விஜய்யின் ‘லியோ’ வெளியாவதற்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், அப்படம் குறித்த சில தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இப்படம் இங்கிலாந்தில் தமிழ்ப்படங்களுக்கு இதுவரையில் இல்லாத வகையில் அதிக முன்பதிவுகளுடன் வெளியாக இருக்கிறது. இப்படத்தை இங்கிலாந்தில் வெளியிடும் விநியோகஸ்தர், லியோ படம் குறித்த தகவல்களைப் பகிர்ந்திருக்கிறார்.
அதாவது ‘லியோ’ படத்தில் அடிதடி, ஆக்ஷன் காட்சிகள் மிக அதிக அளவில் இடம்பெற்றிருக்கிறது. பார்த்த உடனே பகீர் என்று இருக்கும் வகையில் கோரமான காட்சிகளும் இருக்கின்றன. இதனால் இளகிய மனதுடையவர்கள் இப்படத்தை கவனத்துடன் பார்த்தால் நல்லது. ஆனால் ஆக்ஷன் அதிரிப்புதிரியாக இருக்கும்.
இதனால் இப்படத்தில் எந்தவித சென்சார் வெட்டும் இல்லாமல் பார்த்தால், ஆக்ஷன் ரசிகர்களுக்கு உகந்த படமாக இருக்கும். இதனால் 15 வயதுக்கு மேற்பட்டோர் பார்க்கும் படமாக இருக்கும் வகையில் 15+ என்று சென்சார் சான்றிதழ் வாங்கும் முயற்சி நடந்திருக்கிறது. ஆனால் படத்திற்கு 18+ என்றுதான் சென்சார் கிடைத்திருக்கிறது. இதனால் 18 வயதுக்கு மேற்பட்டோர் பார்க்கும் படம் என்றுதான் சென்சார் சான்றிதழ் வழங்க முடியும் என சென்சார் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.
பிரிட்டிஷ் போர்ட் ஆஃப் ஃப்லிம் சர்டிஃபிகேஷன் அமைப்பிடம் தொடர்ந்து பேசிய லியோ படத்தின் விநிஹோகஸ்தர் தரப்பு, 15+ என சான்றிதழ் வேண்டுமென வேண்டுகோள் வைக்க, இறுதியில் பார்த்தால் பட்டென்று புரிந்து கொள்ள முடியாத வகையில் சில சின்னச்சின்ன மாற்றங்களை செய்து, 15+ சான்றிதழ் வாங்கிவிட்டதாம்.
இங்கிலாந்தில் இப்படியென்றால், இங்கே இந்தியாவில் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதாவது 12 வயதுக்குட்டவர்கள் பெற்றோர்களின் அறிவுறுத்தல்களுடன் படம் பார்க்கலாம் என சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது.
ரஜினியை வம்புக்கு இழுத்த சிரஞ்சீவி
தெலுங்கில் மெகா ஸ்டார் என்று கொண்டாடப்பட்ட சிரஞ்சீவி ஒரு ஹிட் படம் கொடுக்க படாதப்பாடுபட்டு வருகிறார்.
சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான படம் ‘போலா சங்கர்’. தமிழில் பெரும் வெற்றிப்படமாக அமைந்த அஜித்தின் ‘வேதாளம்’ படத்தின் ரீமேக் தான் இந்த போலா சங்கர்.
ஏகப்பட்ட செலவு, காஸ்ட்லியான பாடல்கள், தெறிக்கவிடும் சண்டைக்காட்சிகள் என எடுக்கப்பட்ட போலா சங்கர் அங்கே எடுப்படாமல் இந்த ஆண்டின் மிகப்பெரும் தோல்விப்படமாக அமைந்தது.
இதனால் சிரஞ்சீவிக்கு இதுவரையில்லாத இறங்குமுகம். வேறுவழியில்லாமல், தோல்விக்கு என்ன காரணம் என ஆராய்ச்சியில் இறங்கிய சிரஞ்சீவி கலாய்க்க ஆரம்பித்துவிட்டார்கள் ரசிகர்கள்.
சிரஞ்சீவியைப் போலவே ஆட்டம் பாட்டம் சண்டை என நடித்து வந்த ரஜினிக்கும் ஹிட் படங்கள் அமையவில்லை. ஆனால் நெல்சன் ரஜினியின் வயதுக்கேற்ற கதாபாத்திரத்தில், வழக்கமான ஆரவாரம் இல்லாமல் அடக்கி வாசிக்க வைத்து நடிக்க வைத்தார். இதனால் ‘ஜெயிலர்’ பெரும் வெற்றி பெற்றிருக்கிறது.
ரஜினியின் இந்த வெற்றி சிரஞ்சீவியை ரொம்பவே பாதித்திருக்கிறது. இதைதான் சமீபத்தில் வெளியே கொட்டியிருக்கிறார்.
‘ரீ-ரிக்கார்டிங், பின்னணி இசை இந்த இரண்டும் சேர்ந்து என்னுடைய ஹீரோயிஸத்தை தூக்கி காட்டுகிற மாதிரியான ஆளு நான் இல்ல. நான் ஆடணும், சண்டைப் போடணும். நடிக்கணும். அப்பதான் என்னோட ரசிகர்களை நான் திருப்தி படுத்தமுடியும்’ என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார்
இதில் டான்ஸ் வேண்டாம், ஆக்ஷன் வேண்டாம். ரீ-ரிக்கார்டிங், பின்னணி இசை மட்டும் இருந்தால் போதும் என்று சிரஞ்சீவி சொல்லியிருப்பது, ரஜினியின் ஜெயிலர் படத்தை மறைமுகமாக கிண்டலடிப்பது போல் இருக்கிறது என்ற கமெண்ட்கள் இப்போது கிளம்ப ஆரம்பித்திருக்கின்றன.
ஒரு நல்ல கதை. அதை சொல்லும் விதம். இந்த இரண்டும் இருந்தால், சண்டைக் காட்சிகள் வேண்டாம். டூயட்கள் வேண்டாம். அப்படம் நிச்சயம் ஹிட்டாகும் என்ற மனநிலையில் இல்லாமல் இப்படி சிரஞ்சீவி கமெண்ட் அடித்திருப்பது தொடர் தோல்விகளால் அவர் நொந்து போயிருப்பதை காட்டுகிறது என ஊடக வட்டாரங்களில் முணுமுணுக்கப்படுகிறது.
விஜய்யை முந்திய அஜித்!
அஜித்தின் ‘விடாமுயற்சி’ பட ஷூட்டிங் இப்போது அசர்பைஜான் நாட்டில் நடந்து வருகிறது.
இந்தப்படத்தில் அஜித்திற்கு இரண்டு வேடங்கள் என்றும், சீனியர் அஜித்திற்கு ஜோடி த்ரிஷா, ஜூனியர் அஜித்திற்கு ரெஜினா கஸெண்ட்ரா ஜோடி எனவும் ஒரு அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
அஜித் நடிக்கும் 62-வது படம் பற்றிய இழுத்தடிப்பு நீண்ட நாட்களாக நீடிக்க, இப்போது ஒருவழியாக ஷூட்டிங் வரை வந்திருக்கிறது. ஆனால் அதற்குள்ளாகவே அஜித் 63-வது படம் பற்றிய யூகங்கள் வர ஆரம்பித்திருக்கின்றன.
விடாமுயற்சிக்குப் பிறகு அஜித்தை அவரது ஃபேன்பாய் டைரக்டர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவிருப்பதாகவும், அதை ஆர்.எஸ். இன்ஃபோடெய்மெண்ட்டின் எல்ரெட் குமார் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் வெளியான ‘மார்க் ஆண்டனி’ வெற்றியின் போது, அஜித் சொல்லிதான் இந்த வாய்ப்பு. இந்த வெற்றி என்று ஆதிக் ரவிச்சந்திரன் சொன்னபோதே, அஜித்தின் அடுத்த இயக்குநர் இவர்தான் என்று கோலிவுட் ஊடக வட்டாரம் கணித்து இருந்தது.
இப்போத் அது நிஜமாகிவிட்டது என்கிறார்கள். அஜித்திற்கு இந்தப் படத்தில் நடிக்க சம்பளமாக 175 கோடி ரூபாய் முடிவாகி இருப்பதாக கிசுகிசுக்கிறார்கள். ஜிஎஸ்டி போக 163 கோடி சம்பளம் என்கிறார்கள்.
இந்த வகையில் லியோவுக்கு விஜய் வாங்கிய சம்பளம் என அப்பட வசனகர்த்தா ரத்னகுமார் கூறியது 130 கோடி. இதனால் சம்பள விஷயத்தில் இப்பொழுது அஜித் விஜய்யை முந்தியிருக்கிறார்.