சென்னை பனையூரில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி நேற்று (10-09-23) நடைபெற்றது. இதற்கான பொறுப்பு சென்னையைச் சேர்ந்த ஏசிடிசி என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்த இசை நிகழ்ச்சியில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய பலரும் உள்ளே கூட செல்ல முடியாமல் வெளியிலேயே நிறுத்தப்பட்டனர். இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோல்டு, பிளாட்டினம், சில்வர் என டிக்கெட் வாங்கிய பலரும் இசை நிகழ்ச்சியை பார்க்காமல் வீடு திரும்பியதாக குற்றம்சாட்டியுள்ளனர். கூட்டம் கட்டுக்கடங்காமல் நிரம்பி வழிந்ததால் பலருக்கும் மயக்கம், மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களையும் விமர்சித்து பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இது தொடர்பாக ‘எக்ஸ்’ தள பக்கத்தில் பதிவிட்டுள்ள ஏ.ஆர். ரஹ்மான், ‘டிக்கெட் வாங்கியும் சில துரதிர்ஷ்டவசமான சூழல்களால் உள்ளே நுழைய முடியாதவர்கள், தயவு செய்து உங்கள் டிக்கெட் பிரதியை [email protected] என்ற மெயில் ஐடிக்கு உங்களுடைய குறைகளை குறிப்பிட்டு அனுப்பவும். எங்களுடைய குழுவினர் முடிந்தவரை உடனடியாக பதிலளிப்பார்கள்” என்று கூறியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏசிடிசி நிறுவனம் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாதவர்களிடம் நாங்கள் மனதார மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம். இதற்கான முழு பொறுப்பையும் நாங்களே ஏற்கிறோம். நாங்கள் உங்களோடு இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.
ஆனால், நிகழ்ச்சியில் கலந்துகொள்ளமுடியாமல் போனவர்களுக்கு டிக்கெட் தொகை திருப்பியளிக்கப்படுமா என்பது குறித்து ஏசிடிசி நிறுவனமும் ஏ.ஆர். ரஹ்மானும் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1.06 கோடி பேருக்கு மகளிர் உரிமைத்தொகை: முதமைமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
தமிழ்நாடு முதமைமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (11.9.2023) முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து இக்கூட்டத்தில் முதமைமைச்சர் ஆற்றிய உரையின் போது, “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் தொடக்க விழாவானது வருகிற 15ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெற இருக்கிறது. அன்றைய தினமே அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அமைச்சர்கள் முன்னிலையிலும் நடைபெற இருக்கிறது. தமிழ்நாடு அரசின் மிகப்பெரிய திட்டம் என்றால் இதுதான். ஒரே நேரத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் ஆயிரம் ரூபாயை மாதாமாதம் ஆண்டு தோறும் பெறப் போகிறார்கள்.
தகுதி வாய்ந்த பெண்களுக்கு உரிமைத் தொகை அவர்களது வங்கிக் கணக்கில் வரும் செப்டம்பர் 15 முதல் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ளோம். இத்தகைய தகுதி பெற்ற குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் தோறும் வங்கிகளில் அவர்களது கணக்கில் உரிமைத் தொகை வரவு வைக்கப்படும். இந்த திட்டத்தில் இணைந்துகொள்ள 1 கோடியே 83 லட்சம் விண்ணப்பங்கள் அரசுக்கு வந்துள்ளன. தகுதியுள்ளவர்கள் என தேர்ந்தெடுத்துள்ளது 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர். ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யும் மாபெரும் திட்டம் இது” என்று கூறினார்.
மனித உரிமைகள், பத்திரிகை சுதந்திரம் குறித்து மோடியுடன் பேசினேன்: ஜோ பைடன் பேட்டி
வியட்நாம் தலைநகரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “ஜி 20 உச்சி மாநாட்டை நடத்திய இந்திய பிரதமர் மோடியின் தலைமை மற்றும் விருந்தோம்பலுக்காக நான் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடி வெள்ளை மாளிகை வந்ததைத் தொடர்ந்து இருநாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தோம். எப்போதும் போல, மனித உரிமைகளை மதிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும், வளமான இந்தியாவை கட்டியெழுப்புவதில் பொதுமக்கள் மற்றும் சுதந்திரமான ஊடகங்களுக்கு உள்ள முக்கிய பங்கை நான் மோடியிடம் எடுத்துக் கூறினேன்” என்று கூறினார்.
5 மாநில தேர்தல்களை ஒத்திப்போடுவதே ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ விவகாரத்தின் நோக்கம்: பிரஷாந்த் பூஷன்
உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும் அரசியல் ஆர்வலருமான பிரஷாந்த் பூஷன், புவனேஷ்வரில் இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, “இந்தியா போன்ற நாடாளுமன்ற ஜனநாயகம் உள்ள நாட்டில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பதை நடைமுறைப்படுத்த முடியாது. ஏனென்றால், நமது நடைமுறையில் ஓர் அரசு அதன் பெரும்பான்மையை இழக்கும்போது இடையிலேயே கவிழலாம்; அதன்பின்னர் புதிய அரசு பதவி ஏற்கும். இந்த நிலையில், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பது நடைமுறைப்படுத்தப்படும்போது இதுபோன்ற நேரங்களில் (இடையில் அரசு கவிழும்போது) குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்படும். இது ஜனநாயகத்துக்கு எதிரானது. அதாவது, நாம் ஜனநாயக அமைப்பில் இருந்து குடியரசுத் தலைவர் ஆட்சி முறைக்கு மாறுகிறோம். இது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு முற்றிலும் எதிரானது.
மேலும், மாநிலங்களவையில் இந்த அரசுக்கு பெரும்பான்மை இல்லை. அரசுக்கு இந்த உண்மைகள் எல்லாம் தெரியும் என்றாலும், இந்த ஆண்டு இறுதியில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்களை தள்ளிப்போடவே அரசு இந்த பலூனை (ஒரே நாடு ஒரே தேர்தல்) ஊதிப் பறக்கவிடுகிறது. இந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் பாஜக தோல்வியடைந்து விடும் என்ற பயம் அவர்களுக்கு வந்துவிட்டது. அதனால் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற பெயரில் அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் வரை ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களை ஒத்திப்போட முயல்கிறார்கள். அந்த மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்படும்” என்று தெரிவித்தார்.