கிராமங்களில் உள்ள உட்புற பகுதிகளில், சாலைகள் சீரமைக்கப்படாமல் பல இடங்களில் இன்னும் குண்டும் குழியுமாக இருப்பதை பார்த்திருப்போம். சிங்காரச் சென்னையிலும் பல இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதை சமீபத்திய ஆய்வு அறிக்கை ஒன்று வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை நகரம் முழுவதும் உள்ள 326 இடங்களில் பொதுமக்கள் மூலம் சாலைகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இதில் 194 இடங்களில் உள்ள சாலைகள் சென்னை மாநகராட்சியின் கீழும், 132 இடங்கள் தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சியின் கீழும் வருகின்றன. மற்றவை உள்ளாட்சி அமைப்புகளின் கீழும் வருகின்றன.
இந்த சாலைகளில் நடத்தப்பட்ட ஆய்வுக்குப் பின் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள சாலைகள் சேதமடைந்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும், புதிதாக அமைக்கப்பட்ட சாலைகளும் சேதமடைந்திருப்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. 15 ஆண்டுகளாக பல இடங்களில் சாலைகள் சீரமைக்கப்படாமல் இருப்பதாகவும் இந்த ஆய்வில் தெரிவித்துள்ளது. சில இடங்களில் புதிதாக அமைக்கப்பட்ட சாலைகள் கூட ஒரு ஆண்டுக்குள் சேதமடைந்திருப்பதை இந்த ஆய்வு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
இந்த ஆய்வு சூட்டிக்காட்டியுள்ள மேலும் சில விஷயங்களை தெரிந்துகொள்வோம்…
கோடம்பாக்கத்தில் உள்ள பக்கிரி கார்டன் இரண்டாவது குறுக்குத் தெருவில் உள்ள சாலைகள் 15 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளன.
திரு.வி.க நகரில் உள்ள முகமது உசேன் காலனி சாலை எட்டு ஆண்டுகளாக சீரமைக்கப்படவில்லை.
மணலியில் உள்ள டிடிபி சாலை கடந்த ஆண்டு ஜூன் 3-ம் தேதி புதிதாக போடப்பட்டது. ஆனால் அந்த சாலையைப் போட்டு ஒரு ஆண்டு முடிவதற்கு உள்ளாகவே அது குண்டும் குழியுமாக மாறியுள்ளது.
மடிபாக்கத்தில் உள்ள குடியிருப்பாளர்கள், நம்ம சென்னை செயலியில் புகார் எழுப்பியும், க்ரேட்டர் சென்னை கார்ப்பரேஷன்(gcc) தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்கள் அலட்சியமாக இருப்பதாக குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
326 இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், 194 இடங்கள் மிகவும் மோசமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. இதில், தெற்கு சென்னையில் சேதமாயிருக்கும் இடங்கள் மட்டும் 97 இடங்கள். வளசரவாக்கம் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், மத்திய சென்னை 65 , கோடம்பாக்கம் 22, வட சென்னை 32, ராயபுரம் 21 சாலைகள் சேதமடைந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
தி நகரில் உள்ள நடேசன் சாலையில் வடிக்கால் பணிகள் முடிந்து மூன்று மாதங்கள் ஆகியும் சாலைகள் அமைக்கும் பணி தொடங்கவில்லை என்று சொல்கின்றனர்.
மேடவாகத்தில் வசிக்கும் பிரதீப் என்கிற ஐடி ஊழியரும் இந்த ஆய்வின் தன்னார்வலருமான பிரதீப் கூறும்போது, “எங்கள் பகுதியில் கழிவுநீர் மற்றும் மழைநீர் போக வழியின்றி தண்ணீர் தேங்கியிருப்பதால் எங்கள் பகுதியில் அடக்கடி சாலைகள் சேதமடைங்கின்றன” என்கிறார்.
இதுபற்றிய தகவல்களை வெளியிட்ட அறப்போர் அரசு சாரா அமைப்பின் அமைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், க்ரேட்டர் சென்னை கார்ப்பரேஷனிடம்(GCC) உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.