விஜய்யின் ‘லியோ’ நாளை வெளியாக இருக்கிறது. ஆனால் இன்னும் சில திரையரங்குகளுடனான பேச்சுவார்த்தை முடிந்தபாடில்லை.
இந்நிலையில்தான் நேற்று இரவு உதயநிதி ஸ்டாலின் ‘லியோ’வை, அப்படக்குழுவினருடன் சேர்ந்து பார்த்திருக்கிறார்.
படம் பார்த்துவிட்டு உதயநிதி சமூக ஊடகத்தில் பதிவிட்டு இருப்பது இப்போது பேசு பொருளாகி இருக்கிறது.
லியோ படம் நன்றாக இருக்கிறது. லோகேஷ் கனகராஜின் இயக்கம், அனிருத்தின் இசை, அன்பறிவின் சண்டைப்பயிற்சி எல்லாமும் அருமை. இப்படி சொன்னவர் கூடவே எல்சியூ என்ற ஹேஷ்டேக்கையும் சேர்த்தே கருத்தை பதிவிட்டு இருக்கிறார்.
இதனால் இப்படமும் லோகேஷின் மற்ற திரைப்படங்களிலிருந்து ஏதாவது ஒரு கதாப்பாத்திரமோ அல்லது காட்சியின் தொடர்ச்சியோ லியோவிலும் இருக்கிறது என்பதை அடிக்கோடிட்டு காட்டியிருக்கிறது.
உதயநிதி படம் பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது என்று பதிவிட்டு இருப்பதால் லியோ குழு உற்சாகத்தில் இருக்கிறது. இது இப்படத்திற்கு கூடுதல் விளம்பரமாக அமைந்திருப்பதுதான் அவர்களுடைய மகிழ்ச்சிக்கு காரணம்.
உதயநிதியின் இந்த பதிவு, லியோவைச் சுற்றி அரசியல்ரீதியாக இருக்கும் பல சர்ச்சைகளுக்கு விடையாகவே அமைந்திருப்பதாக தெரிகிறது.
லியோவுக்கு அதிகாலை சிறப்புக்காட்சி அனுமதி அளிக்கவேண்டுமென்பது போல், அரசுக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி உட்பட முன்னாள் அதிமுக அமைச்சர்கள் சில கூறி வந்தனர்.
ஆனால் உதயநிதியின் பதிவு, அரசுக்கும் லியோ படக்குழுவுக்கும் இடையே பஞ்சாயத்துகள் எதுவும் இல்லை என்பது போல் காட்டுவதாக அமைந்துவிட்டது. இதனால் ஏழு மணி காட்சிக்கு வாய்ப்பிருக்குமா என்பது இன்று மாலைக்குள் தெரிந்துவிடும்.