No menu items!

Cool Lip – மாணவர்களை மயக்கும் போதை!

Cool Lip – மாணவர்களை மயக்கும் போதை!

பள்ளி மாணவர்களிடையே கூல் லிப் என்ற   போதைப் பொருள் பயன்பாடு உள்ளதா? பள்ளி அருகே உள்ள கடைகளில் கூல் லிப் விற்கப்படுகிறதா என கண்காணிக்கும்படி பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு முன்னாள் காவல்துறை அதிகாரி ராஜாராம் அளித்த பேட்டி இது.

கூல் லிப் என்பது என்ன? அது எந்தளவு தீங்கானது?

கூல் லிப் ஆபத்தான ஒரு போதைப் பொருள். இதை புகையிலையில் இருந்து தயார் செய்கிறார்கள். புகையிலை நிகோடின். அது ரத்தத்தில் கலக்கும் போது கிடைக்கும் போதைதான் இதன் அடிப்படை. கூல் லிப், இனிப்பு மற்றும் மிண்ட் சுவையுடன் குட்டி தலையணை போல பைகளில் கிடைக்கிறது. அதாவது, டீ தூள் பாக்கெட் போல் இருக்கும். பத்து பாக்கெட்கள் ஒரு கவரில் இருக்கும். உதட்டுக்கும் தாடை எலும்புக்கும் இடையில் கீழ் உதட்டில் இதை ஒதுக்கி வைத்துக்கொள்வார்கள். அது உமிழ் நீரில் பட்டு, அந்த உமிழ் நீர் உடலுக்குள் செல்லும்போது கொஞ்ச நேரம் ஜிவ்வென்று இருக்கும்.

பள்ளி செல்லும் வளர்இளம் பருவத்தினர் / டீன் ஏஜ் பருவத்தினர் இந்த போதை வஸ்து பழக்கத்துக்கு உள்ளாகி பிறகு அடிமைத்தனத்துக்கு  உள்ளாகும் நிலை இருப்பது தெரிய வந்துள்ளது. எனவேதான், அரசு எச்சரித்துள்ளது.

பள்ளிகளுக்கு அருகே உள்ள கடைகளில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்ய ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்கள் போதை பொருட்கள் பயன்படுத்துவதற்கான கரைகள் பற்களில் இருக்கிறதா என்பதை கண்டறிய வேண்டும் என்றும் ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளிகளில் மருத்துவ சோதனையின்போது மாணவர்களுக்கு போதைப்பொருள் பழக்கம் உள்ளதா என்பதை சோதிக்க வேண்டும், போதை பொருட்கள் பயன்படுத்துவதற்கான கறை மாணவர்களின் பற்களில் இருக்கிறதா என்பதை கண்டறிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதை தடை செய்வது குறித்தும் அரசு முடிவெடுப்பது நல்லது

‘தி இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோஷியல் எஜுகேஷன் (THE INSTITUTE OF SOCIAL EDUCATION) என்ற தனியார் அமைப்பு தமிழகத்தின் சென்னை, திருவண்ணாமலை நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நடத்திய ஆய்வில் பதின்பருவ பள்ளி மாணவர்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில் 9% பேர் தாங்கள் போதைப் பொருள்களை பயன்படுத்துவதை ஒப்புக்கொண்டுள்ளனர். இதில் 26% பேர் ஆல்கஹாலும், 23% பேர் கூல் லிப் பொருள்களையும், 22% பேர் புகையிலை பொருள்களையும் பயன்படுத்துகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புக்குள் படிக்கும் மாணவர்கள். எப்படி இவ்வளவு சிறு வயதிலேயே பள்ளி மாணவர்கள் போதைப்பழக்கத்துக்கு உள்ளாகிறார்கள்?

குறிப்பிட்ட பள்ளிகளில் படித்து கல்லூரி சென்ற மாணவர்கள் இந்த பழக்கத்துக்கு அடிமையாகி, அவர்கள் மூலமாக பள்ளி மாணவர்களிடையே பரவுகிறது. மாணவர்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாவதற்கு அப்பொருட்கள் சுலபமாக கிடைப்பதும் ஒரு காரணமாக இருக்கிறது.

ஏன் இதனை காவல்துறையால் தடுக்க முடியவில்லை?

தமிழ்நாட்டில் கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதைப்பொருளை ஒழிக்க தமிழக அரசும் காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, கல்வி நிலையங்களில் போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்க தீவிர முயற்சியில் அரசு இறங்கியுள்ளது. பள்ளி மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பயன்பாட்டை தடுக்க, அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. என்றாலும், போதைப் பொருட்கள் விற்பனை நெட்வொர்க்கை கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமாக இல்லைதான். காவல்துறையில் இருக்கும் சில கருப்பு ஆடுகளும் அரசியல்வாதிகள் தொடர்பும் இந்த நெட்வொர்க் தப்பிக்க காரணமாகிவிடுகின்றன. ஆனாலும், அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன. சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். அப்படி தமிழ்நாட்டில் இருக்கும் இலங்கை அகதிகள் கூட பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஆம், போதைப் பொருட்கள் விற்பனை நெட்வொர்க்கில் இலங்கை அகதி முகாம்கள் முக்கிய கேந்திரமாக உள்ளன.

போதைப் பொருட்கள் விற்பவர்கள் கைது செய்யப்பட்டாலும் கடுமையான  தண்டனை இல்லாததால் வெளியே வந்து மீண்டும் இந்த தொழிலில் ஈடுபடுகிறார்கள். சிங்கப்பூர் போல் தண்டனைகள் பலமாக்கப்படுவதுதான் இதனை ஒழிக்க வழி.

பள்ளி ஆசிரியர்களுக்கும் தலைமை ஆசிரியர்களுக்கும் ஏற்கெனவே பணிச்சுமை அதிகமாக இருக்கிறது. பள்ளி வளாகத்துக்குள் ஒழுங்கை ஏற்படுத்துவதே அவர்களுக்கு பெரும்பாடாக இருக்கிறது. இந்நிலையில், பள்ளிக்கு வெளியே கடைகளில் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுகிறதா என அவர்களைக் கண்காணிக்கச் சொல்வதால் பெரிய உபயோகம் இருக்காது. இது முழுக்க முழுக்க காவல்துறையின் பணி. அவர்கள்தான் பள்ளிக்கு அருகே அமைந்துள்ள கடைகளை மற்றும் போதை நெட்வொர்க்கை கண்காணிக்க வேண்டும். ஒரு கான்ஸ்டபிள் அரை மணி நேரம் பள்ளிகளுக்கு அருகே ரெய்டு நடத்துவதன் மூலம் செய்ய முடியும் வேலை இது என்று ஆசிரியர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. இதனை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

காவல்துறையினர் வழக்கம் போல் கண்காணித்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு தெரியாமல் நடைபெறுவதை தடுக்கத்தான் ஆசிரியர்களுக்கு வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் இதனை பணிச் சுமையாக பார்க்கக்கூடாது. ஒரு சேவையாக நினைத்து செய்ய வேண்டும். மேலும், மாணவர்களிடம் இருந்து காவல்துறையினர் தகவல்களை பெறுவதைவிட ஆசிரியர்கள் சுலபமாக பெற முடியும். எனவேதான், ஆசிரியர்களை கண்காணிக்கும்படி அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

ஆசிரியர்கள் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள்?

பள்ளிகளில், கல்லூரிகளில் போதைப் பொருட்கள் மற்றும் நன்னடத்தை பற்றிய கருத்தரங்குகள் தொடர்ந்து நடத்துவது நல்ல பலனைத் தரக்கூடும். வாரத்தின் முதல் நாள் காவல்துறை ஆய்வாளர், உளவியல் நிபுணரை அழைத்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்கலாம். தேவையான மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்க வேண்டும். போதைப் பொருள் இருக்கும் கடைகள் குறித்து காவல் நிலையங்களுக்கு புகார் தெரிவிக்க வேண்டும்.

பெற்றோர்களுக்கு நீங்கள் கூறும் ஆலோசனை?

நம் வீட்டில் கல்வி பயிலச் செல்லும் செல்வங்களின் புத்தகப் பைகளில் கால்சட்டை, கை சட்டைகளின் பைகளில் இது போன்ற விசயங்கள் கிடைத்தால் இது வரை சாக்லெட் என்று நினைத்திருக்கக் கூடும். இப்போது தெரிந்துவிட்டிருக்கும். எனவே, அடிக்கடி குழந்தைகளின் உடமைகளை, அவர்கள் நடத்தைகளை கண்காணிக்க வேண்டும்.

போதைப் பழக்கத்துக்கு ஆளாகிவிட்ட ஒரு மாணவருக்கு அன்பான அனுசரணையான கவுன்சிலிங் தேவை. அன்பினால் ஆகாதது எதுவுமில்லை. கண்டிப்பாக அடி உதை உதவாது. அது நம் மீது ஒவ்வாமையை மட்டுமே உருவாக்கும். குடும்ப நல மருத்துவரிடம்/ குழந்தைகள் நல மருத்துவரிடம்  அழைத்துச் சென்று ஒரு சின்ன ஹெல்த் கவுன்சிலிங் கொடுக்கலாம். தேவைப்பட்டால் கட்டாயம் மன நல மருத்துவரின் அறிவுரை மற்றும் கவுன்சிலிங்குக்கு அழைத்து செல்லலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...