No menu items!

PTRஐ பாராட்டிய முதல்வர் – மிஸ் ரகசியா

PTRஐ பாராட்டிய முதல்வர் – மிஸ் ரகசியா

“பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்” என்று உற்சாகமாக பாடிக்கொண்டே ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.

“என்ன மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் ஆகப் போகுதுங்கிற சந்தோஷமா?

“சந்தோஷம் இருக்காதா பின்ன?.. எத்தனை வருஷத்து கனவு இப்ப நனவாகப் போகுது… இதுக்கு ஒரு வகையில திமுகதான் காரணம்னு சொல்றாங்க.”

“திமுகவுக்கும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கும் என்ன சம்பந்தம்?”

“குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை தந்து பெண்கள் மத்தியில திமுக தங்களோட செல்வாக்கை அதிகரிச்சிருக்கு. இதைப் பார்த்து காங்கிரஸ் கட்சியும் அவங்க ஆள்ற மாநிலங்கள்ல மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அமல்படுத்திட்டு வர்றாங்க. அதுலயும் கர்நாடக மாநிலத்துல அந்த தொகையை 2,000 ரூபாயா அதிகரிச்சு இருக்காங்க. அதனால அங்க காங்கிரஸ் கட்சியோட கை ஓங்கியிருக்கு. தெலங்கானா மாநிலத்துலயும் இந்த திட்டத்தை கொண்டு வருவோம்னு வாக்குறுதி கொடுத்திருக்காங்க. இப்படி காங்கிரஸ் கட்சியும் திமுகவும் பெண்களோட வாக்குகளை கவர்றதை தடுக்க, அதைவிட பெருசா ஏதாவது செய்யணும்னு மோடி திட்டம் போட்டிருக்கார். அதோட விளைவாத்தான் மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை நாடாளுமன்றத்துல வேகவேகமா கொண்டு வர்றாங்க. ஆக இதுக்கு மூல காரணம் திமுகதான்னு உடன்பிறப்புகள் பேசிட்டு இருக்காங்க.”

“அப்படின்னா இந்த மசோதா நிறைவேறினா முதல்வர் ஸ்டாலினுக்குத்தான் பெண்கள் நன்றி சொல்லணும்னு சொல்லு?”

“ஸ்டாலினுக்கு பெண்கள் நன்றி சொல்றாங்களோ இல்லையோ, பிடிஆரைக் கூப்பிட்டு முதல்வர் நன்றி சொல்லி இருக்கார்.”

“முதல்வர் எதுக்காக பிடிஆருக்கு நன்றி சொல்லணும்?”

“மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் எந்த சச்சரவும் இல்லாம வெற்றிகரமா நிறைவேற்றப்பட்டதுக்குதான். இந்த திட்டத்துல பணம் கொடுத்ததும், நிச்சயம் சில ஏரியாக்கள்ல அதிருப்தி ஏற்படும். அது ஆளுங்கட்சிக்கு எதிரா அமையும்னு எதிர்க்கட்சிக்காரங்க காத்திருந்தாங்க. ஆனா.. அப்படி எந்த அதிருப்தியும் ஏற்படல. இதுக்காக அதிகாரிங்களை முதல்வர் பாராட்டி இருக்கார். அப்ப அவங்க, ‘இந்த திட்டம் வெற்றிகரமா நிறைவேறினதுக்கு முன்னாள் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்தான் காரணம். அவர்தான் மத்திய அரசுகிட்ட பேசி தமிழ்நாட்ல யாரெல்லாம் வருமான வரி செலுத்துறாங்கன்ற விவரத்தை கேட்டு வாங்கித் தந்தார். அதுதான் பயனாளிகளை தேர்வு செய்ய நமக்குப் பெரிய அளவில உதவி செஞ்சது’ன்னு முதல்வர்கிட்ட சொல்லி இருக்காங்க. அவரும் உடனே பிடிஆர்கிட்ட போன்ல பேசி நன்றி சொல்லி இருக்கார்.”

“நாடாளுமன்ற கூட்டத் தொடர்ல சனாதனம் பத்தி ஏதும் பேசிடக் கூடாதுன்னு எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை சொல்லி இருக்காரே?”

“சனாதனம் பத்தின உதயநிதியோட பேச்சை இந்தியா கூட்டணியில இருக்கிற தலைவர்கள் ரசிக்கலை, இது வட மாநிலங்கள்ல தங்களுக்கு எதிரா திரும்பிடுமோன்னு அவங்க பயப்படறாங்க. அவங்க மட்டுமில்லாம திமுகல இருக்கற சீனியர் தலைவர்களும் இதை ரசிக்கல. இதன்மூலமா இந்துக்களுக்கு எதிரான கட்சிங்கிற இமேஜ் திமுக மேல விழுந்துடுமோன்னு அவங்க பயப்படறாங்க. இந்த கருத்தை முதல்வர் ஸ்டாலின்கிட்ட அவங்க சொல்லி இருக்காங்க. அதனாலதான் முதல்வர் இப்படி ஒரு அறிவுரையைச் சொல்லி இருக்கார்.”

“பாஜகவோட அதிமுக கூட்டணி கிடையாதுன்னு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சொல்லி இருக்காரே?”

“எல்லாத்துக்கும் காரணம் அண்ணாமலைதான். முன்னாடி ஜெயலலிதாவை ஊழல்வாதினு சொன்னார், இப்ப பேரறிஞர் அண்ணாவை பயந்து ஓடினார்னு சொல்லியிருக்கிறார். இதையெல்லாம் அதிமுகவினர் ரசிக்கல. அது மட்டுமில்லாம சி.வி.சண்முகம், ஜெயக்குமார், செல்லூர் ராஜூனு எல்லோரையும் கிண்டல் பண்றார். எடப்பாடி பழனிசாமியை மறைமுகமா கேலி பண்றார். ‘அண்ணா பேர்லதான் நாம கட்சி நடத்துறோம். ஆனா அந்த அண்ணாவைப் பத்தி விமர்சிக்கிற அண்ணாமலையை இனியும் பொறுத்துக்க முடியாது. அவர் மேல பாஜக தலைமையும் நடவடிக்கை எடுக்காம இருக்கு. இந்த நிலையில பாஜகவோட கூட்டணியைப் பத்தி நீங்க முடிவு எடுக்கவேண்டிய நேரம் நெருங்கிடுச்சு’ன்னு எடப்பாடிகிட்ட இரண்டாம்கட்ட தலைவர்கள் சொல்லி இருக்காங்க. அதுக்கு எடப்பாடி பழனிசாமி, ‘இப்போதைக்கு யாருடனும் கூட்டணி இல்லை. தேர்தல் நேரத்தில் கூட்டணியைப் பற்றி முடிவு செய்வோம்’னு சொல்லி இருக்கார். இதைத்தான் ஜெயக்குமார் செய்தியாளர்கள்கிட்ட சொல்லி இருக்கார். பாஜக கூட்டணி பத்தின முடிவை எடுக்கறதுக்கு முன்ன, கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி போன்ற மூத்த தலைவர்கள்கிட்ட எடப்பாடி ஆலோசனை நடத்தி இருக்காராம். அதுல எடுத்த முடிவுதான் இதுன்னு பேசிக்கறாங்க.?”

“பாஜக தரப்புல இதுக்கு என்ன ரியாக்‌ஷன்?”

“நாடாளுமன்றத் தேர்தல்ல பாஜக தன்னோட உண்மையான பலத்தை நிரூபிக்கணும்னு நினைக்கற பலரும் அதிமுகவோட கூட்டணி வேண்டாம்னுதான் நினைக்கறாங்க. இந்த விஷயத்துல அண்ணாமலைக்கு தங்களோட முழு ஆதரவை தெரிவிச்சிருக்காங்க. ஆனா நடாளுமன்றத் தேர்தல்ல ஜெயிச்சு மத்திய அமைச்சராக விரும்பின சில பாஜக தலைவர்களுக்கு ஜெயக்குமாரோட இந்த அறிவிப்பு கசப்பை கொடுத்திருக்கு. தேர்தல் வரைக்கும் அண்ணாமலை கொஞ்சம் அடக்கி வாசிச்சிருக்கலாம்னு அவங்க பேசிக்கறாங்க.”

“பாஜககிட்ட இருந்து அதிமுக கழண்டுகிட்ட அதே நேரத்துல திமுகவுக்கு பாமக திரும்பவும் தூது விட்டிருக்கறதா கேள்விப்பட்டேனே?”

“அப்படியும் ஒரு பேச்சு இருக்கு. ராமதாஸ்தான் திமுக தலைமையோட பேசிட்டு இருக்காராம். நாடாளுமன்ற தேர்தல்ல 5 சீட் வேணும், வன்னியர் இட ஒதுக்கீட்டை நிறைவேற்றணும்கிறது அவரோட 2 கோரிக்கைகள். அதுக்கு திமுக தரப்புல 2 தொகுதிகளுக்கு மேல தர முடியாது. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டைப் பத்தி பேசுவோம்னு சொல்லி இருக்காங்க.”

“திமுக கூட்டணிக்குள்ள பாமக வந்தா திருமாவளவன் டென்ஷன் ஆயிடுவாரே?”

“அவருக்கு இது தெரிஞ்சிருக்கு. உடனே ஸ்டாலின்கிட்ட போய் கேட்டிருக்கார். அதுக்கு ஸ்டாலின், பாரதிய ஜனதாவை எதிர்க்க சில சமயம் நாம தவிர்க்க முடியாத முடிவுகளை எடுக்கவேண்டி இருக்கும். அதை நீங்க அரசியல் ரீதியா புரிஞ்சுக்கணும்னு சொன்னாராம். திருமாவளவன் கிட்ட இருந்து அதுக்கு பதில் ஏதும் வரலை.”

“நாடாளுமான்ற தேர்தல்ல துரை வைகோ போட்டியிட மாட்டார்னு துரை வைகோ சொல்லி இருக்காரே?”

“அதுக்கு சின்னம்தான் காரணம். நாடாளுமன்ற தேர்தல்ல மதிமுக வேட்பாளர் உதயசூரியன் சின்னத்துலதான் போட்டியிடணும்னு திமுக கண்டிப்பா சொல்லிடுச்சாம். ஆனா துரை வைகோவுக்கு உதயசூரியன் சின்னத்துல போட்டியிட விருப்பம் இல்லை. அதனாலதான் அவர் இந்த தேர்தல்ல போட்டியிடலைன்னு வைகோ அறிவிச்சிருக்கார். போட்டியிட்டாலும்….” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...