’பேட்ட’ படத்தில் நடித்த மாளவிகா மோகனன், கேரளாவைச் சேர்ந்தவர் என்றாலும் மும்பையில் மாடலிங் வாய்ப்புகளுக்காக மும்முரமாக தேடிக்கொண்டிருந்தார்.
அப்போதுதான் தமிழில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. ‘பேட்ட’ படத்தில் அவரது கதாபாத்திரம் வசீகரிக்கவில்லை என்றாலும், விஜயுடன் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்ததுதான் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.
‘மாஸ்டர்’ படத்தின் மூலம் பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ பட வாய்ப்பு கிடைத்தது. இதில் இவருக்கு பழங்குடியின பெண் கதாபாத்திரம். ரிஸ்க் எடுத்து நடிக்கும் வகையில் இவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளதாம். இதனால் இவரை ஸ்பாட்டில் படுத்தி எடுத்துவிட்டாராம் இயக்குநர்.
‘நான் நடித்த கதாபாத்திரங்களிலேயே மிகவும் சவாலானது தங்கலானில் நான் நடித்திருக்கும் கதாபாத்திரம்தான். இந்தளவிற்கு என்னை வருத்திக்கொண்டு இதுவரை நான் நடித்தது இல்லை. ரஞ்சித் ரொம்பவே வேலை வாங்கிவிட்டார்’ என்று உருகி உருகி கூறுகிறார் மாளவிகா மோகனன்.
மாளவிகா இப்படி கூற காரணம், வாய்ப்புகள் எதுவும் எதிர்பார்த்த மாதிரி வரவில்லை என்பதால்தான். எதையும் வெடுக் வெடுக்கென பேசுவதால், இவரை படங்களில் ஒப்பந்தம் செய்யவே ஹீரோக்கள் தயங்குகிறார்கள் என்று கோலிவுட்டில் முணுமுணுக்கிறார்கள்
நொந்துப் போன சித்தார்த்!
ஷங்கரின் ’பாய்ஸ்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சித்தார்த், தமிழ் சினிமாவில் படங்களைப் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். இதனால் இவருக்கென்று ஒரு மார்க்கெட் இங்கே இல்லாமலேயே போனது.
ஆனால் தெலுங்கு சினிமாவில் ‘பொம்மரிலு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தொடர்ந்து நடிக்க ஆரம்பித்த சித்தார்த்திற்கு, அங்கே ஒரு சிறிய மார்க்கெட் உருவானது.
ஆனாலும் அந்த மார்க்கெட்டையும் அவரால் தக்க வைக்க முடியவில்லை. காரணம் பளீர் பளீரென கருத்துகளை முன் வைத்ததுதான். ஏதாவது சமூக பிரச்சினை என்றாலும் சரி, சினிமா தொடர்பான பிரச்சினையாக இருந்தாலும் சரி, சித்தார்த் ஏதாவது கருத்து கூறி, வசமாக சிக்கிக் கொள்வது வழக்கம்.
இதனால் சித்தார்த் படங்கள் என்றாலே அங்குள்ள விநியோகஸ்தர்களுக்கு கொஞ்சம் கிலியாகதான் இருக்கும். அவரது பட த்தை விநியோகம் செய்தால் கல்லா கட்ட முடியுமா…படம் வெளியாகுமா என்ற தயக்கம் அவர்களுக்குள் இருந்தது. இதனால் சித்தார்த்திற்கு அங்கே ஒரு தடையும் போட்டுவிட்டார்கள்.
சினிமாவில் தடை என்பது தானாகவே சரியாகிவிட கூடிய இருமல் பிரச்சினை மாதிரிதான். இடையில் ’மஹாசமுத்திரம்’ என்ற படத்தில் நடித்தார். ஆனால் அந்தப் படம் பெரிதாக எடுப்படவில்லை. ப்ளாப் ஆனது.
இதனால் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் இழந்த மார்க்கெட்டை பிடிக்க சொந்த தயாரிப்பில் இறங்கினார். அதன் தொடர்ச்சியாக எடுத்தப்படம்தான் ‘சித்தா’. தமிழில் இப்படத்திற்கு ஓரளவிற்கு நல்லப் பெயர் கிடைத்திருக்கிறது. 5 நாட்களில் 11 கோடி வசூலானதாக கோலிவுட்டில் பேசிக்கொள்கிறார்கள்.
இதனால் பெரும் நம்பிக்கையுடன் இந்த ‘சித்தா’ படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிடும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.
ஆனால் இங்கேதான் சித்தார்த்திற்கு மன உளைச்சல் ஆரம்பமானதாம். இவரது படத்தின் தெலுங்கு உரிமையை யாரும் வாங்க முன்வரவே இல்லையாம்.
தமிழில் உதயநிதி ஸ்டாலின், மலையாளத்தில் கோகுலம் கோபாலன், கன்னடத்தில் கேஜிஎஃப் படத்தை தயாரித்த நிறுவனம் ஆகியோர் விநியோக உரிமையை வாங்கி வெளியிட்டு இருக்கிறார்கள். ஆனாலும் தெலுங்கில் யாரும் சீண்டக்கூட இல்லை.