No menu items!

Bigg Boss: வெளியேறும் பவா – என்ன காரணம்?

Bigg Boss: வெளியேறும் பவா – என்ன காரணம்?

கடந்த ஒரு வாரமாக ஹாட் டாபிக்காக இருந்த பவா செல்லத்துரை சர்ச்சைகள் கிட்டத்தட்ட முடிவுக்கு வருகிறது. பிக் பாஸ் வீட்டிலிருந்து தானாகே வெளியேறுவதாக தெரிவித்துள்ளார் பவா. என்ன காரணம்? பிக் பாஸ் வீட்டில் என்ன நடந்தது?

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் சீசன் 7’ கடந்த ஒன்றாம் தேதி தொடங்கியது. 9 பெண் போட்டியாளர்கள், 9 ஆண் போட்டியாளர்கள் என மொத்தம் 18 பேருடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இருந்தே பவா செல்லத்துரை மீதே அதிக கவனம் குவிந்திருந்தது.

யார் இந்த பவா செல்லத்துரை?

எழுத்தாளர், பதிப்பாளர், கதை சொல்லி, நடிகர் என பன்முகம் கொண்டவர் பவா செல்லத்துரை. திருவண்ணாமலையைச் சேர்ந்தவர். ‘வம்சி புக்ஸ்’ என்ற பெயரில் புத்தக நிலையம் ஒன்றையும் திருவண்ணாமலையில் நடத்தி வருகிறார். திருவண்ணாமலையில் இவரது தோட்டத்தில் உள்ள வீட்டில் சினிமாக்காரர்களுக்கும் இலக்கியவாதிகளுக்கும் இவர் வைக்கும் அசைவ விருந்துகள் பிரபலமானவை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இலக்கியப் பிரிவான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் சுமார் 20 ஆண்டுகள் பல்வேறு பதவிகளில் இருந்தவர். அந்த காலகட்டத்தில் திருவண்ணாமலையில் முற்றம் என்ற பெயரில் இவர் நடத்திய இலக்கிய நிகழ்ச்சிகள் திருவண்ணாமலை மாவட்டத்தை கடந்தும் இவரை பிரபலமாக்கின. அதேநேரம் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட ஜெயமோகன் போன்றவர்களுடன் இவர் கொண்டிருந்த நெருக்கம் விமர்சனத்துக்குள்ளான நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்னர் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இருந்து விலகிவிட்டார்.

இயக்குநர் ராஜு முருகனின் ‘ஜோக்கர்’, மிஷ்கினின் ‘சைக்கோ’உட்பட சில திரைப்படங்களில் சிறு சிறு பாத்திரங்களில் நடித்துள்ளார். சிபிராஜ் நடித்துள்ள ‘வால்டர்’ படத்தின் வில்லனாக நடித்தார்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக, யூ டியூப் வீடியோக்கள் மூலம் ஒரு கதை சொல்லியாக உலகம் முழுவதும் தமிழர்கள் மத்தியில் பிரபலமானார்.

பிக்பாஸில் பவா: எதிர்ப்பும் ஆதரவும்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பவா செல்லத்துரை கலந்துகொண்டது தொடர்பாக, முதல் நாளில் இருந்தே பவா செல்லத்துரை போன்ற ஒருவர் அதில் கலந்துகொண்டது தவறு என்றும்,  பவாவைப் போன்ற எழுத்தாளர் ஒருவர் பிக்பாஸ் போன்ற மிகப்பிரபலமான வெகுஜன நிகழ்வில் பங்குபெறுவதை வரவேற்க வேண்டும் என்றும் கலவையான விமர்சனங்கள் வெளியாகின.

இந்த விமர்சனங்களுக்கு எல்லாம் பதில் சொல்வது போல், “நான் என்னுடைய வாழ்க்கையில் பல்வேறு அனுபவங்களைத் தொடர்ச்சியாக தேடிக் கொண்டேயிருப்பவன். அரசு பணி, இலக்கியக் கூட்டம், இயக்கம், கதை சொல்லுதல், சினிமா… என்று பல்வேறு விஷயங்களைத் தாண்டி ‘பிக் பாஸிலும்’ அனுபவம் தேடி வந்திருக்கிறேன்” என்றார் பவா.

அதற்கேற்ப முதல் சில நாட்கள் விதவிதமான கதைகளை சொல்லி போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் பவா. முதல் நாள் அவர் சொன்ன கதை சக போட்டியாளர்கள் சிலரை கண்கலங்க வைத்தது.

ஆனால், முதல் நாளே பிக்பாஸ் வீட்டில் அதிகம் பேசாத ஆறு நபர்களில் பவா செல்லதுரையும் ஒருவர் என்று குறிப்பிடப்பட்டது. அதனால் இரண்டாவது வீடு என்று சொல்லப்படும் பகுதிக்கு அவர் அனுப்பப்பட்டார். இரண்டாவது வீட்டில் இருப்பவர்கள் சில விதிகளை பின்பற்றவேண்டும். அதன்படி, பிக்பாஸ் வீட்டுக்குச் செல்லக்கூடாது, எந்த டாஸ்க்குகளிலும் பங்குபெறக்கூடாது, பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் சொல்லும் மெனுவை சமைக்கவேண்டும் ஆகிய செயல்பாடுகளுக்கு பவா தள்ளப்பட்டார்.

அங்கே, உணவு சமைப்பது பற்றிப் பேசும்போது, ‘பெண்களிடம் நன்றாக சமைக்கிறார்கள் என்று சொல்லக்கூடாது, அப்படி சொல்லிவிட்டால், அவர்கள் சமைப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள். தங்களது தனித்திறமைகளை விட்டுவிட்டு, வீட்டில் உள்ளவர்களுக்கு சமைப்பதை மட்டுமே பெரிதாக எடுத்துக்கொள்வார்கள்’ என்று பவா குறிப்பிட்டது சமூக வலைதளங்களில் பேசுபொருளானது.

பிக்பாஸ் வீட்டில் உள்ள நபர்களிலேயே வயதில் மூத்தவர் பவா செல்லதுரை தான். ஆனால், தனது வயது காரணமாக தன்னை பிறர் ‘ஐயா’ என்று அழைக்க வேண்டாம் எனவும் ‘ப்ரோ’ அல்லது ‘பவா’ என்றே கூப்பிடலாம் என்று அவர் சொன்னதும் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இந்த சீசனில் மிகவும் டஃப் ஆன போட்டியாளராக பவா இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஒரே வாரத்தில் தன் நடவடிக்கைகளால் சர்ச்சைகளில் சிக்கினார், பவா. சக போட்டியாளர்களின் கேலி கிண்டலுக்கும் ஆளானார். பவா தீவிரமாக கதை சொல்லிக் கொண்டிருந்த போது சில போட்டியாளர்கள் கொட்டாவி விட்டனர். மலையாளக் கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு, ஊறுகாய் விற்கும் பெண்ணை அத்துமீறித் தொட்டது, அதற்காக அறை வாங்கியது தொடர்பாக இவர் சொன்ன கதைக்காக, நடிகை விசித்ரா, நடிகர் கூல் சுரேஷ் உட்பட போட்டியாளர்களில் சிலர் இவரை விமர்சனம் செய்தார்கள்.

பிக் பாஸ் வீட்டில் எல்லா இடத்திலும் எப்போதும் பவா உமிழ் நீரை துப்பிக் கொண்டே இருந்ததும் சர்ச்சையானது. இது பற்றிய விவாதம் எழுந்தபோது, அது தனது இயல்பு என்றும் அதனை மாற்றிக்கொள்ள முடியாது என்றும் நியாயப்படுத்தி மேலும் எதிர்ப்பை சம்பாதித்தார்.

உச்சமாக நடிகை வனிதா விஜய்குமாரின் மகள் ஜோவிகா ’படிச்சா மட்டும்தான் வாழ முடியுமா? எல்லாரும் டாக்டருக்கு படிச்சா கம்பவுண்டர் வேலையை யாரு பார்ப்பது’ எனக் கேட்ட போது அவர் கருத்துக்கு ஆதரவாக பவா பேசியது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. கல்வி கட்டாயமல்ல, படிக்காத பலர் சாதித்துள்ளார்கள், பாரதியார் பிஹெச்டி முடிக்கவில்லை என்றெல்லாம் பவா பேசியது, ‘ஓர் எழுத்தாளர் இப்படிப் பேசலாமா’ என்ற கடுமையான எதிர்ப்புக்கு உள்ளானது.

இந்த பேச்சு வந்தபோது ஜோவிகாவை பாராட்டி பவா கை குலுக்கச் செல்ல, அவர் பதில் மரியாதைத் தராமல், கை கொடுக்காமலேயே அலட்சியமாகச் சென்றுவிட்டதை மீம் கிரியேட்டர்கள் வைரலாக்கினார்கள்.

பவா ஏன் வெளியேறுகிறார்?

இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் முதல் எவிக்‌ஷன் நேற்று நிகழ்ந்தது. அனன்யா எலிமினேட்டாகி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கே இது அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில், அனன்யாவை எலிமினேட் செய்யும் முன்னர் கமல்ஹாசன் அனைத்து போட்டியாளர்களிடமும் யார் வெளியே செல்வார் என்பதை யூகத்தின் அடிப்படையில் சொல்லச் சொன்னார். இதில் பெரும்பாலானோர் பவா செல்லதுரை பெயரை தான் சொன்னார்கள். ஒரு சிலர் பிரதீப் வெளியேறுவார் என கூறினர். யாருமே அனன்யா பெயரை சொல்லவில்லை.

ரசிகர்களின் ஓட்டுகளின் அடிப்படையில் பார்த்தால் யுகேந்திரனே மிகக் குறைந்த ஓட்டுகள் வாங்கியிருந்ததாகத் தகவல் வெளியானது. அதற்கடுத்த இடங்களில் பவா செல்லத்துரையும் அனன்யாவும் இருந்த நிலையில் யுகேந்திரன், பவாவைத் தாண்டி அனன்யா வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில்தான், யாரும் எதிர்பாராத இன்னொரு திருப்பமாக இன்று பிக் பாஸ் வீட்டில் இருந்து பவா செல்லத்துரை தானாகவே வெளியேற விருப்பம் தெரிவித்துள்ளார். “இந்த வீட்டில் என்னால் சில டாஸ்குகளைச் செய்ய இயலாது. இந்த வீட்டுக்கு நான் வரும் போது சூழ்ச்சிகள், சதிகள் எல்லாம் இருக்குமெனத் தெரிந்துதான் வந்தேன். ஆனால், இங்குக் கூடுதலாக வன்மமும் அதிகமாக இருக்கிறது. எனவே தொடர்ந்து இங்கு இருந்து டாஸ்குகளைச் செய்ய என் உடலும் ஒத்துழைக்காது. எனவே, நான் வெளியேறி விடுகிறேன்” என பவா சொல்லியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் விக்ரம் தலைவராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். தலைவரை கவராத நபர்கள் இரண்டாவது வீட்டிற்கு அனுப்பப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரமும் பவா செல்லதுரை இரண்டாவது வீட்டுக்கு அனுப்பப்பட்டார். இதை அவரால் ஏற்றுகொள்ள முடியவில்லை. அதனால் தான் போட்டியில் தொடர பவா விரும்பவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஃபேஸ்புக்கில் பவா செல்லத்துரையின் நண்பர் ஒருவர் சொல்வது போல், ‘பவா. செல்லத்துரையாக உள்ளே போனவரை பாவ. செல்லாத்துரையாக வெளியே அனுப்பியிருக்கிறது பிக்பாஸ்.’

பிக் பாஸ் வீட்டில் என்னவெல்லாம் நடந்தது என்பதை கதை கதையாக கேட்பதற்கு பவாவின் விசிறிகள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

அந்த கதைகளை சொல்வாரா பவா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...