஷ் சொல்லவே, இளையராஜாவுக்கு சந்தோஷம்.
‘நாம திரும்பவும் சந்திப்போம்’ என்று இளையராஜா கூற, அதன்படியே மீண்டும் இளையராஜாவை நேரில் சென்று சந்தித்து இருக்கிறார் தனுஷ்.
இந்த சந்திப்பில் இளையராஜாவும், ‘தனுஷ் எடுக்கும் பட்சத்தில் எனக்கு ஓகேதான்.’ என்று ஏறக்குறைய ஒப்புதல் கொடுத்திருக்கிறார். இதனால் தனுஷூம் இப்போது குதூகலத்தில் இருக்கிறார்.
இளையராஜாவின் பயோபிக் எடுக்கும் திட்டம் ஏறக்குறைய உறுதியாகிவிட்ட நிலையில், எப்போது எப்படி தொடங்குவது என்பது இன்னும் முடிவாகவில்லை.
திரைக்கதையானது 1950-களிலிருந்து ஆரம்பித்து தற்போது வரை நிகழ்வதால், அதற்கான பின்னணி வேலைகள் அதிகம் இருக்கிறது. ஒரு ப்ரீயட் படத்திற்கான அனைத்து அம்சங்களும் இருப்பதால், படப்பிடிப்புக்கு முந்தைய பணிகளே அதிகமிருக்கின்றன.
ஆகவே இளையாராஜவின் வாழ்க்கை சரித்திரத்தை ஒரு திரைப்படமாக எப்போது தொடங்குவது என்பது குறித்து இன்னும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
’லியோ’ வெற்றிவிழா பின்னணியில் யார்?
பெரும் எதிர்பார்ப்பு உள்ளாகி, சமூக ஊடகங்களில் கடுமையான கமெண்ட்களை பெற்ற பிறகும், 500 கோடிக்களுக்கும் மேல் வசூல் ஆகியிருப்பதாக லியோ படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து இருக்கிறது.
இதை கொண்டாட இன்று வெற்றிவிழாவுக்கும் ஏற்பாடு செய்துவிட்டார்கள்.
பொதுவாக ஒரு படத்தின் வெற்றி விழா என்றால், அப்படத்தை தயாரித்த தயாரிப்பாளரோ அல்லது தயாரிப்பு நிறுவனமோதான் வெற்றிவிழாவைக் கொண்டாடுவது வழக்கம். படத்தில் நடித்த நட்சத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் ஊடகங்கள், ரசிகர்கள், பொது மக்கள் என பல தரப்பினருக்கு அழைப்பு விடுக்கப்படும்.
ஆனால் ‘லியோ’ வெற்றி விழா ஏற்பாடுகளில் படத்தயாரிப்பு நிறுவனத்தின் பங்களிப்பு பெரிதாக இல்லையாம். படத்தில் பணிப்புரிந்தவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறதாம். அவ்வளவுதான். மற்ற விஷயங்கள் எதிலும் தயாரிப்பு நிறுவனத்தின் தலையீடு இல்லை என்கிறார்கள்.
உண்மையில் விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் விஜய் மக்கள் இயக்கத்தின் புஸ்ஸி ஆனந்த்தான் மேற்கொண்டு வருகிறாராம்.
அதாவது விழா தேதி குறித்ததில் இருந்து, யார் யாரை அழைக்க வேண்டும், விஜய் மக்கள் இயக்கத்திலிருந்து எந்தெந்த நிர்வாகிகளுக்கு அழைப்பு போகவேண்டும், ரசிகர்களுக்கு அனுமதி ரத்து என பல விஷயங்களை முடிவு செய்திருப்பதும் புஸ்ஸி ஆனந்த்தான் என்கிறார்கள்.