நம் நாட்டில் அடிதடி சம்பவங்கள் நடப்பது எப்படி சகஜமான விஷயமோ, அதேபோல் அமெரிக்காவில் அடிக்கடி நடக்கும் விஷயமாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் உள்ளன.
கடந்த 2023 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையில் மட்டுமே துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 25,198 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சராசரியாக நாளொன்றுக்கு 118 பேர் வீதம் துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் உயிரிழந்துள்ளனர். இதில் லேட்டஸ்டாக நேற்று இரவு மெய்ன் நகரில் லூயிஸ்டன் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். 60-க்கும் மேர்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
அதிலும் துப்பாக்கி சூடு ஒரே இடத்தில் நடக்கவில்லை மெய்ன் நகரின் உணவகம், வால்மார்ட் விநியோக மையம், மதுபான விடுதி எனப் பல இடங்களில் ஒரே நேரத்தில் நடந்திருப்பது அங்குள்ள மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
துப்பாக்கி சூடு நடத்தியவரின் படங்களை நகர ஷெரீப் வெளியிட்ட நிலையில், அதில் உள்ளவரின் பெயர் ராபர்ட் கார்டு என்று அந்நகர மக்கள் சிலர் துப்பு கொடுத்துள்ளனர். போலீஸார் நடத்திய ஆரம்பகட்ட விசாரணையில் ராபர்ட் கார்ட் துப்பாக்கி சுடும் பயிற்சியாளர் என்றும், அவர் அமெரிக்க ராணுவத்தில் பணிபுரிந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. ஆபத்தான நபராக கருதப்படும் அவரைப் பிடிக்க போலீஸார் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த தேடுதல் வேட்டையில் ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப் பட்டுள்ளன. துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ராபர்ட் கார்டு இன்னும் பிடிபடாமல் இருப்பது நகர மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அடுத்ததாக அவர் வேறு இடத்தில் தாக்குதல் நடத்துவாரோ என்ற அச்சத்தில் மக்கள் இருக்கிறார்கள். வர்த்தக நிறுவன்ங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் சந்தேகத்துக்குரிய நபர்கள் குரித்து ஏதும் தகவல் தெரிந்தால் உடனடியாக 911 என்ற தொலைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் மெய்ன் நகர போலீஸார் வேண்டுகோள் விடுத்துள்ளர்.