நோயல் நடேசன்
மனிதர்கள் உருவாக்கிய ஏழு உலக அதிசயங்களில் ஒன்று, பெட்ரா எனப்படும் சிவந்த கோயில் (Treasury). 40 மீட்டர் உயரத்தில் அமைந்த ஒரு கல்லில் 2000 வருடங்கள் முன்பாக செதுக்கப்பட்ட கட்டிடம் இது. ஜோர்டானில் அமைந்துள்ளது. ஏழு உலக அதிசயங்களில் தாஜ்மகால் , பிரமிட் இரண்டும் இறந்தவர்களது சமாதிகள் என்பது நமக்கு ஏற்கனவே தெரியும். ஆனால், பெட்ராவை பல நூற்றாண்டுகளாக புராதன கோயில் என்றே நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், அதுவும் சமாதிகளின் வடிவமே என்று 19 நூற்றாண்டிலேயே வரலாற்றாசிரியர்களுக்குப் புரிந்தது.
எகிப்து சென்று வந்த பின், நான் போக நினைத்த இடம் ஜோர்டான். அதன் தலைநகர் அம்மான். ஆனால், கால நேரம் வரவேண்டும். இம்முறை ஐரோப்பிய பிரயாணத்தில் ஒரு கிழமை தங்கும் சந்தர்ப்பம் வந்தது.
யூபிரரீஸ் – ரைகரிஸ் (Eupharates and Tigris) நதிகரையில் பாபிலோனியர், நைல் நதிக் கரையில் எகிப்தியர், சிந்து நதிகரையில் சிந்துவெளி நாகரீகங்களின் கட்டிடக் கலையை நாம் பார்த்துள்ளோம். அவர்கள் ஆற்றுப் படுக்கைகளில் விவசாயம் செய்தவர்கள். அவர்களது ஆரம்ப கிராம விவசாயம் பின் நகர உருவாக்கம் ஆனபோது இப்படியான கட்டிடங்கள் உருவானது. அதுபோல் தென்னமெரிக்காவில் இன்கா, மெக்சிக்கோவில் மாயன் மற்றும் அஸ்ரெக் இனத்தினரும் விவசாயத்தின் உபரியால் நகரங்கள் அமைத்தவர்கள்.
பெட்ரா நகரம், பேடுவின் என்ற (Bedouin) நாடோடி இனக்குழுவினர் உருவாக்கியது. இவர்கள் நபோட்டியன்ஸ் (Nabataeans) என்ற பெயரில் அரேபிய பாலைவனமெங்கும் திரிந்தவர்கள். எப்படி இவர்கள் ஒரு நகரத்தை உருவாக்கினார்கள் என்பது ஆச்சரியமானது. நகர உருவாக்கத்திற்கு எங்கிருந்து செல்வத்தை இவர்கள் பெற்றார்கள் என்பதும் கேள்வியாகும்.
முதலில் இவர்கள் யார்?
யுதர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் முதல்வரான ஆபிரகாமின் முதல் பிள்ளையான இஸ்மாயிலின் 12 குழந்தைகளில் முதல் வாரிசிலிருந்து, நபோட்டியன்ஸ் வந்தார்கள் என்று பழைய ஏற்பாட்டில் (Old testament) ஒரு குறிப்பு உள்ளது. அதேபோல் யேசுநாதர் பிறந்தபோது கிழக்கிலிருந்து பல பொக்கிஷங்களுடன் வந்த மூன்று ஞானிகள் (Three wisemen) இவர்களாக இருக்கலாம் என புதிய ஏற்பாட்டின்படி முடிவிற்கு வரலாம். இவர்கள் அக்காலத்தில் பெத்தலகேமிற்கு கிழக்கான இடத்தில் இருந்தார்கள் என்பதற்கு உறுதியான வரலாற்று சான்றுகள் உள்ளது.
ஜோர்டானது சரித்திரம் பழைய விவிலியத்தில் பல இடங்களில் பதிவாகி உள்ளது. உண்மையையா பொய்யா என்று தெரியாதபோதிலும் எனது மனத்தில் ஆழமாக பதிந்துள்ளது.
பழைய விவிலியத்தில், இஸ்ரேலியர்களுடன் தொடர்ந்து குரோதம் பாராட்டும் இனக்குழுவினர் அம்மானில் வசிப்பதால் இவர்கள் அமோனியற் (Ammonite) என்பார்கள். இதற்கு மேலாக எகிப்திலிருந்து தப்பி வந்த மோசஸ், நாற்பது வருடங்கள் யூதர்களோடு அலைந்த இடமாகவும், பத்து கட்டளைகள் எழுதப்பட்ட கற்சாசனத்தை இங்கே பெற்றுக்கொண்டதாகவும் கருதப்படுகிறது. மோசேஸ் மட்டுமல்ல தம்பியாகிய ஆரன் இறந்த பூமியாகவும் இது கருதப்படுகிறது. ஜெரிக்கோ, யூதேயா போல் தற்போதைய ஜோர்டான், கிறிஸ்தவர்களுக்கு ஒரு தேவ பூமி.
ஜோர்டானையும் இஸ்ரேலையும் பிரிக்கும் சாக்கடல் (Dead Sea) இங்குள்ளது. இங்கிருந்தே மம்மியாக்கத்துக்கு தேவையான, படகுகளின் வெடிப்புகளை ஒட்டும் தார் (Asphalt) எகிப்து கொண்டுசெல்லப்பட்டது.
நபட்டியன்ஸ் (Nabataeans) தான் தற்போதைய அரேபியா எழுத்தின் மூலவர்கள். இவர்கள் காலத்தில் உருவாக்கிய வளைந்த எழுத்துகளே பிற்காலத்தில் அரேபிய எழுத்துக்களாக விரிவாக்கம் பெற்றது என்கிறார்கள்.
நபட்டியன்ஸ் பற்றிப் பல வாய்மொழிக் கதைகள் இருந்தாலும், இவர்கள் தங்களைப் பற்றி எதுவும் எழுதவில்லை. ஆனால், இவர்களைப் பற்றி கிரேக்கர்கள், ரோமர்கள், இஸ்ரேலியர்கள் எழுதியுள்ளார்கள். இவர்கள் செல்வந்தர்களாக வாழ்ந்திருக்கிறார்கள். 300 வருடங்கள் மேல் உச்சத்தில் வாழ்ந்தவர்கள். கிரேக்க நாகரீகம் உச்சத்திலிருந்தபோது சமகாலத்தில் இவர்கள் ராட்சியம் இருந்தால் பல விடயங்களை கிரிக்கர்களிடமிருந்து பெற்றிருக்கிறார்கள். பெண்கள் சம உரிமை பெற்று, அடிமைகளற்ற சமூகமாக வாழ்ந்திருக்கிறார்கள். இவர்களது அரசன், குடிமக்களோடு ஒரே பாத்திரத்தில் உணவுண்டதாக வாசித்துள்ளேன். ஜனநாயகம் உருவாகிய ஏதென்சில் அடிமைகள் இருந்தார்கள். ஆனால், நபட்டியன்ஸ் அடிமைகளை வைத்திருக்கவில்லை என்பது முக்கியமானதாகும்.
எகிப்திற்கும் கிரேக்கத்திற்குமான பாதையில் இருந்ததால் எகிப்திய, கிரேக்க தெய்வங்களையும் வழிபட்டார்கள். இவர்களது முக்கிய கடவுள் டுசரா (Dushara) என்ற ஆண் தெய்வம். இதுவே இஸ்லாமுக்கு (Pre – Islamic worship) முந்திய அரபியர்களின் தெய்வமாக வரலாற்றில் கணிக்கப்படுகிறது.
நபட்டியன்ஸ் பல விடயங்களை கிரேக்கர்களிமிருந்து பெற்ற போதிலும் கிரேக்கர்களோடு போரிட்ட வரலாறும் உண்டு.
கிறிஸ்துக்குப் பின்னர் ரோமர்கள் பெட்ராவைக் கைப்பற்றியதும் தற்போதைய சிரியாவில் உள்ள பல்மையறா (Palmyra ) ரோமர்களின் மத்திய கிழக்கு – லாவன்ட் பிரதேசத்தின் (Present Israel, Lebanon, Syria, and Jordan) முக்கிய நகரமாகியது. பின்பாக உருவாகிய தென் ரோமர்களது பைசான்ரியம் (Byzantium) அரசு, இஸ்லாமிய அரசுகள் (Umayyad Caliphate) எனத் தொடர்ச்சியான அரசுகளின் வரலாறுகள் எழுதப்படும்போது நபட்டியன்ஸ்சை உலகம் 18 நூற்றாண்டு வரை மறந்து விட்டது. வரலாற்றில் பெரிய இடைவெளியை பலர் கவனிக்கவில்லை.
ஒவ்வொரு இனமும் தங்கள் வரலாற்றை எழுதி வைக்கவேண்டும். ஆனால், இவர்கள் தங்கள் வரலாற்றை எழுத தொடங்குமுன் ரோமர்களால் கருவறுக்கப்பட்டுள்ளார்கள். 18ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் செய்த பல விடயங்களை முதலாம் இரண்டாம் நூற்றாண்டுகளில் ரோமர்கள் செய்தார்கள்.
ரோமர்கள் ஆண்டபோது உருவாகிய நகரம்தான் தற்போதைய ஜோர்டானின் தலை நகரமாகிய அம்மான். ஆனால், ரோமர்கள் காலத்துப் பெயர் பிலடெல்பியா (Philadelphia). அந்த பெயரை ஒரு கற்சாசனத்தில் பார்த்தபோது அதையே அமெரிக்கர்கள் தங்களது நகருக்கு இரவல் வாங்கி, சுதந்திரம் பிரகடனம் செய்திருக்கிறார்களோ என்று நினைத்தேன்.
தாய்லாந்து போல் ஜோர்டான், உல்லாசப் பிரயாணிகளால் பெரும் பணத்தையீட்டும் நாடு. இங்கு ஆங்கிலம் எங்கும் பேசலாம்.
எனக்கு ஆச்சரியம் ஒன்று குமிழியாக மனத்தில் எழுந்தது: ஜோர்டானின் ஒரு பக்கம் இஸ்ரேல், மறுபக்கம் சிரியா என இரு அரசியல் எரிமலைகள் பொங்கி வழியும் இடத்தில், பாலைவனத்துப் பூங்காவாக மிகவும் அமைதியான மத நல்லிணக்க்கம் கொண்ட அரபு நாடாக ஜோர்டான் அமைந்திருப்பதே! கிறிஸ்துவ மக்கள் பூர்வகுடிகளாக இங்கு அமைதியாக வாழ்கிறார்கள். இதைவிட முக்கியமான விடயம் ஜோர்டானில் ஏராளம் பாலஸ்தீனியர்கள் அடைக்கலம் பெற்றுள்ளார்கள். கடந்த பத்து வருடங்களில் சிரியா உள்நாட்டுப் போரில் இடம்பெயர்ந்த சிரிய நாட்டவர்கள் இங்குள்ளார்கள். அகதிகளை அரவணைக்கும் ஒரு நாடு ஜோர்டான்.
எமது ஜோர்டானிய வழிகாட்டியிடம் இதைக் கேட்டபோது, “அவர்கள் எங்கள் சகோதரர்களே” என்றார். அதைக் கேட்கச் சந்தோசமாக இருந்தது. ஜோர்டான் பொருளாதாரத்தில் வசதியான நாடல்ல. மத்திய கிழக்கில் எண்ணைய், எரிவாயு என்பன அற்ற நாடு என்பது குறிப்பிடவேண்டும்.
ஜோர்டான் ஏர்போட்டில் எங்களது பொதிகள் வந்திறங்குமிடத்திலே எங்களது வழிகாட்டி வந்ததுடன், கடவுச்சீட்டையும் அவரே வாங்கி விசாவை புதுப்பித்துத் தந்தார். வேறு எந்த நாட்டிலும் பயணப் பொதிகள் வந்திறங்குமிடத்தில் பயணிகள் தவிர்ந்த வழிகாட்டிகளோ அல்லது மற்றவர்களோ வரமுடியாது. ஒரு விதத்தில் உல்லாசப் பிரயாணிகளை மரியாதையாக நடத்தும் ஒரே நாடு. நாங்கள் இரவு எட்டு மணிக்கு ஹோட்டலில் வந்து சேர்ந்தோம்.
மறுநாள் காலையில் ஹோட்டலில் இருந்து வடக்கு நோக்கிய எங்கள் பயணம் தொடங்கியது. அம்மான் நகரில் விளிம்பில் எங்கள் பேருந்து நிறுத்தப்பட்டது.
ரோமர்கள் எங்கு சென்றாலும் திறந்தவெளி திரையரங்கங்கள் கட்டுவார்கள். அப்படியான ஒரு திரையரங்கம் சிதைவற்று புதியதாக இருந்தது. மலையின் ஒரு பக்கத்தை குடைந்து அமைத்துள்ள கட்டிடமே, எங்கள் முதல் பார்க்குமிடமாக இருந்தது. இந்த இடத்தை அழியாது பாதுகாப்பதுடன் தற்காலிக கலாச்சார நிகழ்வுகளான சங்கீத திருவிழாக்கள், கலை நிகழ்வுகள் நடக்கின்றன. அமெரிக்காவிலிருந்து வந்த இசைக்குழுக்கள் இங்கு தங்கள் நிகழ்வை சமீபத்தில் நடத்தினார்கள்.
அதன் பின்பாக பேருந்து நின்ற இடம், அம்மானுக்கு பக்கத்தில சிற்றாடல் என்ற இடம். அது உயரமான மலைகளோரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பழைய நகரம். இதை ராபாத் நகரம் (Rabbah or Rabbath Ammon) என்கிறார்கள். இங்கு ரோமர்களது கட்டிடங்கள் இருந்தபோதிலும் கிரேக்கர்கள் மற்றும் இஸ்லாமிய அரசுகளின் கட்டிடங்களின் கூட்டாக அமைந்திருப்தை பார்க்க முடிந்தது. ஹேர்குலிசின் கோவில், கிரேக்க கட்டிட அமைப்புகள், இஸ்லாமிய ஆட்சியில் அமைக்கப்பட்ட பள்ளிவாசல் என இருந்தபோதிலும் இந்த இடம் தாமிர காலத்திலிருந்தே மனிதர்கள் வாழ்ந்த இடம். இது ரோமப் பேரரரசன் ஹட்ரியன் (Hadrian) வருகை தந்த இடம். ஆனால், பல நூற்றாண்டுகளாகக் கைவிடப்பட்டிருந்து. 1878இல் பெடுவின் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டது. உலகில் மனிதர்கள் தொடர்ச்சியாக வாழ்ந்த இடத்திலொன்றாக பல வரலாற்றாசிரியர்களால் இந்த இடம் கருதப்படுகிறது. மூன்று அரசுகளும் (Romans (1st century BCE), Byzantines (3rd century CE) and the Umayyads (7th century CE). தமக்கு முந்திய கட்டிடங்களை அழிக்காது வரலாற்றை எதிர்காலத்தவர்கள் புரிந்துகொள்ள விட்டுச் சென்றது ஒரு விதத்தில் முக்கியமானது. பல இடங்களில் ஒன்றை அழித்தே மற்றதை கட்டுவார்கள். அமோனியற் என்பவர்களே பண்டைய காலத்தில் இங்கு வாழ்ந்தவர்கள் என்பது தோண்டப்பட்ட மட்பாண்ட உடைவுகளிருந்து அறியப்படுகிறது
மூன்று விதமான சாம்ராட்சியங்கள் கோலோச்சி அழிந்த இடமான அந்த இடத்தில் நிற்கும்போது, அதிகாரம் கொண்ட மனிதர்கள் மட்டுமல்ல, பெரிய அரசுகளும் எப்படி வீழ்கின்றன என்பதை எண்ணாமல் இருக்க முடியவில்லை.
ரோமர்கள் ஏன் இங்கு படையெடுத்து வந்தார்கள்?
இந்த நபட்டியன்ஸ், 300 வருடங்கள் பெட்ரா என்ற நகரைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டவர்கள். பல தடவைகள் கிரிக்கர்களை தோற்கடித்தவர்கள். இவர்களும் கிரிக்கர்களது மதம்போல் பல தெய்வங்கள் கொண்டவர்கள். இவர்கள் கிரேக்கத் தெய்வமான டையனேசிஸ் மற்றும் எகிப்தின் பெண் தெய்வமான ஐசிஸ்யையும் தங்கள் தெய்வமாக வைத்திருந்தார்கள்.
கீழைத்தேச நாடுகளிளிருந்து ஐரோப்பா செல்லும் வாசனைத் திரவியங்கள் (Spices) மற்றும் விலையுயர்ந்த பொருட்களுக்கு வரி வசூலிப்பதே நபட்டியன்ஸ்களின் வருமானமாக இருந்தது. வாணிகர்களது ‘சில்க் ரோடு’ மற்றும் கடல் வழிப்பயணங்கள் இவர்கள் பிரதேசத்தைக் கடந்தே போகவேண்டும். எகிப்திற்கு செல்லும் ஒட்டகங்கள் பொதிகளை சுமந்து வரும்போது வணிகர்களும் ஓட்டகங்களும் இளைப்பாற வேண்டும். உணவுப் பொருட்கள், குடிநீர் அவர்கள் தேவை என்பதால் பிரதேசத்தை கடந்து போக வரி விதிப்பார்கள். அந்த வரிப்பணத்தைக் கொண்டே இவர்கள் அரசமைத்ததுடன் மகோன்னதமாக வாழ்ந்தார்கள். ரோம சாம்ராச்சியம் படையெடுப்பதற்கு, இவர்களது இந்த வரி விதிப்பே காரணம்.
தொடரும்