குமாரி ஸ்ரீமதி (Kumari Srimathi – தெலுங்கு வெப் சீரிஸ்) – அமேசான் ப்ரைம்
நிதியா மேனன், கவுதமி உள்ளிட்டோர் நடித்துள்ள குமாரி ஸ்ரீமதி தெலுங்கு வெப் சீரிஸ் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் உள்ளது.
கடன் பிரச்சினையால் நித்யா மேன்னின் அப்பா ஊரைவிட்டு ஓடிப்போக, அவரது குடும்பத்தை வீட்டை விட்டு விரட்டுகிறார் சித்தப்பா. வளர்ந்து பெரியவளாகும் நித்யா மேனன், அந்த வீட்டை மீட்க முயல்கிறார். ஒரு கட்டத்தில் 38 லட்ச ரூபாய் கொடுத்து 6 மாதங்களுக்குள் அவர் அந்த வீட்டை மீட்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.
அந்த பணத்தை திரட்டுவதற்காக அவர் ஒரு பாரை தொடங்குகிறார். இதனால் ஊரில் உள்ள பெண்களின் எதிர்ப்பை சந்திக்கிறார். அந்த எதிர்ப்புகளை மீறி அவரால் பார் நடந்த்த முடிந்ததா?… வீட்டை மீட்க முடிந்ததா என்பதுதான் கதை.
ஆபாசம், வன்முறை என்று ஏதும் இல்லாத ஃபீல்குட் கதையை விரும்புபவர்கள் இந்த வெப் சீரிஸைப் பார்க்கலாம்.
கிக் (தமிழ்) – டிஸ்னி ஹாட்ஸ்டார்
பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம், தான்யா ஹோப், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் ‘கிக்’.
விளம்பர நிறுவனத்தில் வேலை பார்க்கும் சந்தானம் குறுக்கு வழியில் தனது நிறுவனத்துக்கு ஆர்டர்களைப் பிடிக்கிறார். இதனால் இன்னொரு விளம்பர நிறுவனத்தில் வேலை பார்க்கும் தான்யா ஹோப்புக்கு, சந்தானத்தை நேரில் பார்க்காமலேயே அவர் மீது வெறுப்பு ஏற்படுகிறது. அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்கிறார். ஒரு நிகழ்ச்சியில் தான்யாவை சந்திக்கும் சந்தானம், தான் ஒரு விஞ்ஞானியின் மகன் என்று பொய் சொல்லி அவரை காதலிக்கிறார். தான்யாவுக்கு உண்மை தெரிந்ததா? சந்தானத்தின் காதல் என்ன ஆனது என்பதுதான் படத்தின் கதை.
லாஜிக் எல்லாம் பார்க்காமல், சந்தானத்தின் காமெடி மட்டும் போதும் என்று நினைப்பவர்களுக்கு ஏற்ற படம் இது.
ஆர்டிஎக்ஸ் (RDX: Robert Dony Xavier – மலையாளம்) – நெட்பிளிக்ஸ்
மலையாள திரைப்படங்களில் இந்த ஆண்டு 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த படம் என்ற பெருமையைப் பெற்ற ஆர்டிஎக்ஸ் படத்தை, நெட்பிளிக்ஸ் தளத்தில் பார்க்கலாம்.
சண்டையில் யாராலும் வெல்ல முடியாத கூட்டணி ராபர்ட், டோனி மற்றும் சேவியர். ஒரு சண்டையின்போது ஏற்பட்ட அசம்பாவித்த்தால் அவர்கள் பிரிகிறார்கள். பிற்காலத்தில் தங்கள் குடும்பத்துக்கு ஒரு ஆபத்து வரும்போது அவர்கள் மீண்டும் ஒன்று சேர்கிறார்கள். குடும்பத்துக்கு வரும் ஆபத்தை அவர்கள் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதுதான் படத்தின் கதை.
திரையில் மென்மையான கதைகளைச் சொல்லி ஜெயித்த சேட்டன்கள், தங்களுக்கு வன்முறை கலந்தும் கதை சொல்லத் தெரியும் என்பதை இப்படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார்கள்.
ஸ்கேம் 2003 ( Scam 2003 – இந்தி வெப்சீரிஸ்) – சோனி லைவ்
நாட்டையே உலுக்கிய பங்குபத்திர ஊழலில் தொடர்புடைய அப்துல் கரீம் தெல்கியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்ட தொடர்தான் ஸ்கேம் 2003. இத்தொடரை சோனி லைவ் ஓடிடியில் பார்க்கலாம்.
சோனி லைவ் ஓடிடியில் ஏற்கெனவே பிரபலமான ‘ஸ்கேம் 1992’ (ஹர்ஷத் மேத்தாவின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டது) தொடரை இயக்கிய ஹன்சல் மேத்தாதான் இந்த தொடரை இயக்கியுள்ளார்.