தேசிய அணிகளுக்கான வீர்ர்களை எப்போதும் திறமையின் அடிப்படையில்தான் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் இதற்கு நேர்மாறாக ஆசிய கோப்பைக்கான கால்பந்து போட்டியில் ஆடிய வீர்ர்களை, அவர்களின் ஜாதகத்தை வைத்து தேர்ந்தெடுத்திருக்கிறார் இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளரான இகோர் ஸ்டிமாக். பத்திரிகைகளில் இந்த செய்தி வெளியான நிலையில், இப்போது இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆசிய கோப்பைக்கான கால்பந்து போட்டியின் தகுதிச் சுற்று ஆட்டத்தில் கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் 9-ம் தேதி இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் மோதின. இந்த போட்டியில் ஆடுவதற்கான வீர்ர்களை, அவர்களின் திறமையின் அடிப்படையில் அல்லாமல், அவர்களின் ஜாதகத்தை வைத்து தேர்ந்தெடுத்திருக்கிறார் அணியின் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமேக். இது தொடர்பாக ஸ்டிமேக்குக்கும், இந்திய கால்பந்து சம்மேளனத்தின் மூத்த அதிகாரி ஒருவரால் அவருக்கு அறிமுகம் செய்யப்பட்ட பூபேஷ் சர்மா என்ற ஜோதிடருக்கும் இடையே நடைபெற்ற ஒரு உரையாடலை ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் வெளியிட்டுள்ளது. அதுதான் இப்போது புயலைக் கிளப்பி இருக்கிறது.
முதலில் அந்த உரையாடலை பார்ப்போம்…
பூபேஷ் சர்மா: நான் என்றைக்கு உங்களை வந்து சந்திக்க வேண்டும்? 6-ம் தேதியா அல்லது 7-ம் தேதியா?
ஸ்டிமேக்: போட்டிக்கு 2 நாட்கள் முன்பு. அதாவது 6-ம் தேதி சந்தித்தால் நன்றாக இருக்கும்.
பூபேஷ் சர்மா: சரி நான் 6-ம் தேதி உங்களை சந்திக்கிறேன்.
இவ்வாறாக அந்த உரையாடல் செல்கிறது. இதன்பிறகு பூபேஷ் சர்மா தன்னை சந்தித்தபோது, போட்டியில் தான் களம் இறக்கவுள்ள வீர்ர்களின் பெயர்களை அவரிடம் ஒரு தாளில் எழுதிக் கொடுத்திருக்கிறார் ஸ்டிமேக். அந்த வீர்ர்களின் பெயருக்கு எதிரே, ‘நன்று’, இவருக்கு போட்டி நடக்கும் நாள் நன்றாக உள்ளது’, ‘இவருக்கு அன்று நேரம் சரியில்லை’, ‘இவர் நன்றாக ஆடுவார். ஆனால் அதீத தன்னம்பிக்கையை குறைத்துக்கொள்ள வேண்டும்’ என்று ஒவ்வொரு வீர்ரின் பெயருக்கு பின்னும் அவர்களின் ஜோதிடத்தைப் பார்த்து சில குறிப்புகளை பூபேஷ் சர்மா எழுதியிருக்கிறார். இதன் அடிப்படையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கு வீர்ர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதில் ஜோசியர் ஓகே சொல்லாததால் இந்தியாவின் முக்கிய வீர்ர்கள் இருவர் அந்த போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை. இந்த போட்டியில் இந்தியா 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. இந்த காலகட்டத்தில் மட்டும் இந்தியா 4 சர்வதேச கால்பந்து போட்டிகளில் ஆடியுள்ளன. இது தொடர்பாக ஸ்டிமேக்குக்கும், ஜோதிடருக்கும் இடையே சுமார் 100 தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளன.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்தியுள்ள புலனாய்வில், இந்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து, கால்பந்து விளையாட்டில் தேசிய அளவில் திறமைக்கு மதிப்பில்லையா? ஜோதிடத்துக்குதான் மதிப்பா என்ற கேள்வி எழுந்துள்ளது. அத்துடன் கால்பந்து ஆட்டத்துடன் சற்றும் தொடர்பில்லாத ஒரு நபர் அணியை தேர்ந்தெடுத்து வந்ததும் தெரியவந்துள்ளது. இது கால்பந்து உலகில் பெரும் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்டிமாக்குக்கு ஜோதிடரை தான் அறிமுகப்படுத்தியதாக இந்திய கால்பந்து சம்மேளனத்தின் முன்னாள் செகரட்டரி ஜெனரலான குஷால் தாஸ் ஒப்புக்கொண்டுள்ளார். “சர்மாவை நான் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தேன். பல நிறுவன்ங்களுக்கும், பாலிவுட் நட்சத்திரங்களுக்கும் சர்மா ஜோதிட பலன்களை தெரிவித்துக்கொண்டிருந்தார். அது அவர்களுக்கு சாதகமான விஷயங்களைச் செய்ததை கேள்விப்பட்டேன். இந்த நேரத்தில் இந்திய அணி, ஆசிய கோப்பைக்கு தகுதி பெற வேண்டுமே என்ற கவலையில் இருந்த எனக்கு, இவரைப் பயன்படுத்திக்கொண்டால் என்ன என்ற எண்ணம் ஏற்பட்டது. நான் கால்பந்து பயிற்சியாளர் ஸ்டிமாக்கிடம் இதைச் சொல்ல அவரும் ஒப்புக்கொண்டார்” என்று கூறியுள்ளார் குஷால் தாஸ். அந்த ஜோதிடருக்கு 2 மாதங்களுக்கு 12 முதல் 15 லட்சம் ரூபாய் வரை ஊதியம் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்கு கூடுதலாக ஒரு துணைப் பயிற்சியாளர் வேண்டும் என்ற கோரிக்கை பல மாதங்களாக உள்ளது. ஆனால் அப்படி ஒரு பயிற்சியாளரை நியமிக்க சில லட்சங்கள் ஆகும் என்பதால் கால்பந்து சம்மேளனம் அதை ஏற்கவில்லை. ஒரு பயிற்சியாளருக்காக சில லட்சங்களை இழக்க விரும்பாத கால்பந்து சம்மேளனம் கால்பந்து ஆட்டதுடன் கொஞ்சமும் சம்மந்தம் இல்லாத ஒரு ஜோதிடருக்கு 2 மாதங்களில் 15 லட்சம் ரூபாயை அள்ளிக் கொடுத்திருக்கிறது.