இந்திய கிரிக்கெட் அணியின் உல்லாச மனிதனாக கருதப்படும் ஹர்த்திக் பாண்டியாவுக்கு இன்று 30-வது பிறந்தநாள். ரோஹித் சர்மாவுக்கு பிறகு இந்திய அணிக்கு முழுநேர கேப்டனாக பதவியேற்பார் என்று எல்லோராலும் நம்பப்படும் ஹர்த்திக் பாண்டியாவைப் பற்றி முக்கியமான 10 விஷயங்களை தெரிந்துகொள்வோம்.
ஹர்த்திக் பாண்டியா பிறந்தது சூரத் நகரில். அவருக்கும், அவரது சகோதரர் குர்னால் பாண்டியாவுக்கும் இருக்கும் கிரிக்கெட் ஆர்வத்தைப் பார்த்து, அந்த விளையாட்டில் அவர்களுக்கு பயிற்சி கொடுக்க வசதியாக, தன் தொழிலைக்கூட விட்டுவிட்டு அகமதாபாத் நகருக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தார் அவரது அப்பா.
ஹர்த்திக் பாண்டியா 9-ம் வகுப்பு வரைதான் படித்திருக்கிறார். 9-ம் வகுப்பு தேர்வை முடிக்காத நிலையில் முழுநேர கிரிக்கெட் பயிற்சிகளில் இறங்கியிருக்கிறார் ஹர்த்திக்.
அகமதாபாத்துக்கு குடிவந்த புதிதில் ஹர்திக் பாண்டியாவின் குடும்பம் பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் அப்பாவுக்கு பொருளாதார ரீதியாக உதவுவதற்காக சில நாட்கள் ஹர்திக் பாண்டா ஆட்டோ ஓட்டியிருக்கிறார்.
ஆரம்ப காலகட்டத்தில் பணம் வாங்கிக்கொண்டு பல்வேறு சிறு கிளப்களுக்காக ஹர்த்திக் கிரிக்கெட் போட்டிகளில் ஆடியுள்ளார். அந்நாட்களில் ஒரு போட்டியில் ஆட அவர் வாங்கிய சம்பளம் 400 ரூபாய்.
சிறுவயதில் போட்டிகளுக்கு செல்லும் நாட்களில் 5 ரூபாய்க்கு கிடைக்கும் மேகி பேக்கட்தான் ஹர்த்திக் பாண்டியாவுக்கும், அவரது சகோதரர் குர்னால் பாண்டியாவுக்கும் மதிய உணவாக இருந்திருக்கிறது. மைதானத்தை பராமரிக்கும் கிரவுண்ட்ஸ்மேனிடம் அந்த பேக்கட்டை கொடுத்து அதை வேகவைத்து இருவரும் சாப்பிட்டுள்ளனர்.
ஒரு காலத்தில் பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டவர் என்பதாலேயே, பிற்காலத்தில் உல்லாசமான வாழ்க்கையின்மீது ஹர்திக் பாண்டியாவுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இப்போதுள்ள இந்திய கிரிக்கெட் வீர்ர்களிலேயே மிக ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்பவர் ஹர்த்திக் பாண்டியாதான். இந்திய வீர்ர்களிலேயே விலைமதிப்புள்ள கடிகாரங்களை ஹர்த்திக் பாண்டியாதான் வைத்துள்ளார். Patek Philippe Nautilus Platinum 5711 வகையைச் சார்ந்த 2 கைக்கடிகாரங்களை அவர் வைத்துள்ளார். அந்த கைக்கடிகாரங்களின் விலை ரூ.5 கோடி.
ஹர்த்திக் பாண்டியாவும், அவரது சகோதரர் குருணால் பாண்டியாவும் இன்னும் கூட்டுக் குடும்பமாகவே வாழ்கிறார்கள் வடோதராவில் வசித்துவந்த அவர்கள், கடந்த ஆண்டில் மும்பையில் ஒரு அப்பார்ட்மெண்டுக்கு மாறியுள்ளனர் 8 அறைகளைக் கொண்ட இந்த அபார்ட்மெண்டின் விலை 30 கோடி ரூபாய்.
ஹர்த்திக் வைத்துள்ள ஒரு பைஜாமாவின் விலை 1.6 லட்சம். 1 லட்ச ரூபாய் மதிப்புள்ள வேறு பல சட்டைகளையும் அவர் வைத்துள்ளார். சட்டையைப் போலவே ஹர்த்திக் பாண்டியா வைத்துள்ள வெள்ளை நிற ஷூவும் மிகவும் காஸ்ட்லி. அதன் விலை 1.5 லட்ச ரூபாய்.
இந்திய கிரிக்கெட் வீரர்களிலேயே அதிக விலைமதிப்புள்ள காரை வைத்திருப்பவர் ஹர்த்திக் பாண்டியாதான். லம்போர்கினி ஹுராகான் இவோ (Lamborghini Huracan Evo) காரைத்தான் இவர் அதிகம் பயன்படுத்துகிறார். இதன் விலை 3.73 கோடி. இதைத்தவிர டயோட்டா எடியோஸ், ஆடி ஏ6, ரேஞ்ச் ரோவர் ரோக் உள்ளிட்ட பலவகை கார்களை அவர் வைத்துள்ளார்.
பச்சை குத்திக்கொள்வதில் ரொமபே ஆசை உள்ளவர் ஹர்த்திக் பாண்டியா. அவரது உடல் முழுக்க, பல்வேறு இடங்களில் விதவிதமாக பச்சை குத்தியிருக்கிறார்.
.