இந்திய சினிமாவையே தனது நடிப்புத் திறமையாலும், வசீகரமான கவர்ச்சியாலும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தவர் ஸ்ரீதேவி.
2018-ல் ஸ்ரீதேவி மரணமடைந்த போது, அவரது மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள். ஏராளமான சர்ச்சைகள். எக்கச்சக்கமான கிசுகிசுக்கள்.
பல பிரச்சினைகள், சிக்கல்கள் தொடர்ந்தாலும், ஸ்ரீதேவியின் மரணம் குறித்து அவரது கணவர் போனி கபூர் இதுவரையில் எந்தவிதமான கருத்தையும் சொன்னது இல்லை.
ஆனால் ஸ்ரீதேவியின் மறைவுக்குப் பிறகு ஏறக்குறைய 5 ஆண்டுகளுக்குப் பிறகு போனி கபூர் ஒரு பிரபல தின இதழுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அதில் ஸ்ரீதேவியின் மரணம் குறித்து முதல் முறையாக தனது கருத்தைப் பகிர்ந்திருக்கிறார்.
துபாயில் இருக்கும் ஜுமெய்ரா எமிரேட்ஸ் டவர்ஸில் இருக்கும் தனது ப்ரெஷிடென்ஷியல் ஸ்வீட்டில் இருந்தபோது பாத்டப்பில் மூழ்கி மரணமடைந்துவிட்டார்.
ஸ்ரீதேவியின் மரணம் குறித்து இதுவரை போனி கபூர் மெளனமாக இருந்ததற்கு காரணம், பொய்யைக் கண்டறியும் லை டிடெக்டர் சோதனைகள் உட்பட பல சோதனைகளுக்கு போனி கபூர் உட்படுத்தப்பட்டிருந்தாராம்.
ஸ்ரீதேவி தனது அழகை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்காக தீவிர டயட்டை பின்பற்றினார். தனது உணவில் அவர் உப்பை சேர்ந்து கொள்வதே இல்லை. இதனால் லோ பிபி காரணமாக ப்ளாக் அவுட் ஆன சம்பவமும் நிகழ்ந்திருக்கிறது. நாகார்ஜூனாவும் கூட, ஸ்ரீதேவி இப்படி ப்ளாக அவுட் ஆகி குளியலறையில் விழுந்து பல் உடைந்ததாக கூறியிருக்கிறார்.
‘ஸ்ரீதேவியின் மரணம் இயற்கை மரணம் அல்ல. அது விபத்தினால் உண்டான மரணம். இதுகுறித்து நான் பேசக்கூடாது என முடிவெடுத்து இருந்தேன். ஏறக்குறைய 24 மணி நேரம் அல்லது 48 மணி நேரம் என்னிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றது. இந்திய ஊடகங்கள் கொடுத்த அழுத்தத்தினால் இந்த சோதனைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது என விசாரணை அதிகாரிகள் கூறினார்கள். ஆனால் விசாரணையில் எந்தவிதமான தவறும் நடைபெறவில்லை என தெரிய வந்தது. அவர்கள் மேற்கொண்ட பொய்யை கண்டறியும் சோதனை உட்பட அனைத்து சோதனைகளுக்கும் நான் ஒத்துழைப்பு கொடுத்தேன். அதன் பிறகு வந்த அறிவிக்கையில் ஸ்ரீதேவியின் மரணம் ஒரு விபத்து என தெரிய வந்தது.
ஸ்ரீதேவி தன்னை அழகாக வைத்து கொள்ள அவர் விரும்பினார். இதற்காக உணவு உட்கொள்ளாமலேயே இருந்திருக்கிறார். எங்கள் இருவருக்கும் திருமணம் ஆன போதே இரண்டு முறை ப்ளாக் அவுட் ஆன சம்பவமும் நிகழ்ந்திருக்கின்றன. டாக்டர் பல முறை உங்களுக்கு குறைந்த ரத்த அழுத்த பிரச்சினை இருக்கிறது. கவனமுடன் இருங்கள் என்று அறிவுறுத்தினார்’ என்று போனி கபூர் மனம் திறந்து பேசியிருக்கிறார்.