No menu items!

பான் இந்திய படங்களும்.. பந்தா நட்சத்திரங்களும்..

பான் இந்திய படங்களும்.. பந்தா நட்சத்திரங்களும்..

இந்திய சினிமாவில் 2019-ம் ஆண்டுக்குப் பிறகு பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

வட இந்தியா முழுவதிலும், குறிப்பாக ஹிந்தியின் ஆதிக்கம் இருக்கும் மாநிலங்களில் தனக்கென ஒரு சாம்ராஜ்ஜியத்தை வைத்திருந்த பாலிவுட், அடுக்கி வைத்த சீட்டுக்கட்டை தட்டிவிட்டது போல் பொலபொலவென சரிய தொடங்கிவிட்டது.

ஒரே காரணம், ஒரே மாதிரியான திரைப்படங்கள்.

பாலிவுட் கொஞ்சம் அசந்த இந்த நேரத்தில், ஒடிடி-யின் வருகையினால் இதுவரை அதிகம் சென்றடையாத வட இந்திய ரசிகர்களிடம் தென்னிந்திய திரைப்படங்களுக்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது.

ஒரு தடவை ருசித்துவிட்டால், மீண்டும் அதே சுவையை நம் நாக்கு கேட்பதைப் போலவே, நம்மூர் படங்களை ரசித்த வட இந்திய ரசிகர்களின் மனது தென்னிந்தியப் படங்கள் பக்கம் திரும்பியது.

இதனால் தென்னிந்தியப் படங்கள், இப்பொழுது தங்களது மொழி ரசிகர்களை மட்டும் குறிவைக்காமல், தங்களது மொழி அல்லாத இதர மாநில சினிமா சந்தைகளையும் குறித்து வைத்து வியாபாரத்தை விரிவுப்படுத்தி இருக்கின்றன.

இன்று பான் – இந்தியப் படம் என்பது, ஏதாவது ஒரு தென்னிந்திய மொழியில் எடுக்கப்பட்டு, அதனை ஹிந்தி உட்பட இதரமொழிகளில் டப் செய்து, ஒரே நாளில் இந்தியா முழுவதும் திரையிடுவதைக் குறிப்பிடும் ஒரு வார்த்தை ஆக பயன்படுத்தப்படுகிறது. அதேபோல் ஹிந்தியில் எடுக்கப்படும் படம், இதர தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில் டப் செய்யப்பட்டு தென்னிந்திய சினிமா சந்தையில் ஒரே நாளில் திரையிடப்படுவது.

தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களுக்கு பொதுவாகவே ஹிந்தி டப்பிங் படங்களுக்கான மார்க்கெட்டில் ஒரு வரவேற்பு இருக்கும். இதனால் ஏதாவது ஒரு ஹிட் படத்தை டப் செய்து வெளியிட்டு வந்தார்கள்.

ஆனால் 2015-ல் ’பாகுபலி’ படத்திற்கு தெலுங்கு வட்டாரம் மட்டுமில்லாமல், வட இந்தியாவிலும் வரவேற்பு கிடைத்ததன் பலனை, ஏன் நாமும் அறுவடை செய்யக்கூடாது என்ற நோக்கத்துடன் இன்று பான் – இந்தியா என்ற பெயரில் படங்களை வெளியிட ஆரம்பித்திருக்கிறார்கள்.

காரணம் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு வெளியான பாகுபலியின் வசூல் மிக அதிகம். ஒரு நேரடி ஹிந்திப் படம் வசூலிக்காத தொகையை ஒரு ஹிந்தியில் டப் செய்யப்பட்ட தெலுங்குப் படம் அள்ளிக் குவித்தது.

அடுத்தடுத்து ’கேஜிஎஃப்’, ’புஷ்பா’, ’விக்ரம்’ என தென்னிந்தியப் படங்களுக்கு கிடைத்த வரவேற்பு, பான் – இந்தியா என்ற மார்க்கெட்டுக்கு முட்டுக் கொடுத்தது.

இதனால் 2019 முதல் 2023-க்குள் ஹிந்தியில் வெளியாகும் பான் – இந்தியப் படங்களின் எண்ணிக்கை 4 மடங்காக உயர்ந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2019-ல் 6 படங்கள். 2022-ல் 23 படங்கள். 2023-ல் இதுவரையில் 13 படங்கள் என ஹிந்தியில் டப் செய்யப்படும் தென்னிந்தியப் படங்களின் அதிகரித்து இருப்பதை புள்ளிவிவரங்களில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.

அதாவது 2019 ஜனவரி தொடங்கி 2023 ஆகஸ்ட் வரையிலான காலக்கட்டத்தில் ஹிந்தியில் டப் செய்யப்பட்ட வெளியான படங்கள் 42. இத்தனை படங்கள் வெளியாகி இருந்தாலும் ஹிந்தியில் ஒட்டுமொத்த வசூலாக 15 கோடியை முத்தமிட்ட படங்கள் 9.

வெளியான படங்களில் 21% படங்கள் மட்டுமே சொல்லிக்கொள்கிற மாதிரி 15 கோடி வசூலை எட்டியிருக்கி
ன்றன என்பது இப்போது பான் – இந்திய மார்க்கெட்டில் பேசுப்பொருளாகி இருக்கிறது.

கேஜிஎஃப் – சாப்டர் 2 – 424 கோடி
ஆர்.ஆர்.ஆர். – 272 கோடி
புஷ்பா – த ரைஸ் – 106 கோடி
காந்தாரா – 89 கோடி
கார்த்திகேயா 2 – 31 கோடி
ராக்கெட்ரி – 26 கோடி
பொன்னியின் செல்வன் 1 – 21 கோடி
பொன்னியின் செல்வன் 2 – 18 கோடி

இப்படி சில முக்கியப் படங்கள் பெரும் வரவேற்பு இருந்தாலும், விஜய், சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, பிரபாஸ் நடித்தப் படங்கள் ஹிந்தி டப் மார்க்கெட்டில் பெரும் வசூலைப் பெறவில்லை.

வசூலில் இப்போது கொஞ்சம் டல்லடிக்க என்ன காரணம்?

இது புரியாமல் குழம்பிப் போய் கிடக்கிறது தென்னிந்திய சினிமா.

பான் – இந்தியா படம் என்று முன்னிறுத்தப்படும் படங்களை முறையாக திட்டமிட்டு மார்க்கெட்டிங்கில் இறங்கி வேலைப் பார்ப்பது இங்கே இல்லை. ஹிந்தியில் டப் செய்வதோடு சரி. அந்தப் படத்தின் இயக்குநர், நட்சத்திரங்கள் படத்தின் ப்ரமோஷனுக்காக மெனக்கெடுவது இல்லை. ஹிந்திப் பேசும் முக்கிய நகரங்களுக்கு சென்று அங்குள்ள ரசிகர்களுடன் கலந்துரையாடுவது இல்லை.

ரிலீஸ் தேதியை மட்டும் முடிவு செய்துவிட்டு, அந்த நாளில் படத்தை வெளியிடுகிறார்கள். அடுத்து அப்படத்திற்கான ட்ரெய்லரையும் மக்களிடையே கொண்டு சேர்ப்பதில் பெரிய அக்கறை காட்டுவது இல்லை.

படம் வெளியாவதற்கு நாலைந்து நாட்களுக்கு முன்பாக, டப் செய்யப்பட்ட படத்தின் ட்ரெய்லரை வெளியிடுகிறார்கள்.

என் படம் ஓடும் என்று மிதப்பில் இருக்கும் பட இயக்குநரோ அல்லது நட்சத்திரமோ அல்லது தயாரிப்பாளரோ நல்ல திரையரங்குகள் கிடைத்திருக்கிறதா என்று யோசிப்பது கூட இல்லை.

இதற்கு காரணம் புஷ்பா திரைப்படம். புஷ்பா வெளியான போது அதற்கென்று பெரிய எதிர்பார்பு இல்லை. ஆனால் படம் பார்த்தவர்களின் ’வேர்ட் ஆஃப் மெளத்’ ஆக அடித்த கமெண்ட்களினால் கொஞ்சம் கொஞ்சமாக படம் பார்க்க கூட்டம் எகிறியது. முதல்வாரம் சுமார் 3.5 கோடி வசூலித்த புஷ்பா, இரண்டாவது வாரம் முதல் வார வசூலை ஓவர் டேக் செய்தது.

புஷ்பாவின் இந்த வெற்றிதான் பல தென்னிந்திய படைப்பாளிக்களுக்கும், நட்சத்திரங்களுக்கும் ஒரு மிதப்பு உணர்வை கொடுத்திருக்கிறது.

இதுவரையில் இந்திய சினிமா என்றால் அது பாலிவுட்தான். இந்திய படங்கள் என்றால் ஹிந்திப் படங்கள்தான். இப்படியொரு பார்வை உலகம் முழுவதிலும் இருந்தது.

ஒடிடி-யின் வருகையினால், பான் – இந்திய படங்களுக்கு இப்போது ஒரு தளம் கிடைத்திருக்கிறது.

ஆர்.ஆர்..ஆர் படம் வாங்கிய ஆஸ்கர் விருதிற்குப் பிறகு வெளிநாடுகளில் இன்று தெலுங்கு சினிமா பற்றிய தெரிய ஆரம்பித்திருக்கிறது.

இப்படியொரு சூழல் இருக்கும் போது, பான் – இந்தியா என்ற மார்க்கெட்டில் இன்றும் தென்னிந்தியப் படங்களுக்கான மவுசு குறையவில்லை. ஆனால் கிடைத்திருக்கும் வாய்ப்புகளை இங்குள்ளவர்கள் சரியாக பயன்படுத்துவது இல்லை என்ற குற்றச்சாட்டுகள் இப்பொழுது எழ ஆரம்பித்திருக்கின்றன.

வாங்கிய சம்பளத்திற்கு சொன்ன கால்ஷீட்டை கொடுத்துவிட்டோம். இனி வேலை இல்லை என்று அடுத்தப் படத்திற்கு தாவும் நட்சத்திரங்கள், இனியாவது தாங்கள் முடித்த படங்களின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு ஊர் ஊராக சென்று மக்களைச் சந்திக்க முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சரியான திட்டமிடலுடன், படத்தை கொண்டு சேர்க்கும் மார்க்கெட்டிங் வேலைகளில் ஆர்வம் காட்ட வேண்டும்.

இந்த இரண்டையும் செய்தால் மட்டுமே, தமிழ் திரைப்படங்களின் வசூல் அடுத்தக்கட்டத்திற்கு நகரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...