“சனாதனத்தை ஒழிப்போம்னு சொல்லிட்டு இப்ப நீங்களே அமாவாசையெல்லாம் பார்க்கலாமான்னு கேட்கறாங்க” என்றபடி ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.
“யார் கேட்கறாங்க? எதுக்கு கேட்கறாங்க? யார்கிட்ட கேட்கறாங்கன்னு விளக்கமா சொன்னாதானே தெரியும்?”
“மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதல்வர் செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கி வச்சாலும், பெரும்பாலான குடும்பத் தலைவிகளுக்கு 14-ம் தேதியே வங்கி கணக்கில் பணம் போட்டுட்டாங்க. ‘14-ம் தேதி அமாவாசை. அன்னைக்கு பெண்களுக்கு பணம் கொடுத்தா நல்லது’ன்னு சிஎம்க்கு நெருக்கமானவர்கள் அட்வைஸ் பண்ணதால அந்த திட்டத்தை அன்னைக்கு செயல்படுத்தினதா சொல்றாங்க”
“என்னதான் பெரியார்னு பேசினாலும் கடைசில அமாவாசைல வந்து நிக்கிறாங்க…காமெடியா இருக்கு”
“காமெடியா இருந்தாலும், பெண்கள் மத்தியில இந்த திட்டத்தால திமுகவுக்கு செல்வாங்கு உயர்ந்திருக்கு. திமுகவோட ஐடி விங், இந்த திட்டத்தால பலனடைஞ்ச குடும்பத் தலைவிகளை பேட்டி எடுத்து, அந்த வீடியோக்களை சமூக வலைதளங்கள்ல வைரல் ஆக்கிட்டு வர்றாங்க. திமுகவோட வாக்கு வங்கியை இந்த திட்டம் நிச்சயம் அதிகரிக்கும்னு முதல்வர் ஸ்டாலின் உறுதியா நம்பறாரு”
”அப்போ நாடாளுமன்றத் தேர்தல்ல திமுகவுக்கு நிச்சய வெற்றினு சொல்ற…இதுக்கு எதிர்க் கட்சிகள் கவுண்டர் என்ன? ஏதாவது பிளான் வச்சிருக்காங்களா?”
“ரெண்டு பிளான் வச்சிருக்காங்க. ஒண்ணு எல்லா பெண்களுக்கும் கொடுக்கணும் பேசுறது. அப்புறம் கட்சிக்காரப் பெண்களுக்கு கொடுத்திருக்காங்கனு கிளப்பறதுனு வியூகம் போடுறாங்க”
“ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் பிரச்சினை கொடுக்காட்டியும் பிரச்சினை. சரி, அமலாக்கத் துறை தமிழ்நாட்டை விட்டு வெளியே போகாம இங்கேயே இருக்கு போல…மணல் குவாரி மற்றும் கனிம வள ஒப்பந்தக்காரர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிங்க ரெய்ட் நட்த்தி இருக்காங்களே?”
“திமுகவுக்கு வர்ற பணத்தை நிறுத்தறதுதான் இந்த ரெய்டோட முக்கிய நோக்கம். முன்னாடி டாஸ்மாக் மூலமா திமுகவுக்கு நிதி வந்துட்டு இருந்துச்சு. ஆனா இப்ப அது குறைஞ்சுடுச்சு. இந்த நேரத்துல கனிம வளத்துறை மூலமாத்தான் அதிக பணம் வந்திட்டுருக்குன்னு தெரிஞ்சு, அதுல மூக்கை நுழைச்சிருக்காங்க. தமிழக அரசுக்கு வரவேண்டிய 3,500 கோடி ரூபாய் முதல் 4000 கோடி ரூபாய் வரை அரசின் கஜானாவுக்கு போகாமல் வேற எங்கயோ போய்ட்டதை கண்டு பிடிச்சிருக்காங்க.”
“அப்படியா?”
“கிட்டத்தட்ட 4000 கோடி ரூபாய் வரணுமாம் ஆனா, 18 கோடி ரூபாய்தான் கணக்கு காட்டுறாங்க. இது மாதிரியோட ரெய்டோட நோக்கம் திமுகவுக்கு வர்ற பணத்தை கட் பண்றது மட்டுமில்ல, முதல் குடும்பத்தை எப்படியாவது சிக்க வைக்கிறதுதான். அதுக்குதான் அத்தனை முயற்சியும் நடந்துக்கிட்டு இருக்கு. வலுவான ஆதாரங்கள் இல்லாம கிட்ட போகக் கூடாதுனு டெல்லி தலைமை சொல்லியிருக்கிறதுனால ஆதாரங்களுக்காக ஒவ்வொரு இடமா போய்கிட்டு இருக்காங்க?”
”மூத்த அமைச்சர் துரைமுருகனை கூப்ட்டு முதல்வர் சத்தம் போட்டதாக ஒரு செய்தி வந்துச்சே?”
“ஆமா அப்படி ஒரு நியூஸ் துரைமுருகனை பிடிக்காதவங்க கிளப்பிவிட்டாங்க. ஆனா, அப்படியெல்லாம் இல்லை. கனிம வளத்துறைக்கு அவர் அமைச்சரா இருந்தாலும் வருமான விஷயங்கள்ல எல்லாம் அவருக்கு சம்பந்தம் இல்லைன்னு அமலாக்கத் துறைக்கு தெரிஞ்சிருக்கு. ‘கனிமவளத் துறைக்கு அமைச்சர் நான்தான். ஆனா கொடுக்கல் வாங்கல் விஷயமெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது’ன்னு துரைமுருகனும் ஏற்கெனவே வெளிப்படையா பேசி இருக்கார். அதனாலதான் அமலாக்கத்துறை சோதனை பற்றி செய்தியாளர்கள் கேட்டதுக்கு, ‘அப்படியா அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது’ன்னு அவர் நக்கலா சொல்லி இருக்கார். இதையெல்லாம் முதல்வரும் கவனிச்சுட்டுத்தான் இருக்கிறார். சத்தம் போட்டதா வர்ற செய்தியை பொய்யாக்கிறதுக்குதான் கிறிஸ்துவ போதகர் பால் தினகரன் மகள் திருமணத்துக்கு துரைமுருகனையும் கூடவே கூட்டிட்டு வந்தார் ஸ்டாலின்”
“நாடாளுமன்றத் தேர்தலுக்காக சபரீசன் களத்துல இறங்கி இருக்காராமே?”
“ஆமாம் அவரும் ஒரு தேர்தல் வியூக நிபுணரை வச்சுக்கிட்டு தேர்தலுக்கான வேலைகளைத் தொடங்கி இருக்கார். கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகளை கொடுக்கறது, தேர்தல் அறிக்கையில என்னென்ன திட்டமெல்லாம் இருக்கணும்னு அந்த நிபுணரோட அவர் ஆலோசனை நடத்திட்டு வர்றார். இப்ப இருக்கற எம்பிக்களோட செயல்பாட்டுல அவர் திருப்தியா இல்லை. இதுபத்தி முதல்வர்கிட்ட பேசின அவர், தற்போதைய எம்பிக்கள் பலருக்கு நாடாளுமன்றத் தேர்தல்ல சீட் கொடுக்க கூடாதுன்னு வலியுறுத்தி இருக்கார். உதயநிதிகூட அவர் அட்வைஸ்படிதான் இப்ப செயல்பட்டு வர்றதா சொல்றாங்க.”
“காங்கிரஸ் கட்சிக்கு திமுக 5 சீட்தான் கொடுக்கும்னு ஒரு செய்தி வந்துச்சே?”
“அது செய்தி இல்லை வதந்தி. திமுகவைப் பொறுத்தவரைக்கும் இப்போதைக்கு காங்கிரஸ் மேல மட்டும்தான் பாசமா இருக்காங்க. அவங்க மட்டும்தான் பாஜகவை எதிர்த்து பகிரங்கமா பேசறாங்கன்னு முதல்வர் நினைக்கறார். கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் மாதிரி கட்சிகள் கூட்டணியில இருந்துட்டே அப்பப்ப அரசை எதிர்த்து போராட்டங்கள்ல ஈடுபடறதை அவர் ரசிக்கல. இந்த சூழல்ல தேர்தல் தொகுதிப் பங்கீட்ல காங்கிரஸ் கட்சியை மட்டும் திருப்திப்படுத்தினா போதும்னு முதல்வர் நினைக்கறார். அதனால தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரியை தொடர்புகொண்ட முதல்வர் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான தொகுதிகளோட லிஸ்டைக் கொடுக்கச் சொல்லி கேட்டிருக்கார். இதைத்தான் அழகிரியோட எதிர்கோஷ்டிக்காரங்க ‘காங்கிரஸ் கட்சிக்கு 5 சீட்தான் தரமுடியும்னு முதல்வர் அழகிரிகிட்ட சொல்லி இருக்கிறார்’னு வதந்தியா கிளப்பி விட்டிருக்காங்க. இதுபத்தி ஒரு நிருபர் கேட்டதுக்கு கடுமையா மறுப்பு தெரிவிச்சிருக்கார் அழகிரி.”
’எடப்பாடி- அமித் ஷா சந்திப்பு பத்தி ஏதாவது நியூஸ் இருக்கா?”
“பொதுவா எடப்பாடி டெல்லிக்கு போகும்போது மொழிப் பிரச்சினை காரணமா, வேலுமணி கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார்னு ஒரு டீமையே கூட்டிட்டு போவார். யாரைச் சந்திக்கப் போனாலும் அந்த குழுவும் அவரோட இருக்கும். ஆனா இந்த முறை எடப்பாடியும், அமித் ஷாவும் சந்திச்சப்ப ஒரே ஒரு மொழிபெயர்ப்பாளர் மட்டும்தான் கூட இருந்திருக்கார். அமித் ஷா கிட்ட பேசும்போது நாடாளுமன்றத் தேர்தல்ல பாஜகவுக்கு 10 சீட்டை ஒதுக்கி 30 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும்னு எடப்பாடி சொல்லி இருக்கார். புதிய தமிழகம், இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக் கட்சிக்கு பாஜகவே தொகுதியை ஒதிக்கிடணும். அந்த கட்சிகள் தாமரை சின்னத்துலயே போட்டியிடட்டும்னு எடப்பாடி சொல்லி இருக்கார். அதுக்கு அமித் ஷா அதையெல்லாம் தேர்தல் நேரத்துல பாத்துக்கலாம்னு சொன்னாராம். பாமக தேமுதிக கட்சிகளோட நிலைப்பாடு என்னன்னு தெரியாத்தால தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை திரும்பவும் நடக்கும்னு சொல்றாங்க.”
”எடப்பாடி அங்க அமித்ஷாவோட பேசிக்கிட்டு இருக்கிறார். ஆனா இங்க அண்ணாமலை மன்னிப்பு கேக்கணும்னு ஜெயக்குமார் சொல்லியிருக்கிறாரே?”
“ஆமாம் அண்ணா பத்தி அண்ணாமலை பேசுனது அதிமுகவுல எரிச்சலைக் கிளப்பியிருக்கு. உதயநிதியை கண்டித்து நடத்துன ஆர்ப்பாட்டத்துல பேசிய அண்ணாமலை, முத்துராமலிங்கத் தேவரிடம் அண்ணா மன்னிப்பு கேட்டு ஓடி வந்த கும்பலில் ஒருவர்னு சொன்னார். அது மட்டுமில்ல அண்ணாவை அண்ணாதுரை அண்ணாதுரைனு திருப்பித் திருப்பி சொன்னார். இதெல்லாம் அண்ணா பேர்ல கட்சி நடத்துற அதிமுகவை டென்ஷனாக்கியிருக்கு. அண்ணாமலையை கூட வச்சுக்கிட்டு அண்ணா திமுகவுக்கு எப்படி வாக்கு கேக்குறதுனு கட்சிக்காரங்க கேக்குறாங்க. அதோட ரியாக்ஷன் தான் அண்ணாமலையை ஜெயக்குமார் எச்சரிச்ச மேட்டர்”