நேற்று முதல் சமூக வலைதளங்களில் ‘ஹாட் டாபிக்’ ஆர்.பி.வி.எஸ். மணியன் கைதுதான். அம்பேத்கர், திருவள்ளுவர், பட்டியல் சமூகத்தினர் குறித்து அவமதிக்கும் வகையிலும் அவதூறாகவும் பேசியதாக ஆர்.பி.வி.எஸ். மணியனை சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
யார் இந்த ஆர்.பி.வி.எஸ். மணியன்?
ஆர்.பி.வி.எஸ். மணியனின் முழுப் பெயர் ஆர். பாலவேங்கட சுப்பிரமணியன். திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் படித்த சுப்பிரமணியன், படிப்பை முடித்த பிறகு, தமிழ்நாடு அரசின் வணிக வரித்துறையில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில், கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைக்கும் பணி நடைபெற்றது. அதற்காக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் நன்கொடை திரட்டப்பட்டது. தான் பார்த்து வந்த வேலையில் இருந்து விலகிய மணியன், விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகியிருந்தன. தொடர்ந்து 1970களில் விவேகானந்தா கேந்திராவின் சார்பில் மாணவர்கள் மத்தியில் பேசி நன்கொடை வசூலிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். 1980ஆம் ஆண்டுவாக்கில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பில் இணைந்தார். பின்னர் அந்த அமைப்பின் மாநில துணைத் தலைவரானார்.
‘திருக்குறள் ஒரு வைதிக ஹிந்து சமய நூலே’ உட்பட பல நூல்களை எழுதியுள்ளார். விவேக் பாரதி அமைப்பை நிறுவியவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏன் கைது?
ஆர்.பி.வி.எஸ். மணியன் கடந்த 11-09-23 (திங்கள் கிழமை) அன்று ‘பாரதியும் விவேகானந்தரும்’ என்ற தலைப்பில் சென்னை தியாகராய நகரில் உள்ள பாரதிய வித்யா பவனில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார். அப்போது, சனாதன தர்மத்தை ஆதரித்துப் பேசிய மணியன், சர்ச்சைக்குரிய விதத்தில் திருவள்ளுவர் குறித்தும் பேசினார்.
திருவள்ளுவர் என்ற பெயரை யார் வைத்தது எனக் கேள்வி எழுப்பிய மணியன், திருவள்ளுவர் தான் திருக்குறளை எழுதினார் என்பதற்கு என்ன ஆதாரம் என்றும் கேட்டார். திருவள்ளுவர் என்பவர் உண்மையில் இருந்ததே இல்லை என்றும் கூறினார்.
“திருவள்ளுவர் இருந்தார் எனச் சொல்வது கற்பனை. அவர்தான் திருக்குறளை எழுதினார் எனச் சொல்வது அதைவிடக் கற்பனை. ராமர் பிறந்த நட்சத்திரம் தெரியும், ஆனால் வள்ளுவர் என்று பிறந்தார், அவரது பெற்றோர்கள் யார் எனத் தெரியுமா” என்றார்.
தொடர்ந்து, “கிறிஸ்தவ பள்ளிகளுக்கு பிள்ளைகளை அனுப்பக்கூடாது என விவேகானந்தர் தெரிவித்துள்ளார். கிறிஸ்தவ பள்ளிகளுக்கு அனுப்பாதே என நானும் கூறியுள்ளேன், விவேகானந்தரும் சொன்னார், பாரதியாரும் சொன்னார். நமது பிள்ளைகளை கிறிஸ்தவ பள்ளிகளுக்கு அனுப்பக்கூடாது. கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் இந்தியாவில் வாழத் தகுதியற்றவர்கள்.
ராமனை ஏற்றுக்கொண்டால் ஒழிய ஒரு கிறிஸ்தவன் இந்த நாட்டில் வாழ்வதற்கு அருகதை இல்லாதவன். முஸ்லிமும் அருகதை இல்லாதவன்.
ராகுல் காந்தி கிறிஸ்தவர், ஐரோப்பியர். அவருக்கும் காங்கிரசுக்கும் சம்பந்தம் இல்லை” என்றார்.
கிறித்தவ பள்ளிகளுக்கு பிள்ளைகளை அனுப்பக்கூடாது என்று கூறும் மணியன், தனது கல்லூரி படிப்பை திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில்தான் முடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், “அரசியல் சாசன சட்டத்தை எழுதியது அம்பேத்கரே இல்லை. அம்பேதகர் எழுதினார் என்று கூறுபவர்களுக்கு அறிவு இல்லை. அரசியல் சாசன சட்டம் தயாரிப்பதற்கான குழுவின் தலைவர் ராஜேந்திர பிரசாத். அம்பேத்கர் அந்தக் குழுவில் வரைவுகளை சரி பார்க்கும் கிளார்க் பணியை மட்டுமே செய்தார்.
அம்பேத்கர், தன்னுடைய மூளையில் இருந்து எழுதியதாக எழுதவே இல்லை. எல்லாரும் பேசிடுவாங்க… அது எல்லாத்தையும் ஒரு ஸ்டெனோகிராஃபர் எழுதுவான். தட்டச்சு செய்வார், ஸ்டெனோ கிராஃபர் கரெக்டா அடிச்சிருக்காரா அடிக்கலையா என்று சரி பார்ப்பார். அந்த வேலைதான் அம்பேத்கருக்கு,” என்றும் மணியன் பேசினார்.
மணியன் தனது பேச்சின்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனையும் தாக்கிப் பேசியிருந்தார். திருமாவளவன் பறையர் என்றும் அம்பேத்கர் சக்கிலியர் என்றும் கூறிய மணியன், “சக்கிலியரும் பறையரும் திருமணம் செய்துகொள்வார்களா? பறையரும் பள்ளர்களும் திருமணம் செய்துகொள்வார்களா?” எனக் கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில், மணியனின் இந்த பேச்சு அடுத்த நாளில் இருந்து சமூக ஊடகங்களில் வைரலானது. பலர் அவரைக் கைதுசெய்ய வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தனர். மணியனின் பேச்சுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்தார்.
இதனிடையே, மணியனின் இந்தப் பேச்சு, பட்டியல் சமூகத்தினரை அவமதிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் மாவட்டச் செயலாளர் ரா. செல்வம் என்பவர் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், நேற்று (14-09-23) அதிகாலையில் சென்னை மாம்பலம் காவல்துறையினர், மாம்பலம் ராஜாம்பால் தெருவில் உள்ள அவரது வீட்டிலிருந்து அவரைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
மணியன் மீது 153, 153(A), 505(1)(B), 505 (2), பழங்குடியினர்/ஒடுக்கப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 3 உள்பட 8 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட மணியன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது, தான் பேசியது தவறாகப் புரிந்துகொள்ளப் பட்டிருப்பதாகவும் தனக்கு உடல்நலக் கோளாறுகள் இருப்பதால், தன்னை தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டுமெனறும் கோரினார். அதுகுறித்து பரிசீலிப்பதாகக் கூறிய நீதிபதி, அவரை செப்டம்பர் 27ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்டார்.
முன்னதாக, “வண்ணான் பிள்ளை துணிதான் துவைக்கணும், அப்பட்டன் பிள்ளை முடி வெட்டக் கற்றுக்கொண்டால் போதும். பிராமணர்களுக்கு தொண்டு செய்யத்தான் எல்லா சாதிகளும். உங்களுக்கு ஏண்டா பிஏ, எம்.ஏ. படிப்பு” என்று மணியன் பேசியிருந்த வீடியோவும் வைரலாகி சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.